20) குரங்கு விபச்சாரம் செய்ததா?
20) குரங்கு விபச்சாரம் செய்ததா?
குரங்கு ஒன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டதாகவும் மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து விபரச்சாரம் செய்த குறித்த குரங்குக்கு கல்லெறிந்து தண்டித்ததாகவும் ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுக்கப்பட வேண்டிய பட்டியலில் இந்த செய்தியும் அடக்கம்.
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த பெண் குரங்கொன்றை மற்ற குரங்குகள் அனைத்தும் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை பார்த்த அம்ர் பின் மைமூன் என்பவர் தானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறிந்தேன் என்று மேற்கண்ட செய்தியில் விபரிக்கின்றார். இப்படியொரு சம்பவம் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது உண்மையான செய்தியா என்பதை யாரும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய தேவை கிடையாது. இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படையான சிறியளவிலான அறிவைக் கொண்டவர்கள் கூட இந்தச் செய்தி பொய்யானது, போலியானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை ஒப்புக் கொள்வார்கள்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதற்காகவே பிரச்சாரம் செய்யும் ஆலிம்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்களுக்கு இது போலியான செய்தி என்பது புரியவில்லை என்பது தான் ஆச்சரியமானதாகும்.
குரங்குகளுக்கு குற்றவியல் தண்டனைகள் உண்டா?
குற்றவியல் தண்டனைகள் என்பது மனிதர்களுக்கு இறைவன் வகுத்த விதி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால் மேலுள்ள – குரங்கு விபச்சாரம் செய்ததாக இடம் பெற்றுள்ள செய்தியைப் பார்க்கும் போது குரங்குகளுக்கும் குற்றவியல் தண்டணைகள் உண்டா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக இதனை உண்மை என்று வாதிடுபவர்கள் தான் மேற்கண்ட நமது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். மாத்திரமன்றி, குறித்த செய்தியை உண்மை என்று வாதிடுபவர்கள் இன்னும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
சில கேள்விகள்:
1. அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற சட்டம் இருந்ததா?
2. அப்படியிருந்திருந்தால் அதற்குரிய ஆதாரம் என்ன?
3. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற சட்டம் அறியாமைக் காலத்தில் நடை முறையில் இருந்திருந்தால், அது மனிதர்களுக்குரிய சட்டமா? அல்லது குரங்குகள் போன்ற விலங்குகளுக்குரிய சட்டமா?
4. குறித்த குரங்கு விபச்சாரம் செய்தது என்பதை மற்ற குரங்குகள் எப்படி உறுதிப்படுத்தின?
5. குறித்த செய்தியை அறிவிக்கும் அம்ர் பின் மைமூன் அவர்கள் குறித்த குரங்கு விபச்சாரம் செய்த காரணத்தினால் தான் மற்ற குரங்குகளினால் கல்லெறி தண்டனைக்கு உள்ளாகியுள்ளது என்பதை எப்படி அறிந்து கொண்டார்?
6. ஆட்சியாளர் தான் குற்றவியல் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றிருக்கும் போது, குரங்குகள் சட்டத்தைக் கையிலெடுக்கலாமா?
7. குறித்த பெண் குரங்கு விபச்சாரம் செய்தது என்பதை எந்த சாட்சியத்தை வைத்து முடிவெடுத்தார்கள்?
8. பெண் குரங்குடன் விபச்சாரம் செய்த ஆண் குரங்கின் நிலை என்னவானது?
9. விபச்சாரத்திற்கு கல்லெறி தண்டனையை வழங்கிய மற்ற குரங்குகளுக்கு மத்தியில் விபச்சாரத்தை தவிர்ந்து ஒழுக்கமாக வாழ்வதற்கான திருமண பந்த முறை காணப்பட்டதா? (மனிதர்களுக்கு இருப்பதைப் போல்)
10. விபச்சாரம் செய்த குரங்குக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போல் மற்ற விலங்கினங்களுக்கும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதா?
