19) சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

  1. சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர் அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று சொல்லாமலிருந்து விட்டார்கள்.

(அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயோரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபதுபேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3424)

சுலைமான் நபிக்கு 100 மனைவிகளோ 100 அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக்கொண்டாலும் மனித ஆற்றலையும் நேரத்தையும் கவனிக்கும் போது ஒரு இரவில் அனைவருடன் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சயைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.

  1. இறைத்தூதாராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்துகொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக்கருவறையில் எத்தனைக் குழந்தைகள் உண்டாகும்? கருவறையில் குழந்தை உண்டாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்: 34:31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(புகாரி: 4697)

இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூறியிருக்கமாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபி (ஸல்) அவர்களும் கூறியிருக்கமாட்டார்கள்.

மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக்காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் யாராவது நினைவுபடுத்தினால் உடனே திருத்திக்கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டியப் பின்னரும் சுலைமான் நபி செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைய தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தபோதும் இதை நாம் புறக்கணிக்க வேண்டும். இச்சம்பவம் உண்மை என்று நம்பினால் குர்ஆனுடைய பலவசனங்களை மறுத்தவர்களாகிவிடுவோம்.

முரண்பாடுகள்

இது போக இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிபடுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 5242)

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 3424)

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 7469)ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60 70 90 100 என்று முரண்பட்ட எண்ணிக்கையில் இந்த செய்தி வருவதால் இது உள்ளதுபடி நமக்கு வரவில்லை. பலவிதமான மாற்றங்களுக்கு இந்த செய்தி உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுமாறு மலக்கு கூறியதாக ஒரு செய்தி கூறுகிறது.

(புகாரி: 5242)

சுலைமான் நபியின் தோழர் கூறியதாக இன்னோரு செய்தி கூறுகிறது.

(புகாரி: 3424)

சுலைமான் நபியின் தோழர் அல்லது வானவர் இவர்களில் யாரோ கூறியதாக சந்தேகத்துடன் இன்னொரு செய்தியில் இடம்பெற்றுள்ளது.

(முஸ்லிம்: 3402)

மனைவியிடத்தில் உடலுறவு கொள்வதை நாகரீகம் உள்ள எவரும் வெளியில் சொல்லமாட்டார்கள். இறைத்தூதராக விளங்கும் சுலைமான் நபி இந்த விசயத்தை எப்படி வெளியில் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தால் இது தவறான ஹதீஸ் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அவர்களின் விளக்கம்

சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்ததன் அடிப்படையில் இதை அவர்கள் கூறியிருக்கலாம் என்று விளக்கம் கொடுத்தால் குர்ஆனுடன் இச்செய்தி முரண்படாது என்று இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை.

நமது விளக்கம்

இறைவன் அறிவித்துக்கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண்குழந்தைகளை பெற்றெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இதைக் கூறியுள்ளார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெறமுடியும்.

நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை. ஆண்குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக்கூறுகிறார்கள். அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர்காலம் பற்றி பல விசயங்களைக் கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

அவர்கள் கூறியதில் எதுவும் நடக்காததால் சுயமாகத்தான் இதை அவர்கள் கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்ஷா அல்லாஹ் என்று சொல்லாததால் இந்த சோதனை சுலைமான் நபிக்கு வந்ததாக ஹதீஸ் கூறுகிறது. அல்லாஹ் சுலைமான் நபிக்கு இதை அறிவித்துக்கொடுத்தான் என்று வைத்துக்கொண்டால் அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த விஷயத்திற்கு இன்ஷா அல்லாஹ் சொல்லவேண்டியதில்லை.

நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ முன்னறிவிப்புகளை கூறியிருக்கிறார்கள். இங்கு நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் கூறாததால் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக்கொடுத்ததை மாற்றிடவில்லை. இதற்காக அவர்களை அல்லாஹ் தண்டிக்கவுமில்லை.

தன்னிச்சையாக கூறும் போது இன்ஷா அல்லாஹ் சொல்லாத காரணத்தினால் தான் அல்லாஹ் தண்டித்தான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.

அவர்கள் விளக்கம்

சுலைமான் நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் சொல்வதற்கு மறந்தவிட்டார்கள் என்று ஒரு அறிவிப்பில் வருகிறது. எனவே மலக்கு ஞாபகப்படுத்தியும் வேண்டுமென்றே தான் சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் சொல்லவில்லை என்று கூறுவது அவர்கள் மீது அவதூறு கூறுவதாக அமையும் என்று சிலர் விளக்கம் கொடுக்கிறார்கள்.

நமது விளக்கம்

மறந்துவிட்டார்கள் என்று இவர்கள் பொருள் செய்யும் இடத்தில் நஸிய என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தை மறந்துவிட்டார் என்ற பொருளையும் தரும். வேண்டுமென்றே விட்டுவிட்டார் என்ற பொருளையும் தரும். பின்வரும் வசனங்களில் இந்த வார்த்தை வேண்டுமேன்றே விட்டுவிடுதல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டள்ளது.

2:44 اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏

வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

(அல்குர்ஆன்: 2:44)

20:126 قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰ

அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்   என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 20:126)

6:44 فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம்.

(அல்குர்ஆன்: 6:44)

மறதி ஏற்படுகின்ற விதத்தில் அல்லாஹ் மனிதனை படைத்துள்ளான். இஸ்லாம் விதித்த கடமைகளை மறதியாக ஒருவன் விட்டுவிட்டால் கூட அல்லாஹ் அவனை தண்டிக்கமாட்டான். ஏனென்றால் மறதி என்பது அவனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.

மறந்துவிட்ட ஒருவனை தண்டிப்பது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்ல. மறதியாகத் தான் சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ்வை விட்டுவிட்டார்கள் என்றால் மறதியாக செய்ததற்கு தண்டனை தரும் விதமாக அவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தைகளை பிறக்கவிடாமல் ஆக்குவது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்ல.

இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு சொன்னவர் சாதாரண மனிதர் அல்ல. மாறாக வானவர் கூறியிருக்கிறார். இன்ஷா அல்லாஹ் என்று கூறுவது பின்னால் தள்ளிப்போடுகின்ற அளவிற்கு கடினமான ஒரு காரியம் அல்ல. இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்று சொன்னவுடனே ஒரு நொடியில் சொல்லி முடித்துவிடலாம். ஞாபகப்படுத்திய அடுத்த நொடியில் யாரும் மறக்கவும் மாட்டார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வேண்டுமென்றே தான் சுலைமான் நபி இன்ஷாஅல்லாஹ் சொல்லாமல் இருந்தார்கள் என்றக் கருத்தைத் தான் ஹதீஸ் தருகிறது. அல்லாஹ்வைத் தவித்து யாராலும் கூற முடியாத மறைவான செய்திகளை சுலைமான் நபியவர்கள் கூறினார்களென்றும் இறைவனை நினைவுகூறுவதை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள் என்றும் இந்த ஹதீஸ் கூறுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.