20) வியாபாரம் – 3
20) வியாபாரம் – 3
தண்ணீர் வியாபாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப் போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன்.
தண்ணீரை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்றாலும் தண்ணீருடன் நம்முடைய உழைப்பும் சேருமானால் அது தண்ணீரை வியாபாரம் செய்ததாக ஆகாது. நாம் கிணறு வெட்டுகிறோம். அந்தக் கிணற்றை விற்றால் அது தண்ணீரை விற்றதாக ஆகாது. கிணறு வெட்டுவதற்காக நாம் செலவிட்டதையும் கிணறுக்கான இடத்தையும்தான் விற்பனை செய்கிறோம்.
அதுபோல் இயற்கையாக அல்லாஹ் தரும் தண்ணீரில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்கி சுவை கூட்டி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதும் தண்ணீரை விற்பதில் அடங்காது. பாதுகாப்பான குடிநீராக ஆக்க உழைத்ததாலும் அதற்காக செலவிட்டதாலும்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.
விலைக் கட்டுப்பாடு
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு இவ்வளவுதான் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டங்கள் உள்ளன. நமது நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் உள்ளன.
இஸ்லாமிய அடிப்படையில் இதுபோல் செய்வது விவசாயிகளுக்குச் செய்யும் அநீதியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது விலைக்கட்டுப்பாடு செய்யுங்கள் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்தான் உணவளிப்பவன்; தாராளமாகவும் குறைவாகவும் வழங்குபவன்; அல்லாஹ்தான் விலையைக் கட்டுப்படுத்துபவன். அல்லாஹ்வை நான் சந்திக்கும்போது எந்த மனிதனின் உயிருக்கோ பொருளாதாரத்துக்கோ எந்த அநீதியும் செய்யாத நிலையில் சந்திக்க விரும்புகிறேன் எனக் கூறினார்கள்.
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா
கஷ்டப்பட்டு நிலத்தில் பாடுபடுபவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவனுக்குத் தான் உள்ளது. அதிகமாக உற்பத்தியாகும்போது விலை குறைவதும் உற்பத்தி குறையும்போது விலை உயர்வதும் இயல்பானது.
அதிகமாக உற்பத்தியாகும்போது கடுமையான நட்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள் உற்பத்தி குறையும்போதுதான் அதை ஈடுகட்டிக் கொள்ள முடியும். இந்த நிலையில் அரசாங்கம் விலைக்கட்டுப்பாடு விதிப்பது அவர்களுக்குச் செய்யும் அநீதியாகும் என்று இஸ்லாம் கருதுகிறது.
இன்னும் சொல்லப்போனால் விவசாயம்தான் அதிக உழைப்புக்கு குறைந்த ஆதாயம் கிடைக்கும் தொழிலாக உள்ளது. அதிகமான இயற்கை இடர்பாடுகளும் இந்தத் தொழிலுக்குத்தான் உண்டு. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பார்கள். இது முற்றிலும் சரியானதுதான்.
ஆனால் கஷ்டப்படும் ஏழை விவசாயியின் கழுத்தை நெரிக்கும் ஆட்சியாளர்கள் சோப்பு, சீப்பு, பிளேடு உள்ளிட்ட பல்லாயிரம் பொருட்களுக்கு எந்த விலைக்கட்டுப்பாடும் விதிப்பதில்லை.
ஐம்பது பைசா அடக்கமாகும் சோப்புக்கு ஐம்பது ரூபாய் என்று தயாரிப்பாளர் விலை நிர்ணயிக்கும்போதும் பத்து பைசாகூட அடக்கமாகாத பிளேடுக்கு பத்து ரூபாய் என்று விலை நிர்ணயிக்கும்போதும் கட்டுப்பாடு விதித்தால் அதில் அர்த்தமிருக்கும்.
இவற்றுக்கு எந்த விலைக்கட்டுப்பாடும் செய்யாமல் கஷ்டப்பட்டு வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து பாடுபடும் விவசாயிக்கு மட்டும் விலைக் கட்டுப்பாடு நிர்ணயிக்கிறார்கள். எந்த விவசாயியும் விவசாயத்தின் மூலம் கோடிகோடியாகச் சம்பாதித்ததாகப் பார்க்க முடியாது. ஒரு டூத் பேஸ்ட் கம்பெனி ஆரம்பித்தவன் ஒரு வருடத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகி விடுகிறான்.
ஒரு விவசாயி விவசாயத்தின் மூலம் கோடிகளுக்கு அதிபதியாக வேண்டும். அதுதான் உண்மையான பொருளாதாரம். அதில் உழைக்கின்ற உழைப்பு வேறெதிலும் கிடையாது. விவசாயம் செய்பவன் இன்னும் அந்தக் கோவனத்தைத்தான் கட்டிக் கொண்டிருக்கின்றானே தவிர முன்னேறவே இல்லை. அவன்தான் நமக்குச் சோறு போடுகிறான். அதையெல்லாம் கவனித்துத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அநீதி என்று கூறுகிறார்கள்.
