22) ரமளானில் இரவுத் தொழுகை
ரமளானில் இரவுத் தொழுகை
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குவாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்:(புகாரி: 37),(முஸ்லிம்: 1391)
விளக்கம்:
இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதுடன் அந்த மாதத்தின் இரவு நேரங்களில் நின்று வணங்குவது நாம் செய்த முந்தைய சிறு பாவங்களை மன்னிப்பதற்கு உதவும் ரமளான் மாதம் முழுவதும் இறைவனின் அருள் நிறைந்த மாதமாகும் அந்த மாதத்தில் அருள் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 1957) இந்த மாதத்தில் அதிகமதிகம் நன்மையான காரியங்களைச் செய்து கூடுதல் நன்மைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இறைவனுக்குச் செய்யும் கடமைகளில் தொழுகை முதலிடத்தை பெறுகிறது. அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். (முஸ்லிம்: 2157) எனவே ரமளான் மாதத்தில் இரவு நோரத் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.