11. தற்காலத்தில் ஒரு குரங்கு விபச்சாரம் செய்தால் இதே தண்டனை வழங்கப்படுகின்றதா? இந்தச் செய்தியை உண்மை என்று வாதிடுபவர்கள் குரங்கு விபச்சாரம் செய்தால் இதே தண்டனையை வழங்குவார்களா?
இது போல் இந்த ஒரு செய்தியில் மாத்திரம் இன்னும் நூற்றுக் கணக்கான கேள்விகளை நாம் முன் வைக்க முடியும். இவற்றுக்கெல்லாம் யார் பதில் தருவார்? குரங்கு விபச்சாரம் செய்தது என்ற செய்தியை உண்மைப்படுத்துபவர்கள் இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை தருவார்களா?
குரங்கை மனிதனாக்கிய மாமேதைகள்
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். என்று அம்ர் பின் மைமூன் அவர்கள் கூறுவதாக(புகாரி: 3849)ம் இலக்கத்தில் இடம் பெற்றுள்ள செய்தியைக் காப்பாற்றப் புயல் வேகத்தில் புறப்பட்டவர்கள் இறுதியில் குரங்கை மனிதர்களாக இனம் மாற்றி தங்களை மகா மகா மாமேதைகள் என்று நிரூபணம் செய்து விட்டார்கள்.
மாமேதையின் விளக்கம்
குறித்த செய்தியில் இடம்பெறும் பெண் குரங்கு என்பது: பெண் குரங்கல்ல, அது விபச்சாரம் செய்த யூதப் பெண்ணாகும். அதே போல் அதனைச் சூழ்ந்து கொண்டு மற்ற குரங்குகள் கல்லெறிந்து தண்டித்தன என்பதும் குரங்குகள் அல்ல யூதர்களைத் தான் குறிக்கும்.
யூதப் பெண் விபச்சாரம் செய்ததை மற்ற யூதர்கள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டித்தார்கள் என்பதைத் தான் மேற்கண்ட சம்பவம் சொல்கின்றதே தவிர அது உண்மையான குரங்கைப் பற்றிக் கூறவில்லை. அரபி மொழி தெரியாத காரணத்தினால் தான் இவர்கள் குறித்த செய்தியில் சொல்லப்படுவது உண்மையான குரங்கு என்று சொல்கின்றார்கள்.
குறித்த ஹதீஸில் பெண் குரங்குக்கு கல்லெறிந்தது பற்றிய அறிவிப்பாளர் அறிவிக்கும் போது
“அந்தப் பெண் குரங்கை அவர்கள் கல்லால் எறிந்தார்கள்” என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றார்.
என்பது அரபி இலக்கணத்தில் – படர்க்கை, ஆண்பால், பண்மை ஆகும். இது உயர்திணை ஆகும். அதே போல் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் அவர்களும் தானும் கல்லெறிந்ததைப் பற்றி குறி்ப்பிடும் போது
– “நானும் அவர்களுடன் சேர்ந்து கல்லெறிந்தேன்” என்று சொல்கின்றார்.
இந்த இடத்தில் தான் கல்லெறிந்ததைப் பற்றி அறிவிப்பாளர் கூறும் போதும் “உயர்திணை”யாகவே குறிப்பிடுகின்றார். ஆகவே, இது உண்மையான குரங்கைப் பற்றிப் பேசும் ஒரு செய்தியல்ல, விபச்சாரம் செய்த யூதப் பெண் தொடர்பாகக் குறிப்பிடும் வசனமாகும்.
அதே போல் அதனைச் சூழ்ந்து கொண்டு மற்ற குரங்குகள் கல்லெறிந்து தண்டித்தன என்பதும் குரங்குகள் அல்ல யூதர்களைத் தான் குறிக்கும். யூதப் பெண் விபச்சாரம் செய்ததை மற்ற யூதர்கள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டித்தார்கள் என்பதைத் தான் மேற்கண்ட சம்பவம் சொல்கின்றதே தவிர அது உண்மையான குரங்கைப் பற்றிக் கூறவில்லை.
