19) வியாபாரம் – 2
19) வியாபாரம் – 2
பதுக்கல் கூடாது
பதுக்கல் கூடாது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் பதுக்கல் என்பதன் பொருளை அதிகமான மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. கையிருப்பில் பொருட்களை வைத்துக் கொண்டு நுகர்வோர் கேட்கும்போது இல்லை எனக் கூறுவதும் இதன் மூலம் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் அதிக விலைக்கு விற்பதும்தான் பதுக்கல் எனப்படும்.
வியாபாரிகள் அதிகமான பொருட்களை வாங்கி இருப்பு வைப்பது பதுக்கல் ஆகாது. எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரத்துக்காக ஒருவர் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நுகர்வோர் கேட்கும்போது விற்பனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவர் ஆயிரம் மூட்டை அரிசியை கையிருப்பில் வைத்திருக்கிறார். நுகர்வோர் கேட்கும் போதெல்லாம் அவர் இல்லை என்று சொல்வதில்லை என்றால் இவர் பதுக்கல் என்ற குற்றத்தைச் செய்தவராக மாட்டார். ஆனால் ஒருவரிடம் பத்து மூட்டை அரிசி மட்டுமே உள்ளது. ஆனால் விலை ஏறட்டும் என்பதற்காக அவர் அதை விற்க மறுக்கிறார். இவர் பதுக்கிய குற்றத்தைச் செய்தவராக ஆகிவிடுவார். இவரைப் போல் ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பித்தால் மக்களுக்குப் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும்.
அது போல் ஒருவர் தனது ஒரு வருட தேவைக்காக நூறு மூட்டை அரிசியை வாங்கி வைத்துக் கொண்டால் அவரும் பதுக்கியவராக மாட்டார். இவர் வியாபார நோக்கத்தில் இல்லாமல் சொந்தத் தேவைக்காக வாங்கி வைத்துள்ளதால் இது பதுக்கலில் சேராது.
பதுக்குவது இஸ்லாத்தில் குற்றமாகும்.
பதுக்குபவன் பாவம் செய்பவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் .
வியாபாரத்தை முறித்துக் கொள்ளுதல்
ஒரு பொருளை ஒருவர் விலைபேசி வாங்கிய பிறகு அப்பொருள் அவருக்குத் தேவை இல்லை என்று தோன்றினால் அந்த வியாபாரத்தை முறித்துக் கொள்வது குறித்து இஸ்லாம் சொல்வது என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உமது விருப்பம் என்று கூறினாலும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்
ஒரு பொருளை வாங்குவதாக பேரம்பேசி முடித்த பின் அல்லது கைவசப்படுத்தி முடித்த பின் அந்த இடத்தை விட்டு இருவரும் பிரியாமல் இருந்தால் இருவருக்கும் அதை முறித்துக் கொள்ளும் உரிமை உள்ளது. பொருளுக்கான பணத்தைக் கொடுத்த பின்னர் இது தேவையில்லை; என் பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று நுகர்வோர் கோரினால் வியாபாரி பணத்தை திரும்பக் கொடுத்து விட வேண்டும்.
வேறொருவருக்குப் பேசிவைத்ததை தவறாக உங்களிடம் விற்று விட்டேன்; அல்லது விலையைக் குறைத்துச் சொல்லி விட்டேன்; திருப்பித் தந்து விடுங்கள் என்று வியாபாரி கேட்டால் நுகர்வோர் அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இடத்தை விட்டு இருவரும் பிரியும் வரைதான் இந்த உரிமை உள்ளது.
பொருளை வாங்கியவர் தனது இடத்துக்கு அதைக் கொண்டு சென்ற பின்னர் வியாபாரத்தை முறித்துக் கொள்வதாகக் கூறினால் வியாபாரி அதை ஏற்கும் அவசியம் இல்லை. விரும்பினால் முறிக்கலாம். அல்லது விரும்பினால் மறுக்கலாம்.
