19) சிறு பாவங்களின் பரிகாரங்கள்
சிறு பாவங்களின் பரிகாரங்கள்
பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம் :
நாம் செய்யும் சிறிய அளவிலான தவறுகளை தினமும் கணக்கிட்டுப் பார்த்தால் பட்டியிலிடும் அளவிற்கு நீண்டு கொண்டே போகும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போன்று இந்தச் சிறிய பாவங்களே மறுமையில் நாம் நரகிற்குப் போவதற்குக் காரணமாக ஆகி விடலாம். இந்நிலையைப் போக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் அழகிய ஒரு வழியைக் கூறியுள்ளார்கள்.
பெரும் பாவத்தை மட்டும் நாம் தவிர்த்திருந்து கடமையான ஐவேளைத் தொழுகையை தொடர்ந்து தொழுது வரும் போது நமது சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதைப் போன்று வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டால் அடுத்த ஜும்ஆ தொழுகை வரை நாம் செய்யும் சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வருடத்தில் ரமளான் மாதத்தில் கடமையான நோன்பை நோற்று வருவதன் மூலம் அடுத்த வருடம் வரும் வரை ஏற்படும் சிறிய தவறுகளுக்கு அது பரிகாரமாக அமைந்து விடும்.