அத்துடன் அல்லாஹ்வும் யூதர்களை இழிந்த குரங்குகளாக மாறிவிடுங்கள் என்று குர்ஆனில் கூறுகின்றான். இதுவும் குரங்கு பற்றிய செய்திக்கு விளக்கமாக அமைந்துள்ளது. என்பதே மாமேதையின் வாதமாகும்.
நமது பதில்
விபச்சாரம் செய்த பெண் குரங்கு தொடர்பாக புகாரியில் பதிவாகியுள்ள செய்தியை மீண்டும் ஒரு முறை இங்கு பதிவு செய்து விட்டு “மாமேதை” யின் விளக்கத்திற்குரிய பதிலைப் பார்ப்போம்.
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
மேற்குறித்த செய்தியில் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் அவர்கள் அறிவிக்கும் போது
“அந்தப் பெண் குரங்கை அவர்கள் கல்லால் எறிந்தார்கள்”
“நானும் அவர்களுடன் சேர்ந்து கல்லெறிந்தேன்” என்ற உயர்திணை வாசகங்களை பயன்படுத்துவதினால் குறித்த செய்தியில் குறிப்பிடப்படும் குரங்கு என்பது உண்மையான குரங்கல்ல, யூதர்கள் என்று கூறும் மாமேதையிடம் நாம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றோம்.
அதுவே இவரின் இலக்கண விளக்கத்திற்குரிய போதுமான பதிலாகும். சுலைமான் நபியவர்களின் படை எறும்புப் புற்றினருகே வந்த போது ஓர் எறும்பு தனது மற்றைய சக எறும்புகளுக்கு எச்சரிக்கை விடுத்த செய்தியை இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸ_லைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது.
மேலே உள்ள திருமறை வசனத்தில் எறும்பொன்று மற்றைய எறும்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் போது
“நுழையுங்கள்” என்று உயர்திணைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்திப் பேசுகின்றது.
இந்த இடத்தில் உயர்திணைக்கு உரிய வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதினால் அது எறும்பு அல்ல அவர்கள் மனிதர்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமுதாய மக்கள் தான் என்று இம்மாமேதை விளக்கமளிப்பாரா?
அவர்கள் புற்றுக்குள் வாழவில்லை. புற்று என்றால் அவர்களின் வீடு என்று அர்த்தம் என மொழிபெயர்ப்பாரா என்ன? அரபி மொழியில் உயர்திணை, அஃறிணை என்பது இடம், பொருள், ஏவலை வைத்துத் தான் முடிவெடுக்கப்படுமே தவிர – தமிழைப் போல் உயர்திணைக்கு தனி வார்த்தையும், அஃறினைக்கு தனி வார்தையும் அரபியில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்பானிக்கும் அரபி தெரியவில்லையோ!
குறித்த செய்தியில் குரங்கென்று குறிப்பிடப்படுவது உண்மையில் குரங்கல்ல. மாறாக அது யூதர்களைத் தான் குறிப்பிடப்படுகின்றது என்று குரங்கை மனிதனாக்கி அற்புத விளக்கம் அளிக்கும் இவர்களுக்கு இமாம் அல்பானி அவர்கள் இது தொடர்பில் தெரிவித்த கருத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.
( “இந்த அறிவிப்பு மறுக்கப்பட்டதாகும். குரங்கு திருமணம் முடிக்கிறது என்பதை மனிதன் எவ்வாறு அறிவான்? தமது மானத்தைக் காப்பது குரங்கின் இயல்பு என்றும் மோசடி செய்தால் அவர்களை கொலை செய்வதற்கும் மனிதன் (அதனை) எப்படி அறிந்து கொள்வான்? குறித்த குரங்கு விபச்சாரத்தின் ஈடுபட்டதினால் தான் மற்ற குரங்குகள் கல்லெறிந்தன என்று அறிவிப்பாளார் அம்ர் பின் மைமூன் எப்படி அறிந்து கொண்டார்?”
