19) அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

19) அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?

இஸ்லாத்தின் தீவிர எதிர்ப்பாளர்களில் ஒருவனாகவும், நபியவர்களின் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்த்து குறை சொல்லித் திரிந்தவனுமான நபியவர்களின் பெரிய தந்தை அபூலஹபுடைய விரலை நரகம் தீண்டாது என்ற கருத்திலமைந்த ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இங்கு விரிவாக ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரலை நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான்.

இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான். என்ற கருத்துப்பட அமைந்த செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸூவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.

உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸ_வைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.

(புகாரி: 5101)

குர்ஆனின் போதனைகளுக்கு முரணானது

மேலும் குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்டதாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனைச் சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை அருளி இருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி, “இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொன்னான்.

(புகாரி: 4770, 4801, 4971, 4972, 4801, 4971, 4972)

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைக் கண்டித்து திருக்குர்ஆனின் 111 வது அத்தியாயம் அருளப்பட்டது.

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம் அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலையை உண்டாக்குகின்றது அல்லவா? அல்லாஹ்வின் சொல்லைப் பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

“காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது” என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:161-162)

அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது: உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:86)

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 3:88-89)

சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாகத் திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனை இலேசாக முடியும்? திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

ஆதாரபூர்வமான மற்றைய ஹதீஸ்களுக்கும் முரணானது

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றது” என்பது நபிமொழி.

(புகாரி: 1, 54, 2529, 3898, 5070, 6689, 6953)

அபூலஹப் தன் விரல் அசைத்து அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன? அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து அவன் செய்த செயலல்ல இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா?

எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன? எத்தனை உதடுகள் அவர்களை முத்தமிட்டுள்ளன? அவர்களைக் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை? அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை? இப்படி செய்த அத்தனை பேரும் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேனோ, பாலோ சுரக்க வேண்டாமா?

மொத்தத்தில் மக்கத்துக் காபிர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, அவர்களின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?

நபியவர்களுடன் தொடர்பானது அல்ல

மேலும் அறிவிப்பாளர் ரீதியாகவும் குறித்த செய்தி தரமற்றதாகி விடும். குறித்த செய்தி புகாரியில் இடம் பெற்றிருந்தாலும், நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பான செய்தியாக இது இடம் பெறவில்லை. மாறாக உர்வா என்பவரின் தனிப்பட்ட கூற்றாகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸூவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப் பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.

உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸ_வைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.

(புகாரி: 5101)

இந்தச் செய்தி பல காரணங்களால் ஏற்க முடியாகதாகும்.

  1. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.
  2. அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
  3. உர்வா என்பவர் தான் இதனைக் கூறுகின்றார். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்: நபித்தோழரும் அல்ல. 
  4. கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது?
  5. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதை விட முடியாது. புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் புனித குர்ஆனின் போதனைகளுக்கு மாற்றமாக இருப்பதினால் இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இட்டுக்கட்டப்பட்ட கதையாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

அத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாத செய்தி என்ற வகையிலும் இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெளிவான உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இந்தக் கட்டுக் கதையை நாம் அடியாடு நிராகரிக்க வேண்டும் என்பதே தெளிவான நிலைபாடாகும்.