20) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-20
20) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-20
நபிமொழி-96
வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்” என்று சொல்கிறான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நபிமொழி-97
ஷைத்தான் கழிக்கும் சிறுநீர்
நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கு எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நபிமொழி-98
குளியலறையில் சிறுநீர் கழிப்பது
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஸுஹ்பான்(ரஹ்)
நபிமொழி-99
அல்லாஹ் அருள் செய்கின்றான்
இரவில் ஒரு மனிதர் தானும் எழுந்து தொழுது தன்னுடைய மனைவியையும் எழுப்புகிறார். ஆனால் அந்த மனைவி மறுக்கும்போது அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கின்றவருக்கு அல்லாஹ் அருள் செய்கின்றான் எனக் கூறுங்கள். இதைப்போல் இரவில் ஒரு பெண்மனி தானும் எழுந்து தொழுது தன்னுடைய கணவரையும் எழுப்புகிறார். ஆனால் அந்த கணவர் மறுக்கும்போது அவனது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கின்றவருக்கு அல்லாஹ் அருள் செய்கின்றான் எனக் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நபிமொழி-100
ஷைத்தாதனால் போடப்படும் மூன்று முடிச்சு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் உறங்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான்.
ஒவ்வொரு முடிச்சின் போதும் ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான்.
நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது.
நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)