இமாம் அல்பானி – முக்தஸர் ஸஹீஹ்ஹுல் புகாரி
இமாம் அல்பானி அவர்கள் குறித்த அறிவிப்பை மறுக்கத் தக்கது என்று கூறியது மாத்திரமன்றி அது தொடர்பில் சில கேள்விகளையும் முன் வைக்கின்றார். இமாம் அவர்களின் விளக்கத்தில் எந்த இடத்திலும் அது குரங்கல்ல மனிதர்கள் – யூதர்களைத் தான் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது என்றெல்லாம் வியாக்கியானம் கொடுக்கவில்லை. குறித்த செய்தியில் அம்ர் பின் மைமூன் அவர்கள் உண்மையான குரங்கைத் தான் குறிப்பிடுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக இமாம் அல்பானி அவர்கள் விபரித்துள்ளார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரபி தெரியவில்லை. என்று கூறி உயர்திணை அஃறிணை பற்றியெல்லாம் பேசுவோர் பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்களை ஆய்வு செய்து ஸஹீஹ், ழயீப் என்றெல்லாம் பிரித்த, பல ஹதீஸ் தொகுப்பு நூல்களின் அறிவிப்பாளர்களை துல்லியமாக எடை போட்டுப் பார்த்த அறிஞர் அல்பானி அவர்களுக்கும் அரபி தெரியவில்லை என்று சொல்வார்களா?
குரங்கை மனிதனாக்கும் இவர்களின் சிந்தனையின் தரத்தை என்னவென்பது? மனிதர்களாக இருந்த யூதர்களைக் குரங்குகளாக மாற்றியதால், குரங்குகளெல்லாம் மனிதர்கள் என்றாகி விடுமா?
குரங்குகளை மனிதர்களாக்க முயன்ற மாமேதை தனது வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காக(அல்குர்ஆன்: 02:65) ➚வது வசனத்தையும் ஆதாரம் காட்டுகின்றார். யூதர்களை அல்லாஹ் குரங்குகளாக மாறி விடுங்கள் என்று சபித்தானாம் அதனால்(புகாரி: 3849)வது ஹதீஸில் குரங்கு என்று மனிர்கள் தான் சொல்லப்படுகின்றார்கள் என்பதே மாமேதையின் வாதமாகும்.
உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! “இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.
(அல்குர்ஆன்: 02:65, 2:65, 5:60, 7:166) ➚
சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்ற இறைவனின் கட்டளையை மீறியவர்கள் இறைவன் சபித்து குரங்குகளாக மாற்றினான் என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதற்கும் குரங்கு விபச்சாரம் செய்த ஹதீஸூக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. காரணம் இது அக்காலத்துடன் முடிவுற்ற விஷயமாகும.
யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் என்பது தெளிவான ஹதீஸாகும். இதனைப் புரிந்து கொள்ளாத மாமேதையவர்கள் அன்றைய காலத்தில் நடந்த ஒன்றை இன்றும் நடக்கும் என்று நினைத்துக் கொண்டு வாதிடுகின்றார்.
இன்னும் சொல்லப் போனால் அவருடைய வாதப்படி குறித்த(அல்குர்ஆன்: 02:65) ➚வது வசனத்தை ஆதாரத்திற்கு எடுத்தால் குறித்த(புகாரி: 3849)வது ஹதீஸில் இடம்பெறும் குரங்கு என்பது உண்மையான குரங்குதான் என்பதே இன்னும் உறுதியாகும் என்பதை அவர் புரியவில்லை போலும்.
இழிந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று இறைவன் சொன்ன அடிப்படையில் அவர்கள் யூதர்களாக இருந்தாலும் உண்மையான குரங்குகள் தான் – மாமேதையின் வாதப்படி யூதக் (?) குரங்குகள் என்பது நிரூபணமாகும். அறிவை அடகு வைத்துவிட்டு அல்குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பேசினால் இந்த நிலைதான் வரும் என்பதற்கு இந்த மாமேதை ஒரு நிதர்சன ஆதாரமாகும்.