21) நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்
நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்
வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில்
நட்பு கொள்வது கூடாது
குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.
நல்ல நண்பனுக்கு உதாரணம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
அன்பு வைத்திருப்பவர்களுடனே இருப்போம்
(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
இறைவனுக்காக நேசித்தவருக்கு மறுமையில்
அர்ஷின் நிழல் கிடைக்கும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இறைவனுக்காக பிறரை நேசித்தால்
இறைவன் நம்மை நேசிப்பான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார்.
உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், இல்லை. கண்ணியமானவனும் சங்கையான வனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள்.
அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
(அஹ்மத்: 12430, 11980)
எவரையும் அற்பமாக நினைக்காதீர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5010, 4650)
நட்பு கொள்ளும் போது செய்யத் தகாதவை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
சகோதரனிடம் நடந்து கொள்ளும் முறை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.
எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(மனஸ்தாபத்திற்கு பிறகு) மூன்று நாட்களுக்கு மேல்
நண்பனிடம் பேசாமல் இருப்பது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும் அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரீ (ரலி)