17) காங்கிரசும் முஸ்லிம்களும்
17) காங்கிரசும் முஸ்லிம்களும்
சுதந்திரப் போரின் பிற்பகுதியில் நாடு தழுவிய அளவில் மக்களின் ஆதரவு பெற்ற இயக்கமாக காங்கிரஸ் மாறியிருந்தது. காந்தியின் அகிம்ஸா தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
ஆயுத முனையில் அடக்குமுறை செய்யும் ஆங்கிலேயர்களை அகற்றுவதற்கு இது சரியான வழிமுறை அல்ல என்றாலும் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டதும் மக்கள் ஆதரவை அதிகம் பெற்றதுமான ஒரே இயக்கமாக அன்றைக்கு அது மட்டுமே இருந்தது.
இறுதிக் கட்டப் போர் முடிந்து இனிமேல் இந்தியா நமக்கு வேண்டாம் என ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது காங்கிரசாரின் கைகளில் தான் நாட்டை ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.
காங்கிரஸின் முயற்சிதான் நாட்டு விடுதலைக்கு அஸ்திவாரம் என அதிகமான மக்களால் நம்பப்படுகிறது. ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அத்தகைய ஆலவிருட்சத்தை தாங்கிப் பிடித்ததிலும் தண்ணீர் வார்த்ததிலும் பலர் இருக்கிறார்கள். முதலிடத்தில் முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள்.
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம், கதர் ஆடை இயக்கம், அந்நியத் துணி பகிஷ்கரிப்பு இயக்கம், கள்ளுக் கடை மறியல், உப்புச் சத்தியாக்கிரகம் என நடத்தப்பட்ட இவற்றில் அதிகமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, ஏற்றுக் கொண்டாலும் கடைப்பிடிக்கப்படாத ஒன்று ஆங்கில அரசின் கல்வி மற்றும் வேலையைப் புறக்கணியுங்கள் என்ற அறிவிப்பு.
கல்வி எதிர்கால வாழ்வின் அடிப்படை. வேலை நிகழ்கால வாழ்வுக்கு உத்திரவாதம். இரண் டையும் இழப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குடும்பம் சமூகம் என ஒருவன் சார்ந்திருக்கிற அவனைச் சார்ந்திருக்கிற யாரும் இதை ஏற்க முன் வரமாட்டார்கள்.
கண்ணெதிரே ஆயிரம் வாய்ப் புகளைக் காண்பவர்கள்கூட இருக்கும் வேலையை இழந்துவிட்டு இன்னொரு வேலையைத் தேடுவதற்கு கடுமையாக யோசிப்பார்கள். புதிய வேலை எப்படி அமையுமோ? என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.
ஒருவேளை நஷ்டப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் அலைமோதும். அது கூட இருப்பதைக் கொடுத்து விட்டு இல்லாமல் போவதற்கு அல்ல. அதை விட சிறந்ததைப் பெறுவதற்குத் தான்.
இங்கே நிலைமையோ தலைகீழ். கையில் இருக்கும் அரசாங்க வேலையை விட்டு விட்டால் அதைவிட சிறந்த வேலை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேலையை விடுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? சரி, ஒருவேளை சிறந்தது அமையாவிட்டாலும் பரவாயில்லை. கால் கஞ்சி குடிப்பதற்காவது காசுக்கு வழி கிடைக்குமா என்றால் அதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
இப்படிப்பட்ட மரணப் பரீட்சைக்கு யார்தான் முன்வருவார்? இருப்பதை விட்டு பறப்பதை விரும்பலாம். பறப்பதற்கு ஆசைப்பட்டு இருக்கக் கூட முடியாமல் போனால்….?
அதனால்தான்இந்தத் திட்டத்தை காந்தி முன்வைத்த போது விரல் விட்டு எண்ணுகிற மிகச் சிலரைத் தவிர இந்தியாவின் அனைத்து சமுதாயத்தினரும் அதை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை எண்ணிச் சொல்லுகிற இரண் டொருவரைத் தவிர அனைவருமே அதை அங்கீகரித்தார்கள். அப்படியே கடைப்பிடித்தார்கள். இது அப்பழுக்கற்ற வரலாற்று உண்மை.
உதாரணத்திற்கு ஒரு சில…