18) கேள்வி கணக்கின்றி சொர்க்கம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

கேள்வி கணக்கின்றி சொர்க்கம்

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 5705)

விளக்கம்:

மறுமை நாளில் சொர்க்கம் செல்வதற்கு இலகுவான ஒரு வழியை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஓதிப் பார்க்காமலும் பறவை சகுனம் பார்க்காமலும் இருந்து, இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தால் நாம் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம். அன்றைய காலத்தில் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர் பறவைச் சகுனம் பார்ப்பார்கள்.

பறவைகள் மீது நம்பிக்கை வைத்து இறைவனை மறக்கும் செயலில் ஈடுபட்டதைப் போன்று இல்லாமல் முழுக்க முழுக்க இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் சொர்க்கத்தை இலகுவாகப் பெற்றிடலாம்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக (அல்குர்ஆன்: 9:51) என்ற வசனமும் இந்தக் கருத்தையே தெரிவிக்கிறது.