21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை?
21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை – அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஷூரைக் (ரலி)
இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி வருகின்றோம். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.
“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்” என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.
உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது.
அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு எதிராகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?
ஒரு பல்லியின் பாவத்தை அனைத்துப்
பல்லியும் சுமக்கிறதா?
ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையை அடித்து நொறுக்கும் விதமாகவே மேற்கண்ட பல்லி பற்றிய செய்திகள் அமைந்திருக்கின்றன. முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஜோடி செய்த பாவம் மனித குலம் அனைவர் மீதும் இருக்கின்றது: அதைக் கழுவுவதற்காக இயேசு (ஈஸா நபி) சிலுவை ஏந்தினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.
“அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்றும் கூறுவீராக!
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்: மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
ஆனால் இந்தப் பல்லி சம்பவம் நமக்குச் சொல்லித் தருவது, கிறித்தவர்களின் நம்பிக்கையான முதல் பாவத்தைத் தான். இப்ராஹீம் நபிக்கு எதிராகத் தீக்குண்டத்தை பல்லி ஊதியது என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டால் சம்பந்தப்பட்ட அந்தப் பல்லியை மட்டும் தான் கொல்ல வேண்டும்.
ஆனால் இந்த ஹதீஸ் கியாமத் நாள் வரை உள்ள ஒவ்வொரு பல்லியையும் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பல்லி செய்த பாவத்திற்காக மற்ற பல்லிகளைத் தலைமுறை தலைமுறையாகப் பலியாக்குகின்றது. இது மாபெரும் அநியாயமும், அநீதியுமாகும். அல்லாஹ் இந்த அநியாயத்தை அறவே ஆதரிக்கவில்லை.
(அல்குர்ஆன்: 17:15, 35:18, 39:07) ➚ ஆகிய வசனங்களும் ஒருவர் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்று கூறுகின்றன.
அநீதி இழைக்காத மார்க்கம்
ஒருவருக்கும் அநீதி இழைக்காத மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் பல்லி பற்றிய செய்தியின் கருத்து அநீதி இழைக்கும் மார்க்கமாக இஸ்லாத்தைச் சித்தரிப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.
இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவருக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது என்று இஸ்லாமிய மார்க்கம் மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது. அப்படியிருக்கும் போது, ஒரு பல்லி செய்த தவறுக்காக அனைத்துப் பல்லிகளையும், காலா காலத்திற்கும் கொலை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
இறைத் தூதர்களுக்கு எதிராக பிராணிகள் செயல்படுமா?
சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். சுலைமான் நபியவர்களுக்கு ஹூத் ஹூத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க:27:20)
ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராகக் களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ, அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.
வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?
இவ்வசனங்களுக்கு எதிராக பல்லி அல்லாஹ்வுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது. இப்ராஹீம் நபி ஏகத்துவக் கொள்கையைச் சொன்னார்கள். இதற்காகவே அவர்கள் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள்.
பல்லி இதில் சந்தோஷம் அடைந்து இப்ராஹீம் நபிக்கு எதிராக தன் பங்குக்கு நெருப்பை ஊதி விட்டது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது. இதை நம்பினால் உயிரினங்களிலும் காபிரான உயிரினம் உள்ளது என்று நாம் நம்பியாக வேண்டும். அவ்வாறு நம்புவது மேற்கண்ட வசனங்களை மறுப்பதாக அமையும்.
அறிவுக்குப் பொருந்தவில்லை என்பதற்காக மறுக்கிறோமா?
அறிவுக்குப் பொருந்தவில்லை, நடைமுறை சாத்தியமில்லை என்பதெல்லாம் நம்முடைய வாதங்களில் துணை வாதங்களாக இடம்பெறுமே தவிர ஒருபோதும் அவற்றைப் பிரதான வாதமாக வைப்பதில்லை. அதுபோன்றே இந்த விவகாரத்திலும், பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை என்பதும் நம்முடைய வாதம் தான். ஆனால் இவர்கள் பிதற்றுவது போன்று பிரதான வாதமல்ல.
பல்லி என்பது அல்லாஹ்வின் படைப்பு! மனித, ஜின் இனங்களைத் தவிர பகுத்தறிவு வழங்கப்படாத அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டே வாழ்கின்றன. பல்லி என்ற பகுத்தறிவற்ற இந்தப் படைப்பு அல்லாஹ்விற்கு எதிராகப் புரட்சி செய்யுமா? போர்க்கொடி தூக்குமா? என்றுதான் கேள்வி எழுப்புகின்றோம்.
தீங்கு தரும் உயிர் வகை என்பதற்காக கொல்ல முடியும். பல்லியைக் கொல்ல வேண்டும் என்ற செய்தியை நாம் மறுப்பதற்குக் காரணம் குறித்த செய்தியில் ஒரு பல்லி இப்றாஹீம் நபியவர்களுக்கு எதிராக ஊதிவிட்டதினால் அனைத்துப் பல்லிகளையும் கொல்ல வேண்டும் என்ற தவறான கருத்தை குறித்த செய்தி கூறுகின்றது என்பதற்காகவே தவிர, பல்லி தீங்கு தரும் பிராணி என்ற அடிப்படையில் கொல்வதென்றால் அதில் நாம் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள். அதற்கு ஃபுவைசிக் (தீங்குதரக்கூடிய மோசமான உயிரி) என்று பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ்
தீங்கு தரக்கூடிய உயிர் என்று பல்லியை மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு சொல்லவில்லை. பல்லியல்லாத மற்றைய சில உயிரினங்களையும் தீங்கு தரக் கூடியத என்ற காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை
- காகம்
- பருந்து
- தேள்
- எலி
- வெறிநாய்
ஆகியனவாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
தீங்கு தரக் கூடியது என்ற காரணத்தினால் பல்லியைக் கொல்வதற்கு தாராள அனுமதி மார்க்க ரீதியாகத் தரப்பட்டுள்ளது.