17) தீயவர்களைப்பற்றி எச்சரிக்கையூட்ட
தீயவர்களைப்பற்றி எச்சரிக்கையூட்ட
புறம் இஸ்லாத்தில் ஹராம் என்பதில் எள்ளவும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. எனினும் சில சந்தர்ப்பங்களில் (புறம் பேசுவது) பிறர் குறையை வெளிப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. இதை நாம் சுயமாக கூறவில்லை நபிகளாரின் நடைமுறையிலிருந்தே கூறுகின்றோம்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அமைதி கேட்டார் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர் என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிடமும் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள்.
பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே? என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில் மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகளாரிடம் அவர்களை சந்தித்து பேச ஒருவர் வருகின்றார். அவர் வருவதை அறிந்த நபிகளார் மக்களிடம் அவரை பற்றி மோசமானவர் என்பதாக குறை கூறுகின்றார்கள். அதாவது புறம் பேசுகின்றார்கள். பிறகு அன்பாக பேசிய நபியவர்கள் அவர் சென்று விட்ட பிறகு அவரின் அருவருப்பான பேச்சிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவே இவ்வாறு அன்பாக பேசினேன் என்பதை பிற மக்களுக்கு உணர்த்துகின்றார்கள்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று நம்பி ஏமாந்து போகும் நிலை ஏற்படுமாயின் அவர் நம்பகமானவரல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த அவரால் ஏற்படும் தீமையைப்பற்றி எச்சரிக்கயையட்ட அவரைப்பற்றியான குறைகளை எடுத்துக் கூறலாம். எச்சரிக்கை செய்வதற்காக பிறரது குறையை எடுத்துக் கூறினால் இதை புறம் என்று இஸ்லாமிய பார்வையில் சொல்லக்கூடாது.