ஆயினும் காலம் கடந்த பின்னும் விற்ற பொருளை வியாபாரி பெருந்தன்மையுடன் திரும்பப் பெற்றுக் கொண்டால் அது சிறந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு முஸ்லிமிற்கு விற்ற பொருளை திரும்பப் பெற்றுக் கொள்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அவருடைய தவறுகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறான்.
நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா
அது போல் பொருளை விற்கும்போது இதைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு அல்லது வீட்டில் காட்டி விட்டு பிடித்தால் வைத்துக் கொள்வேன்; இல்லாவிட்டால் திருப்பிக் கொண்டு வருவேன் என்று நுகர்வோர் கூறியதை வியாபாரி ஒப்புக் கொண்டு இருந்தால் அப்போது அந்த உறுதிமொழியைக் காப்பாற்றும் அவசியம் அவருக்கு உண்டு.
வியாபாரத்தில் பெருந்தன்மை
விற்கும் போதும் வாங்கும் போதும் இரு தரப்பிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அலாஹ்வின் அருள் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் பெரும்பாலும் நல்லுறவு இருப்பதில்லை. வியாபாரி நம்மைச் சுரண்டுகிறார்; ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் தான் அதிகமான மக்களிடம் உள்ளது. மக்கள் இவ்வாறு நினைப்பதற்கு ஏற்பவே அதிகமான வியாபாரிகள் நடந்து கொள்கிறார்கள்:
ஆனால் வியாபாரம் என்பது சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இருந்தாலும் அதில் பெருந்தன்மையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத்தரும் நல்லறங்களில் ஒன்றாக அமைந்து விடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாங்கும்போதும் விற்கும்போதும் வழக்காடும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
இந்தப் பெருந்தன்மை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும் என்பதால் தான் விற்கும் போதும், வாங்கும் போதும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகமான லாபம் வைத்தல், விற்ற பொருளை மாற்றிக் கேட்கும் போது மாற்றிக் கொடுத்தல், கடுகடுப்பாக இல்லாமல் மலர்ந்த முகத்துடன் இருப்பது போன்றவை வியாபாரிகள் கடைப்பிடிக்கும் பெருந்தன்மையில் அடங்கும். வியாபாரியை எதிரியாகப் பார்க்காமல் இனிமையாக அணுகுதல், பாதிப்பு இல்லாத அற்பமான குறைகளை அலட்சியப்படுத்துதல் போன்றவை நுகர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய பெருந்தன்மையாகும்.
மந்தபுத்தி உள்ளவர்களிடம் வியாபாரம் செய்யும் முறை
ஏனெனில் மந்தபுத்தியுள்ளவர்கள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், சிறுபிள்ளைகள் போல் மாறிவிட்ட முதியவர்கள் பொருட்களின் தரத்தையும் அதன் சந்தை நிலவரத்தையும் அறிய மாட்டார்கள். எனவே தரமற்ற பொருளை அதிக விலை கொடுத்து அவர்கள் வாங்கிவிடக் கூடும். இது போன்றவர்கள் இப்படி ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு விதியை வகுத்துத் தந்துள்ளார்கள்.
மேற்கண்ட நிலையில் உள்ளவர்கள் பொருட்களை வாங்கும் போது எனக்கு இப்பொருளின் தரம் பற்றி ஒன்றும் தெரியாது. நீ சொல்வதை நம்பி நான் வாங்கிச் செல்கிறேன். இதில் எந்த ஏமாற்றுதலும் இருக்கக் கூடாது என்று கூறிவிட்டு பொருளை வாங்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு வாங்கிச் சென்ற பின்னர் வியாபாரி உறுதி அளித்தது போல் அப்பொருள் இல்லை என்பது தெரியவந்தால் எப்போது வேண்டுமானாலும் அவர் திருப்பித் தந்தால் வியாபாரி பெற்றுக் கொள்ள வேண்டும்.
