20) மலிவாகி போன மான விளையாட்டு

நூல்கள்: நாவை பேணுவோம்

மலிவாகி போன மான விளையாட்டு

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பிறர் உயிரை எடுப்பது எப்படி ஹராமோ அது போலவே பிறர் மானத்தை பறிப்பதும் ஹராமே கொலை செய்வதில் வேண்டுமானால் முஸ்லிம்கள் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் அவதூறு பரப்புவதிலும் பிறர் மானத்தை பறிப்பதிலும் மற்றவர்களை மிஞ்சும் வகையில் முஸ்லிம்கள் செயல்படுகின்றனர். சினிமாக்காரர்கள் போன்ற பிரபலங்களின் மீது கிளம்பும் அவதூறை விடவும் நல்ல இயக்கத்தலைவர்களின் மீதும் அப்பாவி பெண்களின் மீதும் நல்லோர்களின் மீதும் தான் அவதூறு எனும் சேற்றை அளவில்லாமல் அள்ளிவீசுகின்றனர்.

இதற்கெனவே சில முஸ்லிம்கள் இணைய தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது நம்மை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றது. பிறரின் மானத்தை பறிப்பதை என்னவோ மாம்பழத்தை பறிப்பது போல நினைத்துக் கொண்டது தான் அவதூறு மலிவாகி போனதற்கு காரணமாகும். இத்தகையவர்கள் பின்வரும் நபிமொழிகளை சிந்தித்து பார்க்க வேண்டும்

யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான். என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்

நூல்: அபூதாவூத்

நான் மிஃரஜிரக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும் உடம்பையும் கீறிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் (புறம் பேசுவதின் மூலம்) மக்களின் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்று கூறினார்

அறிவிப்பவர் அனஸ் (ரலி)

நூல் : ஆபூதாவூத்-4235

சில மக்கள் அவதூறு பரப்புவதோடு சேர்த்து கோள் மூட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள். ஒரு தரப்பில் பேசப்படுவதை எதிர் தரப்பில் கூறி இருவருக்கும் மத்தியில் பகைமை எனும் தீயை பற்றி எரிய வைக்கின்றார்கள். சில பெண்களிடம் மாமியாரைப்பற்றி மருமகள் குறை சொல்லியிருப்பாள்.

உடனே அப்பெண் உங்க மருமக இப்படி எல்லாம் உங்கள பற்றி சொன்னா பெருசா ஏதும் கேட்டுக்காதீங்க சும்மா தான் சொன்னேன் என பற்ற வைத்து விடுவார்கள். இது போன்ற கயவர்களுக்கு இறைவன் கடுமையான தண்டனையை கொடுப்பேன் என்று எச்சரிக்கின்றான். மேலும் இத்தகையோர் சொர்க்கம் செல்ல என்ன ஆசை கொண்டாலும் அவர்களின் ஆசை நிறைவேறாது என நபிகளார் கூறுகின்றார்கள் இறைவனின் தண்டனையிலிருந்து இவர்கள் ஒரு போதும் தப்பி விட முடியாது. 

நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் (இங்குள்ள) ஒருவர் நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார் என்று கூறப்பட்டது அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று சொன்னார்கள்

(புகாரி: 6056)

(நபியே) குறை கூறித் திரிகின்ற கோள் சொல்லி அலைகின்ற எவருக்கும் நீங்கள் இணங்கிவிடாதீர்கள்

(அல்குர்ஆன்: 68:1)