பிறமதத்தினருடன் வியாபாரம்
பிறமதத்தவர்களுடன் வியாபரத்தில் கூட்டுச் சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபர் பகுதியை வெற்றி கொண்டபோது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த யூதர்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அவர்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
எனவே பிறமதத்தவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராக அனஸ் என்ற முஸ்லிம் இளைஞரை நியமித்திருந்தது போல் ஒரு யூத இளைஞரையும் பணியாளாக நியமித்திருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!” என்றார்கள்.
உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா
மார்க்கத்தில் சில பொருட்கள் உண்பதற்கோ அணிவதற்கோ பிறவகைகளில் பயன்படுத்துவதற்கோ தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விற்று சம்பாதிக்கக் கூடாது.
நாய்களை விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்தார்கள்
நாய்களை வளர்க்க இஸ்லாம் தடை செய்துள்ளதால் அதை விற்று சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் சில காரணங்களுக்காக நாய்களை வளர்க்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது போன்ற பணிகளுக்குப் பயன்படும் நாய்களை விற்கலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
இந்த வசனத்தில் நான்கு விஷயங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இந்தத் தடை உண்பதற்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கு இதை விற்பதற்கும் தான் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பன்றி, தானாகச் செத்தவை, சாராயம் மற்றும் சிலைகளை விற்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்துள்ளார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது கூறினார்கள்.
இரத்தத்தையும் நாயையும் விற்று சம்பாதிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார்.
உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்துவிட, அதிலுள்ளது (வழிந் தோடிப்) போனது.
இந்தச் செய்தியின் மூலம் மதுவை நாம் வாங்கவோ விற்கவோ கூடாது என்பது தெளிவாகிறது.
மதுவையும் அதைக் குடிப்பவனையும் அதை ஊற்றிக் கொடுப்பவனையும் அதைவிற்பவனையும் வாங்குபனையும் அதை சுமந்து செல்பவனையும் சுமந்து செல்லப்படுபவனையும் அல்லாஹ் சபிக்கின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட், பான்பராக், கஞ்சா, அபின் மற்றும் எவையெல்லாம் மனிதனின் உடலுக்கும் அறிவுக்கும் கேடு விலைவிக்குமோ அவற்றை வியாபாரம் செய்வது ஹராமாகும்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
சுருக்கமாகச் சொல்வது என்றால் மார்க்கத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அது போன்ற எதனையும் வியாபாரமாக பணம் சம்பாதிக்கும் வழியாக ஆக்கக் கூடாது.
விபச்சாரம் ,பச்சை குத்திவிடுதல், இசைக் கருவிகள், ஆபாசமான சினிமாக்கள் குறுந்தகடுகள், லாட்டரிச் சீட்டுக்கள் போன்ற எதனையும் பணம் சம்பாதிக்கும் வழியாக ஆக்கக் கூடாது. அவ்வாறு திரட்டப்படும் பணம் பச்சை ஹராமாகும்.
தடை செய்யப்பட்டவை இரு வகைப்படும்.
ஒன்று முற்றாகத் தடுக்கப்பட்டவை.
மற்றொன்று ஓரளவுக்கு தடுக்கப்பட்டவை.
உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ யாருக்கும் அனுமதி இல்லை என்றால் அது தான் முழுமையாகத் தடுக்கப்பட்டது. அதை விற்பதும் கூடாது.
உண்பதற்கு தடுத்து வேறு வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ, ஒரு வகையினருக்கு தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ, ஒரு காரணத்துக்காக தடுக்கப்பட்டு அந்தக் காரணம் இல்லாத போது அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ அவை ஓரளவு தடுக்கப்பட்டதாகும். இவற்றை நாம் வியபாரம் செய்தால் தடுக்கப்பட்டதை விற்றதாக ஆகாது.
உதாரணமாக வீட்டுக் கழுதையை எடுத்துக் கொள்வோம். இது உண்பபதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சவாரி செய்வது தடுக்கப்படவில்லை. எனவே கழுதையை நாம் விற்கலாம். நாயை உண்பதற்குத் தடை உள்ளது. ஆனால் காவல் காப்பதற்காகவும் வேட்டையாடவும் பயன்படுத்த அனுமதி உள்ளது. இந்தப் பயன்பாட்டுக்குத் தகுந்த நாய்களை நாம் விற்பதும் கூடும்.
ஆயினும் சில காரணங்களுக்காக நாய்களை வளர்க்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது போன்ற பணிகளுக்குப் பயன்படும் நாய்களை விற்கலாம்.