வியாபாரிக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டால் விபரம் தெரிந்தவர்களை வரச் சொல் என்று அவருக்கு விற்பனை செய்யாமல் இருக்கலாம்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வியாபாரங்களில் தான் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வியாபாரத்தின்போது ஏமாற்றுதல் கூடாது என்று நீ கூறிவிடு” என்று சொன்னார்கள்.
இலாபத்தில் மட்டும் பங்கு பெறுதல்
முதலீடு செய்து தொழில் செய்யத் தெரியாதவர்களும் அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களும் மற்றவரின் தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அந்தத் தொழிலில் அவர்கள் எந்த உழைப்பும் செய்வதில்லை. இப்படி உழைக்காமல் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து கொண்டு லாபம் அடைவது கூடுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.
இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
صحيح البخاري
கைபர் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் அங்குள்ள நிலங்கள் இஸ்லாமிய அரசுக்குச் சொந்தமாகி விட்டது . அப்போது கைபர் பகுதியில் இருந்த யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நிலம் உங்களுடையதாக இருக்கட்டும். நாங்கள் அதில் உழைக்கிறோம். கிடைப்பதை நமக்கிடையே பங்கு போட்டுக் கொள்வோம் என்று கோரிக்கை வைத்தனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் நிலத்தை ஒப்படைத்தனர்.
(புகாரி: 2286, 2329, 2331, 2338, 2499, 2720, 3152, 4248)
நிலம் எனும் முதலீடு இஸ்லாமிய அரசுக்குச் சொந்தமானது உழைப்பு மற்றவர்களுக்கு உரியது என்ற நிலையில் கிடைக்கும் ஆதாயத்தில் இஸ்லாமிய அரசாங்கம் ஆதாயம் அடைந்துள்ளதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் “எங்களுக்குப் பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
தொழில் என்பது எப்போதும் லாபத்தையே தரும் என்று சொல்ல முடியாது. இலாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது போல் இலாபமே இல்லாமல் போகவும் நட்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மற்றவருடன் தொழிலில் பங்காளிகளாகச் சேர்பவர்கள் இலாபத்தில் உரிமை கொண்டாடுவது போல் நட்டத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது வட்டியாக ஆகிவிடும்.
மேலும் மாதம் தோறும் இவ்வளவு தொகை என்று நிர்ணயித்தால் அதுவும் வட்டியாகிவிடும். கிடைக்கும் லாபத்தில் முதலீடு செய்தவருக்கு இத்தனை சதவிகிதம்; உழைப்பவருக்கு இத்தனை சதவிகிதம் என்ற அடிப்படையில் இருந்தால்தான் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக ஆகும்.
முஸ்லிம் அல்லாதவர்களின் சந்தைகளில் முஸ்லிம்கள் வியாபாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலகட்டத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும் . இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.
இந்த சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
صحيح البخاري
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினர். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை என்ற (2:198ஆவது) வசனம் அருளப்பெற்றது.
பலவிதமான பாவகாரியங்கள் நடைபெற்ற உகாள், தில்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்கு துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்பது கிடையாது.
நம்முடைய ஈமானிற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள்.
எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.
எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.
நம்முடைய கால் நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது. வேலிக்குள் செல்லாமல் அருகில்தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியை தாண்டியும் சென்று விடும்.
அது போன்றுதான் தர்ஹா வழிபாடு போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றதுதான்.
நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானிற்க்கு பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.
பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்
பள்ளிவாசலில் விற்பதையும், வாங்குவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்
நூல் : திர்மிதி
இந்தத் தடை பொதுவானதல்ல. தனி நபர்கள் தங்களின் ஆதாயத்துக்காக செய்து கொள்ளும் வியாபாரத்தையே குறிக்கும். பொதுநலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள்.
என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்! என்றேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள்.
நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான்!என்று நான் கூறினேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக!என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன்.
நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்களின் ஒட்டகத்துக்கான விலையைப் பள்ளிவாசலில் வைத்து கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கியுள்ளதால் சமுதாய நன்மை சார்ந்த வியாபாரத்தை பள்ளிவாசலில் செய்யத் தடை இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.