18) அல்லாஹ்விற்காக சிரமங்களை பொறுத்துக் கொண்டவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

18) அல்லாஹ்விற்காக சிரமங்களை பொறுத்துக் கொண்டவர்

செல்வச் சீமானாய் சொகுசாக வாழ்ந்து வந்த இறை நேசர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்ற போது மதீனாவின் தட்பவெப்பம் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் அபூபக்ர் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். துன்பமான இந்நேரத்தில் தமது கடந்த கால சொகுசு வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல் மரணத்தை நினைவு கூர்ந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது மரணம் தனது செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான் என்ற கவிதையைக் கூறுவார்கள்.

(புகாரி: 1889)

தபூக் போர்க்களத்தின் போது உண்ணுவதற்கு உணவில்லாமலும் பருகுவதற்கு நீரில்லாமலும் நபித்தோழர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். இந்நேரத்தை சிரமமான நேரம் (சாஅதுல் உஸ்ரா) என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்விற்காக இச்சுமையை ஏற்றுக் கொண்டு பொறுமைக் கடலாக அபூபக்ர் (ரலி) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

சிரமமான கால கட்டத்தைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உமர் (ரலி) அவர்கள் கடுமையான வெப்பத்தில் தபூக்கை நோக்கி நாங்கள் சென்றோம். (ஏதோ) ஒரு இடத்தை நாங்கள் அடைந்த போது எங்களுடைய வாகனங்கள் (ஒட்டகங்கள் தண்ணீரின்றி) அழிந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு எங்களுக்குத் தாகம் ஏற்பட்டது.

முடிவில் ஒரு மனிதர் தன் ஒட்டகத்தை அறுத்து அதன் நீர்ப்பையைப் பிழிந்து குடிக்க ஆரம்பித்து விட்டார். மீதி நீரை அதன் வயிற்றிலேயே விட்டு விட்டார். அப்போது அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) அல்லாஹ்வின் தூதரே பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனையில் அல்லாஹ் நல்லதை ஏற்படுத்துகிறான்.

எனவே எங்களுக்காகப் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினார்கள். இதைத் தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதற்கு ஆம் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பதலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரு கைகளையும் உயர்த்தி (பிரார்த்தனை செய்தார்கள்).

மேகம் திரண்டு மழையை கொட்டிய பிறகே கைகளைத் தளர்த்தினார்கள். தங்களிடமிருந்தவற்றில் மக்கள் நீரை நிரப்பிக் கொண்டார்கள். பின்பு அம்மேகத்தைக் காணுவதற்காக நாங்கள் சென்றோம். அது (எங்கள்) படையை விட்டும் கடந்து சென்று விட்டது.

(இப்னு ஹிப்பான்: 1383), பாகம்: 4, பக்கம்: 223

ஏழை எளியவர்களின் பசியைப் போக்கி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தம் செல்வங்களையெல்லாம் இழந்து பசிக் கொடுமைக்கு ஆளானார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இரவிலோ, அல்லது பகலிலோ (வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் (வெளியே) கண்டார்கள். இந்நேரத்தில் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தது எது? என்று நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவரிடத்திலும்) கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் பசி தான் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களை வெளியேற்றியது தான் என்னையும் வெளியேற்றியது என்று கூறினார்கள். (பிறகு மூவரும் ஒரு அன்சாரித் தோழரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார்கள்)

(முஸ்லிம்: 4143)