19) டாக்டர் ஜாகிர் ஹுஸைன்
19) டாக்டர் ஜாகிர் ஹுஸைன்
ஆப்கானிஸ்தானத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஹைதராபத்தில் பிறந்து உ.பி. மாநிலம் குயாம் கஞ்சில் வளர்ந்தவர். 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் பாரத ரத்னாவாகி 1967ல் இந்திய ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ஜாகிர் ஹுஸைன்.
அலிகர் முஹம்மதின் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் பி.ஏ. முடித்துவிட்டு எம்.ஏ.படித்துக் கொண்டிருந்தார். 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 12ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காந்தி ஆங்கில அரசின் பள்ளி கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும், அதே நேரம் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேசியக் கல்லூரிகளை நாமே உருவாக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பேசி முடித்து விட்டு காந்தி கல்லூரியை விட்டுச் சென்றார். அவரது பேச்சைக் கேட்ட ஜாகிர் ஹுஸைன் அவருக்குப் பின்னாலே சென்றார் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு.
கல்லூரியை விட்டு வெளியேறியவர் கால நேரத்தை விரயம் செய்யாமல் காந்தி சொன்னபடியே தேசியக் கல்வி நிறுவனத்தை உருவாக்க பெரும் முயற்சியெடுத்தார்.
வெளியேறிய 17 நாட்களில் அதாவது 29.10.1920 அன்று அதே ஊரில் ஜாமியா மில்லிய்யா என்ற தேசியக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அலிகரில் இருந்து பின்னர் அது டில்லிக்கு இடம் மாறியது. கல்லூரியானது தொடர்ந்து பல்கலைக் கழகமாக உருவெடுத்து தற்போது ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
22 ஆண்டுகள் நிறுவனரையே துணை வேந்தராகக் கொண்டு இயங்கிய டில்லி ஜாமியா மில்லிய்யா பல்கலைக் கழகம் இஸ்லாமியர்களின் தியாக வாழ்வையும், தேசிய உணர்வையும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்பதற்கு எந்தச் செவிகளும் இல்லை என்பது தான் மிகுந்த வலியைத் தருகிறது.
(வி.போ.மு, வி.என்.சாமி பக் 470-476)