19) வரதட்சணையை ஒழிக்க வழி

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

வரதட்சணையை ஒழிக்க வழி

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் நினைத்தால் வரதட்சணையை எளிதில் ஒலித்துவிடலாம். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத நிகழ்வாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த திருமணத்தில் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் என்னுடைய திருமணத்தில் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும். பெற்றோர்கள் வரதட்சணை வாங்கச் சொன்னாலும் இந்த பாவமான விசயத்தில் பெற்றோர்களுக்கு கட்டுப்படக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவரும் வரதட்சணை கேட்டு வருபவனை திருமணம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும். வரதட்சணை கேட்கும் கோழைகளுக்கு எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கமாட்டோம் என பெண்வீட்டார் மாப்பிள்ளையின் முகத்தில் அறைந்தார்போல் கூற வேண்டும்.

வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். நெருங்கிய இரத்தபந்த உறவினரின் திருமணமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக அதை வெறுத்து புறக்கணிக்க வேண்டும்.

அப்போது தான் வரதட்சணை வாங்கியவர்கள் தாங்கள் செய்த தவறை உணருவார்கள். இனி அந்த பாவத்தை செய்வதற்கு வெட்கப்படுவார்கள். இவ்வாறு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் வரதட்சணை ஒழிய பங்காற்ற முடியும்.

வரதட்சணைத் திருமணங்களை புறக்கணிப்போம்

வரதட்சணை என்பது ஒரு சமூகக் கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற தீமைகளை நாம் கடுமையாக வெறுக்க வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் பெண் வீட்டில் வரதட்சணை வாங்குகின்ற இந்தப் பேடிகளிடம் இதைத் தீமை என்று உணர்த்துவது எப்படி? அவன் தருகின்ற விருந்தைச் சாப்பிட்டு விட்டு உணர்த்த முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இது ஒரு சமூகக் கொடுமை என்பதை உணர வைப்பதற்காக இந்தத் திருமணங்களைப் புறக்கணிக்க வேண்டும்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்லிம்: 70)

பெண்களும் காரணம்

சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை பரவ ஆண்கள் மட்டும் காரணமில்லை. பெண்களும் காரணமாக இருக்கின்றனர். மாப்பிள்ளையின் தாயார் ஒரு பெண்ணாக இருந்தும் வரதட்சணையால் பெண் படும் கஷ்டத்தை உணர்ந்திருந்தும் வாய் கூசாமல் எவ்வளவு தருவீர்கள் என்று பெண்வீட்டாரிடம் கேட்கிறாள்.

தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது வரதட்சணை கேட்பது தன்னுடைய உரிமை என்று நினைக்கிறாள். மாப்பிள்ளையின் சகோதரிகள் வரதட்சணையின் விபரீதத்தை நன்கு உணர்ந்திருப்பார்கள். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பட்ட பாட்டையும் புரிந்திருப்பார்கள். ஆனால் அண்ணனுடைய திருமணத்தில் பெண் வீட்டாரை கசக்கிப்புளிவதில் இவர்களும் கூட்டாளிகளாக இருக்கின்றார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்காவிட்டால் பெண்வீட்டார் மாப்பிள்ளையை கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்க வைக்கும் நிழ்வுகளும் உள்ளது. எனவே இது போன்ற பெண்கள் திருந்தினால் தான் வரதட்சணையை ஒழிக்க முடியும்.

நிர்பந்தம் ஏற்பட்டால்…

வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்றாலும் சமுதாயத்தில் மாப்பிள்ளை கிடைக்காமல் காத்திருக்கும் பெண்களின் நிலையை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

ஆண்டுகள் பல கடந்தாலும் வரதட்சணை இல்லாமல் தனக்கு வாழ்க்கைத் துணை அமையாது என்ற நிலையில் பலப் பெண்கள் உள்ளனர். ஒரு பெண் தான் திருமணம் செய்யாவிட்டால் வழி தவற நேரும் என்று அவள் அஞ்சினால் அப்போது விபச்சாரத்தில் சென்று விடக் கூடாது என்பதற்காக வரதட்சணை கேட்பவனை மணந்து கொண்டால் கருணையுள்ள அல்லாஹ் அதை மன்னிப்பவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர.

(அல்குர்ஆன்: 16:106) 

இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி,நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும்,வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:173)

பணம் கொடுத்து உதவி செய்யலாமா?

மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுப்பதற்காக பெண் வீட்டார் நம்மிடம் உதவி கேட்டால் உதவி செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

நல்ல காரியத்துக்கு யார் உதவி கேட்டாலும் கண்டிப்பாக உதவ வேண்டும். ஆனால் பாவமான காரியத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டால் உதவக்கூடாது. பாவமான காரியத்திற்கு துணை நிற்பதும் பாவமான செயலாகும்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீற-லும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 5:2)

அதே நேரத்தில் பெண்ணுக்கு ஆடை வாங்குவது நகை வாங்குவது போன்ற செலவுகளுக்காக உதவி கேட்டால் இதற்கு தாராளமாக உதவலாம். ஏனென்றால் பெண்ணுக்கு செலவழிப்பது வரதட்சணை இல்லை. மேலும் தானாக வழியச் செல்லாமல் வரதட்சணை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள பெண்களுக்கு நாம் உதவுவதும் தவறல்ல. அல்லாஹ் நமது இஸ்லாமிய சமுதாயத்தை மற்ற சமூகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் சிறந்த சமுதாயமாக ஆக்குவானாக.!