21) நிதானமுள்ளவர்
21) நிதானமுள்ளவர்
உம்ரா செய்வதற்காக இஹ்ராம் ஆடையை அணிந்து கொண்டு நபித் தோழர்கள் ஆசையுடன் ஆர்வத்துடன் இறையில்லத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் மக்கத்து இணை வைப்பாளர்கள் அவர்களை உள்ளே வரவிடாமல் அடுத்த ஆண்டு வருமாறு உடன்படிக்கை செய்து கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் இதற்கு ஒத்துக் கொண்டார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் உட்பட அங்கிருந்த பெரும்பாலான நபித்தோழர்களின் உள்ளங்கள் இந்த உடன்படிக்கைக்கு அடிபணியவில்லை. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் எதைச் சொன்னார்களோ அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஓரந்தள்ளி விட்டு நிதானத்தைக் கடைபிடித்து அல்லாஹ்வின் தூதருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கட்டுப்பட்டு நடந்து கொண்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான் என்று பதிலளித்தார்கள். நான் நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் (நாம் சத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் தான் இருக்கிறார்கள்) என்று பதிலளித்தார்கள். அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன் என்று பதிலளித்தார்கள்……
பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அபூபக்ரே இவர் அல்லாஹ்வின் தூதரல்லவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் தான் என்று கூறினார்கள். நான் நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ஆம் என்றார்கள்.
அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நண்பரே அல்லாஹ்வின் தூதர் தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனக்குப் பிடிக்காதவர்களை தீர்த்துக் கட்டுவது இன்றைய அரசியலில் வாடிக்கையாகி விட்டது. அரபு தேசத்தின் தலைவராகவும், பொறுமைக் கடலாகவும் திகழ்ந்த அபூபக்ரை (ரலி) அவர்களை கோபப்படுத்துகின்ற அளவிற்கு ஒருவர் நடந்து கொண்ட போதிலும் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் தண்டித்து விடவில்லை. நிதானத்தைக் கையாண்டு மன்னித்தே விட்டார்கள்.
அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை ஒரு மனிதர் கோபப்படுத்தினார். நான் அவரைக் கொன்று விடட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை அதட்டிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு இப்படி செய்வது யாருக்கும் தகுதியானதல்ல என்று கூறினார்கள்.