18) பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
பெற்றோரை சீ என்று கூட கூறக் கூடாது
“என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ” எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்று கேட்பீராக!
பெற்றோரைப் பேணுதல்
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
சிரமத்துடன் பெற்று வளர்த்ததற்காக பெற்றோரை பேணவேண்டும்
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்” என்று கூறுகிறான்.
தொழுகைக்கு அடுத்த நற்செயல் பெற்றோரைப் பேணுவதுதான்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிகிறார்கள் : அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்’ என்றனர்.
நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக்கின்றனர்) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பெற்றோருக்காகச் செலவிடுதல்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக!
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ”கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் (ரலி)
பெற்றோர்களுக்காக விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றுதல்
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்
பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பலனளிக்கும்)’ என்று கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘என்னுடைய மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தருமம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின்
மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது,அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், “அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்” என்று கூறினோம்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் தீனார்
பெற்றோர்ருக்குச் செய்யும் பணிவிடைகள்
இறையுதவியைப் பெற்றுத் தரும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.
அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன்.
பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
பெற்றோருக்கு பணிவிடை செய்பவருக்கு சுவனம்
எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது. அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்றேன். இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு (வானவர்கள்), “இவர் தான் ஹாரிஸா பின் நுஃமான்” என்று சொன்னார்கள்.
“இவர் தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
பெற்றோரின் தியாகத்திற்கு ஈடு செய்ய முடியாது
لَا يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தை ) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்ய முடியாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்யதாவன்
செல்லுமிடம் நரகம்தான்
அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், (இழிவடையட்டும்!) அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே அவன் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘யார் வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ (உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ அவன்தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
பெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்’
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
பெற்றோர்களை சபிப்பது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
‘ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமாட்டான்
அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம், என் தாயார் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
நல்ல விஷயங்களில் மட்டும் பெற்றோருக்குக் கட்டுப்படுதல்
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்
‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
‘என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக’
‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’