02) முரண்பட்ட இரு பார்வைகள்
பொருளாதாரத்தைக் குறித்து இரண்டு வகையான பார்வைகள் உலக மக்களிடம் உள்ளன.
சொத்துக்களைத் திரட்டுவதிலும், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதிலும் ஒருவர் ஈடுபட்டால் அவர் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியாது; கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்றால் இவ்வுலகின் வசதி வாய்ப்புக்களைத் துறந்து விட வேண்டும்; இறைவனுக்காக வாழ வேண்டும். அதுதான் உயர்ந்த நிலையென்பது ஒரு பார்வை.
பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக உழைக்காமல் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் போலி ஆன்மிகவாதிகளின் பார்வை இவ்வாறு இருப்பது ஆச்சரியமானதல்ல. பொருள் திரட்டுவதில் ஈடுபடுவோர்கூட இந்தக் கருத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக உழைக்காத ஆன்மிகவாதிகள் நம்மை விட உயர்ந்தவர்கள்; நாம் தாழ்ந்தவர்கள் என்று அதிகமான மக்கள் கருதிக் கொண்டு தம்மைத்தாமே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.
நம்மால் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பொருளாதாரத்தை வேண்டாம் என்று உதறித் தள்ளியவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்று இவர்கள் நினைக்கின்றனர். இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் சூஃபிகள் எனும் போலி ஆன்மிகவாதிகளும் இந்தக் கருத்தை முஸ்லிம்களிடம் விதைத்து மார்க்க அறிவு இல்லாத முஸ்லிம்களை நம்பச் செய்துள்ளனர்.
இதனால்தான் பொருளாதாரத்தை வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளும் நபர்களை மகான்கள் என்றும் ஞானிகள் என்றும் கருதி அவர்களை மதிக்கின்றனர். பொருளாதாரம் குறித்து ஒரு பார்வை இப்படி என்றால் இன்னொரு பார்வை இதை விட மோசமானதாக அமைந்துள்ளது.
வாழ்வு என்பது முழுக்க முழுக்கப் பொருளாதாரம்தான்; பொருளாதாரத்தை எவ்வளவு சேர்க்க முடியுமோ சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த நெறிமுறைகளையும் பேணத் தேவை இல்லை. மானத்தை விற்றால்தான் பணம் கிடைக்கும் என்றால் அதையும் செய்யத் தயங்கக் கூடாது. பொருளாதாரம் திரட்டுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் வழிமுறையால் மற்றவர்களின் உரிமையும், நலனும் பாதிக்கப்பட்டால் அது பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
பொருளாதாரத்தைத் திரட்டுவதில் மட்டுமின்றி அதை அனுபவிப்பதிலும் எந்த நெறிமுறைகளையும் நாம் பார்க்க வேண்டியதில்லை. பொருளாதாரத்தைப் பயன்படுத்தி அனுபவிக்க முடிந்த அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும்; மற்றவர்களின் நலன் இதனால் பாதிக்கப்படுவது பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை என்றும் இவர்கள் நினைக்கின்றனர்.
முறைகேடாக பொருளாதாரத்தைச் செலவிடுவதால் தமது ஆரோக்கியமோ, நலனோ பாதிக்கப்படுவது பற்றியும் இவர்களுக்குக் கவலை இல்லை. இந்தக் கருத்துடையவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பொருளாதாரம் இல்லாதவர்களும்கூட மனதளவில் இந்த நிலைபாட்டில்தான் உள்ளனர்.
ஆனால் இஸ்லாம் பொருளாதாரத்தினால் விளையும் நன்மைகளையும் சொல்கிறது. அதனால் ஏற்படும் தீமைகளையும் சொல்கிறது. இரண்டையும் இணைத்து எவ்வாறு நடந்து கொள்வது சிறந்தது என்ற வழிகாட்டுதலையும் தெளிவாகச் சொல்கிறது.