22) பேச்சின் ஒழுங்குகள்
பேச்சின் ஒழுங்குகள்
நேர்மையாகப் பேசுதல்
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
அழகியவற்றை பேச வேண்டும்
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
வீணானவற்றை பேசுவதை தவிர்பீர்
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ”எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்” எனவும் கூறுகின்றனர்.
அவர்கள் வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
தூய்மையான பேச்சுக்கள் அல்லாஹ்விடம்
நற்கூலியை பெற்றுத் தரும்
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.
பேசும் போது குரலை தாழ்த்தி
பேச வேண்டும்
”நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்”
நல்ல வார்த்தைகள் தர்மம் செய்த
நன்மைகளைப் பெற்றுத் தரும்
ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
குறைவாக பேசுவது ஈமானின் அம்சமாகும்
அதிகமாகப் பேசுவது நயவஞ்சகத்தின் அடையாளம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
கெட்ட வார்த்தை பேசுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ”உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!” என்று அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அநீதி இழைக்கப் பட்டவர் கெட்ட வார்த்தை
பேசினால் தவறில்லை
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
வார்த்தையின் கனத்தை (விளைவை)
அறிந்து பேச வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அருவருப்பான பேச்சை பேசுபவரே
மக்களில் தீயவர்
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்.
பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்” (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஆதாரமில்லாமல் பேசுவதற்கு தடையுள்ளது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். ‘இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்’ (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) யின் எழுத்தாளர்
கேள்விப் பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி)
இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும்
நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
சொர்க்கத்தில் நுழைவதற்கு நல்ல பேச்சை பேச வேண்டும்
நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது எனது கண் குளிர்ச்சியடைகிறது எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறினேன்.சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(அஹ்மத்: 7591)
பாதையில் அமர்ந்து நல்ல பேச்சுக்களை பேச அனுமதியுள்ளது
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை.
பேசிக்கொண்டும் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் அப்படியானால் அதற்குரிய உரிமையை கொடுத்துவிடுங்கள். பார்வையை தாழ்த்துவதும் சலாமிற்கு பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)
(முஸ்லிம்: 4305)
உடல் உறுப்புகளில் நாவினைப்
பாதுகாப்பது மிக முக்கியம்
நாவினைப் பேணுபருக்கு சொர்க்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நல்லவற்றுக்கு மட்டும் நாவைப் பயன்படுத்தினால்
சொர்க்கம் நிச்சயம்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ”உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிருந்தே தவிர (மற்றவற்றிருந்து) பாதுகாத்துக் கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்பரா பின் ஆசிப் (ரலி)
நரகத்திற்கு அழைத்துச் செல்வதும் நாவுதான்
அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ரலி)
பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது
பேசாமலே (வாய்மூடி) இருங்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நாவை சண்டைக்கு பயன்படுத்தாதீர்
இன்பத்திலும், துன்பத்திலும், விருப்பிலும், வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம்.
அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி)
நிறுத்தி நிதானமாக பேச வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அவசரப்பட்டு பேசக்கூடாது
நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
புரிந்து கொள்வதற்காக பல முறை கூறலாம்
நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)