16) நபியின் சளியை நபித்தோழர்கள் மேனியில் பூசிக் கொண்டார்களா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

16) நபியின் சளியை நபித்தோழர்கள் முகத்திலும்

மேனியிலும் பூசிக் கொண்டார்களா? 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்த ஹதீஸாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கும் மாற்றமாக இருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற நிலையை அடையாது. குறிப்பிட்ட நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் அல்லது அதைச் சொல்பவர் நம்பகமானவர் என்பது மட்டும் ஒரு ஹதீஸை ஆதாரப்பூவமானதாக ஆக்கிடாது.

ஹூதைபியா உடன்படிக்கையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த உரையாடலும் ஒப்பந்தமும் இடம் பெற்ற சம்பவத்தில் இடம் பெறும் ஒரு பகுதி நபியவர்களின் சளியை நபித் தோழர்கள் தமது முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார்கள் என்ற கருத்துப்பட பதிவு செய்துள்ளார்கள். எதிரிகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த உர்வா பின் மஸ்வூத் என்பவர் அதாவது முஸ்லிமல்லாத ஒருவர் கூறியதாக புகாரியில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

ثم إن عروة جعل يرمق أصحاب النبي صلى الله عليه وسلم بعينيه قال فوالله ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له فرجع عروة إلى أصحابه فقال أي قوم والله لقد وفدت على الملوك ووفدت على قيصر وكسرى والنجاشي والله إن رأيت ملكا قط يعظمه أصحابه ما يعظم أصحاب محمد صلى الله عليه وسلم محمدا والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له وإنه قد عرض عليكم خطة رشد فاقبلوها فقال رجل من بني كنانة دعوني آتيه فقالوا ائته

பிறகு உர்வா பின் மஸ்வூத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தமது இரு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்கள் உளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் சென்று விடுகிறார்கள்.

அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

(புகாரி: 2731)

இதில் அறிவிப்பாளர்கள் ரீதியாக எந்தக் குறையும் இல்லை. என்றாலும் இது முஸ்லிமல்லாதவரின் கூற்றாகத் தான் இடம் பெற்றுள்ளது. ஒருவருக்கு முழுமையாகக் கட்டுப்படும் மக்களைக் காணும் போது இவரது சளியைக் கூட மேனியில் பூசிக் கொள்பவர்கள் என்று மிகைபடக் கூறும் வழக்கம் உள்ளது.

வெள்ளை வெளேர் நிறத்தில் உள்ளவரைப் பற்றி கூறும் போது இவரின் வெளிச்சம் இருக்கும் போது விளக்கு தேவைப்படாது என்று கூறுவது போல் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். நபித்தோழர்கள் நபிக்குக் கட்டுப்பட்டதைக் கண்டு வியந்த உர்வா பின் மஸ்வூத் என்பார் இவர் சளியைத் துப்பினால் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் அதைத் தாங்குவார்கள் போல் உள்ளதே என்று மிகைபடக் கூறினார் என்று இதை எடுத்துக் கொண்டால் இதற்கு நேரடிப் பொருள் கொள்ள கூடாது. அதிகம் கட்டுப்படுகிறார்கள் என்ற கருத்தைத் தான் கொள்ள வேண்டும்.

இது போல் வருகின்ற செய்திகள் அனைத்தையும் இப்படிப் புரிந்து கொண்டால் இதில் மார்க்க அடிப்படையில் குறைகாண முடியாது. இப்படி கருத்து கொண்டால் இது ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் தேவை இல்லை. அவ்வாறு இல்லாமல் நிஜமாக நபிகள் நாயகம் எச்சிலைத் துப்பும் போது அதைப் பிடித்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள் என்று நேரடியான கருத்து என்று எடுத்துக் கொண்டால் அப்போது இது ஆதாரமற்ற செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடும்.

இந்தக் கருத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், திருக்குர்ஆன் போதனைக்கும் ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் ஆகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் ஒட்டு மொத்த அறிவுரைகள் மூலம் நாம் அறிந்து வைத்துளோம். இது போல் அவர்கள் முன்னால் நடந்து இருந்தால் அதைக் கண்டு வெறுப்பவர்களாகத் தான் அவர்கள் இருந்திருப்பார்கள்.

மனிதன் இயல்பாகவே அருவருப்படையும் செயலை தன் முன்னால் தனக்காக செய்யும் போது அதைக் கண்டு மகிழ்வது அவர்களின் நற்பண்புகளுக்கும் பொருந்தவில்லை. நபியின் இந்தப் பொதுவான பண்புகளைக் கூறும் எல்லா ஆதாரங்களுடனும் இந்தச் செய்திக்கு நேரடிப் பொருள் கொடுத்தால் அது மோதுகிறது.

சளி அருவருப்பானது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சளியை அருவருக்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட நபியவர்கள் தமது சளியை முகத்திலும், மேனியிலும் பூசிக்கொள்ள அனுமதித்திருக்க மாட்டார்கள்.

கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது.

உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி) னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும் போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம்.

தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

(புகாரி: 405)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசளின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் “மூக்குச் சளியை’ அல்லது “எச்சிலை’ அல்லது “காறல் சளியை’க் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி) விட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 407)

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் சளியை உமிழ்வதாக இருந்தால் அது முஸ்லிமின் மேனியில் பட்டு அல்லது அவரது ஆடையில் பட்டு அவருக்கு தொல்லை தராதவாறு சளியை மறைக்கட்டும் என நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஃது பின் அபீவக்காஸ்

(அஹ்மத்: 1461)

சளி அருவருக்கத்தக்கது என்றும் அது யாருடைய மேனியிலும் பட்டுவிடாதவாறு எச்சில் உமிழுமாறும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். நமது எச்சில், சளி பிறருடைய மேனியிலோ, ஆடையிலோ படுவது அவருக்குத் தொல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் நபியவர்கள் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களில் காண்கிறோம். இவை அனைத்துக்கும் மாற்றமாக நிச்சயம் நபித்தோழர்கள் செய்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகளார் எந்த ஒரு சமயத்திலும் தான் புகழப்பட வேண்டும், தனக்கு ஏனையோர் மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆதலால் தான் தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்து பிறர் தனக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸூபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) ‘அமருங்கள்’ என்றார். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.

(திர்மிதீ: 2769),(அபூதாவூத்: 4552)

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

(அஹ்மத்: 12068, 11895)(திர்மிதீ: 2678)

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தனக்காக எழுந்து நிற்பதையே வெறுத்த நபிகள் நாயகம் தமது சளியை மக்கள் முகத்தில் பூசிக் கொள்வதை அனுமதித்திருப்பார்களா? இது எழுந்து நின்று மரியாதை செய்வதை விடவும் மிக மோசமானதும் அருவருக்கதக்கதும் இல்லையா? சுயமரியாதையை வலியுறுத்தி போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தொண்டர்களின் சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்கான இக்காரியத்தை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

னித்து தெரிவதை விரும்பவில்லை

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள்.

நூல் : தப்ரானி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, ‘வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா’ என்று கூறினார்.

உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இந்தத் தண்ணீரையே தாருங்கள்’ எனக் கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே’ என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்’ எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள்.

அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி ‘இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 1636)

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

(இப்னு மாஜா: 3303)

சாதாரண இந்த மரியாதையையே ஏற்றுக் கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் தமது சளியைப் பிறர் முகத்தில் பூசி தனக்கு மரியாதை செய்வதை ஏற்றிருப்பார்களா? இப்படி மெய்யாகவே நடந்திருந்தால் இதைக் கண்டிக்காமல் மௌனியாக இருந்திருப்பார்களா?

நானும் மனிதனே

‘எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்’ என்று அழுத்தம் திருத்தமாக நபிகள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை (அல்குர்ஆன்: 18:110, 41:6) ஆகிய வசனங்களில் காணலாம்.  நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன்.

நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம் அவ்வாறு செய்யக் கூடாது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி)

(அபூதாவூத்: 1828)

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன்.

அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்’ என்றார்கள்.

(அஹ்மத்: 12093)

‘கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்’ என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

(புகாரி: 3445)

நபிகளாரின் சளியை மக்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொண்டு நபிகள் நாயகத்தின் தகுதியை விடவும் உயர்த்தும், வரம்பு மீறிய மரியாதையை அளிக்கும் இச்செயலை நபிகளார் அனுமதித்திருப்பார்களா?

மகத்தான நற்குணம் நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 68:4)

நற்குணத்தை விரும்பும் நாமே இதைச் சகிக்க மாட்டோம் எனில் உயர்ந்த நற்குணத்தில் இருக்கிற நபிகளார் இதை எப்படி சகித்திருப்பார்கள்? நபிகளாரின் சளியை ஸஹாபாக்கள் தங்கள் முகத்தில் தேய்த்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் அதன் நேரடிப் பொருளில் சொல்லப்பட்டு இருந்தால் இச்சம்பவம் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் நபிகளாரின் நற்குணத்திற்கு எதிராக, மாமனிதர் என்ற நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது.

ஆகவே மேற்கண்ட சளி பற்றிய செய்தியை நேரடி பொருளில் புரிந்து கொண்டால் அது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், புனித குர்ஆனின் வசனங்களுக்கும் மாற்றமாக அமைந்துவிடும் என்பதினால், நபித்தோழர்கள் நபிக்குக் கட்டுப்பட்டதைக் கண்டு வியந்த உர்வா பின் மஸ்வூத் என்பார் இவர் சளியைத் துப்பினால் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் அதைத் தாங்குவார்கள் போல் உள்ளதே என்று மிகைபடக் கூறினார் என்று இதை எடுத்துக் கொண்டால் இதற்கு நேரடிப் பொருள் கொள்ள கூடாது.

அதிகம் கட்டுப்படுகிறார்கள் என்ற கருத்தைத் தான் கொள்ள வேண்டும். இது போல் வருகின்ற செய்திகள் அனைத்தையும் இப்படி புரிந்து கொண்டால் இதில் மார்க்க அடிப்படையில் குறைகாண முடியாது. இப்படி கருத்து கொண்டால் இது ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவை இல்லை.

அவ்வாறு இல்லாமல் நிஜமாக நபிகள் நாயகம் எச்சிலைத் துப்பும் போது அதைப் பிடித்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள் என்று நேரடியான கருத்து என்று எடுத்துக் கொண்டால் அப்போது இது ஆதாரமற்ற செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடும், இந்தக் கருத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், திருக்குர்ஆன் போதனைக்கும் ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் ஆகிவிடும்.