17) தீமைகளை வெறுப்பவர்
17) தீமைகளை வெறுப்பவர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் முன்னால் ஒரு தீமை நடப்பதைக் காணும் போது அதை வெறுப்பவர்களாகவும், தடுத்து நிறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைப் பின்வரும் சம்பவத்தில் தெளிவாக உணரலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
புஆஸ் (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமியர்கள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு புறமாகத்) திருப்பிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று கூறி என்னைக் கடிந்து கொண்டனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரை நோக்கி அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பிய போது அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறி விட்டனர்.
இன்ன பிற கடமைகளைப் புறந்தள்ளிவிட்டு வணக்க வழிபாடுகளில் அளவுகடந்து செல்வதை மார்க்கம் தடை செய்திருக்கிறது. எல்லை கடந்து செயல்படுவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டதைப் போல் அபூபக்ர் (ரலி) அவர்களும் கடுமையாக நடந்து கொண்டார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவனைத் தவிர வேறு எந்த வணக்கத்திற்குரியவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக மார்க்க விஷயங்களில் எல்லை கடந்து செல்பவர்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்பவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.
அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுபவராக அபூபக்ர் (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. இவர்கள் விஷயத்தில் அதிகம் அஞ்சுபவராக உமர் (ரலி) அவர்களை நான் பார்த்தேன்.