ஆட்டு மந்தைகளைப் பாதுகாக்கின்ற நாய்களையும் வேட்டையாடுகின்ற நாய்களையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என நபியவர்கள் பின்பு அனுமதியளித்தார்கள்.
கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக நாய்களை வளர்க்கலாம் என்றால் அதை விற்பனையும் செய்யலாம்.
அது போல் நாய்கள் மூலம் வேட்டையாடுவதை அல்லாஹ் அனுமதிக்கிறான்.
“தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன” எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நாய்கள் மூலம் வேட்டையாடுவதை அனுமதித்துள்ளனர். எனவே வேட்டையாடுவதற்கு ஏற்ற நாய்களை வியாபாரம் செய்து பொருள் ஈட்டலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருட்டு போகாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.
தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் உண்பதற்குத்தான் தடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பதப்படுத்தி செருப்பாகவோ, தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும் பாத்திரமாகவோ, இடுப்பு பட்டையாகவோ, கைப்பையாகவோ பயன்படுத்த அனுமதி உள்ளது. எனவே பாடம் செய்யப்பட்ட தோல்களை விற்கலாம்.
உதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்தபோது, இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்றபோது, அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே? என்று கேட்டார்கள். அதற்கு, அது செத்தது என்று (தோழர்கள்) பதிலளித்தனர். அதைச் சாப்பிடுவதுதான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள், “ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம்.
எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நாங்கள் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள், “அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும் என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.
செத்த ஆட்டின் தோல் மட்டுமின்றி ஹராமாக்கப்பட்ட எந்தப் பிராணியின் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகிவிடும். பாடம் செய்யப்பட்ட தோல்களால் செய்யப்பட்ட ஆடைகள், கைப்பைகள், தண்னீர் துறுத்திகள், இடுப்பு பட்டைகள், காலணிகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது எந்தப் பிராணியின் தோலால் செய்யப்பட்டது என்பதற்கு முக்கியத்துவம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது ஹராமாக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியதாகத் தான் இருக்க முடியும். முறையாக அறுக்கப்பட்ட ஹலாலான பிராணிகளைப் பொருத்த வரை மலஜலம் தவிர அதன் அனைத்து பாகங்களுமே தூய்மையானவை தான். அதனால் தான் அதை நாம் உண்ணுகிறோம்.
உண்ண அனுமதிக்கப்படாத பிராணிகள் தூய்மையற்றவையாக உள்ளதால் அதன் தோலும் தூய்மையற்றதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும். எனவேதான் தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிக்கின்றனர்.
எந்தத் தோலாக இருந்தாலும் பதனிடப்பட்டால் அது தூய்மையடைந்து விடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.
நூல்கள் : நஸாயீ, அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : பைஹகீ
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கூடுதலாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதல் ஹதீஸில் எந்தத் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள். இரண்டாவது ஹதீஸில் ஒவ்வொரு தோலும் பாடம் செய்யப்பட்டால் தூய்மையாகி விடும் என்று கூறுகிறார்கள். பாடம் செய்யப்பட்ட எந்தத் தோலாக இருந்தாலும் அது தூய்மையாகிவிடும் என்ற கருத்தை மேற்கண்ட சொற்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை முஸ்லிம் ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது. இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.
உமர் (ரலி) அவர்கள் கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக்குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே! என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும் என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள்.
(பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்) என்று கூறினார்கள்.
தடுக்கப்பட்ட பட்டாடையை விற்று பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்து கொள்ளலாமே என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள்.
பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள்.
இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த அனுமதியில் அடிப்படையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பட்டாடையை முஸ்லிம் அல்லாத தனது சகோதரருக்கு உமர் (ரலி) அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.
பட்டாடை ஆண்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் அதை விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். அது போல் அதைப் பெற்றுக் கொள்பவர் தனது குடும்பத்துப் பெண்களுக்குக் கொடுக்கலாம். அல்லது அதை விற்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோடு போடப்பட்ட (மேலங்கியும் கீழங்கியும் அடங்கிய) ஒரு ஜோடிப் பட்டாடையை உமர் (ரலி) அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை நீர் அணிவதற்காக நான் உம்மிடம் அனுப்பவில்லை! (மறுமையின்) பாக்கியமற்றவர்கள் தாம் இதை அணிவார்கள்! நீர் இதில் பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்; அதாவது விற்க வேண்டும் என்பதற்காகவே உமக்குக் கொடுத்தனுப்பினேன்! என்று கூறினார்கள்.
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) “அல்மதாயின் (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூஸியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) “நான் இவரை(ப் பல முறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால்தான் நான் இதை அவர் மீது வீசியெறிந்தேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும் அவர்கள், “அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
பட்டு, தங்கம், வெள்ளி இவை அனைத்தையும் வியபாரம் செய்யலாம்.