24) கடவுளுக்கு அச்சமில்லை
கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.
‘அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி ‘சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்?’ என்று கேட்டார். அதற்குப் பேதுரு ‘அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள்’ என்றான். இயேசு அவனை நோக்கி, ‘அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு’ என்றார்.
(மத்தேயு 17:25-27)
அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.
இயேசு, தாம் யூதர்களால் பிடிக்கப்படப் போவதை அறிந்து அச்சமும் துக்கமும் கொண்டிருந்தார்.
.அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டு போய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர், என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்று சொல்லி…
(மாற்கு 14:32-34)
யூதர்கள் தம்மைக் கல்லால் எறியத் தேடிய போது இயேசு இருளைத் தேடினார்.
(யோவான் 8:59-10:39)
ஆகையால் இயேசு அதன் பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம் விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப் போய், அங்கே தம்முடைய சீஷருடனே கூடத் தங்கியிருந்தார்.
(யோவான் 11:54)
யூதர்கள் தன்னைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்தவுடன் இயேசுவுக்கு ஏற்பட்ட அச்சம் சாதாரணமானது அல்ல.
மரணத்துக்கு நிகரான துக்கத்தில் இருக்கிறேன் என்றார்.
நான் ஜெபம் பண்ணும் போது யாரும் என்னைப் பிடித்து விடாதிருக்கத் துணையாக இருங்கள் என்கிறார்.
தனக்குப் பாதுகாப்பாக தூங்காமல் விழித்திருக்குமாறு சீடர்களிடம் கெஞ்சுகிறார்.
இருளைத் தேடி ஓடி தலைமறைவாக இருந்துள்ளார்.
காட்டுக்குச் சென்று ஒளிந்திருக்கிறார்.
வேறொரு ஊருக்குச் சென்று அங்கே ஒளிந்து கொண்டார்
என்றெல்லாம் இவ்வசனங்கள் கூறுகின்றனவே? கடவுள் இப்படித் தான் அஞ்சி நடுங்குவாரா? மனிதனுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வது தான் கடவுளின் தன்மையா? என்னோடு இருங்கள் என்று மற்றவர்களிடம் கெஞ்சுவது தான் கடவுளின் இலக்கணமா?