16) குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

  1. குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா?

ஹதீஸ் :

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 2876)

(திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது.

எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(அஹ்மத்: 26316, 20112)

ஐந்து தடவை பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை குர்ஆனில் இருந்தது. அதை மக்களும் ஓதிக் கொண்டிருந்தார்கள். பிராணி ஒன்று வீட்டினுள் நுழைந்து எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த வசனத்தை உண்டு விட்டது. அதனால் இன்று அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று மேலுள்ள செய்திகள் கூறுகிறது. பல காரணங்களால் இச்செய்தி தவறாகிறது.

  1. குர்ஆனில் இருந்த ஒரு வசனம் தவறிவிட்டது என்று இந்தச் செய்தி கூறுகிது. ஆனால் குர்ஆனில் எதுவும் தவறாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகிறது.
15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)

குர்ஆனில் எந்த விதமான மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது என்று குர்ஆன் கூறும் போது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தை மக்கள் குர்ஆனுடன் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் முழுமையானதல்ல. இன்னும் இரண்டு வசனம் அத்துடன் சேர்க்கப்பட வேண்டியுள்ளது என்று இந்த செய்தி கூறுகிறது. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது.

  1. குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டதைப் போல் பல நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.
29:49 بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِىْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ‌ؕ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ‏

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 29:49)

ஆனால் இச்செய்தி எழுதிவைக்கப்பட்டிருந்த தாளை பிராணி சாப்பிட்டதால் தான் அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று கூறுகிது. இது சரியான காரணம் அல்ல. ஏனென்றால் எழுதி வைக்கப்பட்ட தாள் தொலைந்து விட்டாலும் பலருடைய உள்ளங்களில் அந்த வசனம் பாதுகாக்கப்பட்டிருக்கும். வசனம் தொலைந்து போனதற்குச் சொல்லப்படும் தவறான இந்தக் காரணத்தை வைத்தே இது உண்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

  1. குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனை தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது.

ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை.

அந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லாஹ் இறக்கிய வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து அந்த சமுதாயம் முழுவதும் எப்படி மறந்திருக்கும்?

  1. இந்த வசனம் பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டுவது தொடர்பானது என்று இந்தச் செய்தி சொல்கிறது. சிறுவர்களுக்குத் தான் பால்குடி சட்டம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது. சாலிமுடைய சம்பவத்தை விளக்கும் போது இது பற்றி தெளிவாகக் கூறினோம். பால்குடி உறவு இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தான் என்று குர்ஆன் கூறும் போது பெரியவர்களுக்கு 10 முறை பால் புகட்டுமாறு முரண்பாடாக குர்ஆன் கூறாது. 10 தடவையாக இருந்ததை 5 தடவையாக மாற்றி பருவவயதை அடைந்தவர்களுக்கு பால்புகட்டும் அசிங்கத்தை குர்ஆன் கூறுமா?

இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்று ஒரு தீர்ப்பு கூடத் தர மாட்டார்கள். இதைத் தங்களது வாழ்கையில் செயல்படுத்தவும் மாட்டார்கள். பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்ற சட்டம் குர்ஆன் கூறும் சட்டமாக இருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாமல் பல நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவ்வாரு யாரும் கூறவில்லை.

  1. பால்குடி உறவு ஏற்படுவதற்கு ஐந்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக இரண்டுக்கு மேல் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் மற்ற விமர்சிக்கப்படாத ஹதீஸ்களுடன் மோதுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரலி)

(முஸ்லிம்: 2872)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

(நஸாயீ: 3257)

  1. ஒருவரிடமிருந்து முரண்பட்ட பலவிதங்களில் செய்தி அறிவிக்கப்பட்டால் அந்தச் செய்திக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் முள்தரப் (குளறுபடியானது) என்று சொல்வார்கள். இவ்வாறு முரண்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் நம்பகமான உறுதிமிக்க ஆட்கள் வழியாக வந்தாலும் முரண்பாடு வந்து விட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஐந்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நாம் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் கூறுகிறது. பத்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் மூன்று முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஏழு முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கருதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு விதத்தில் முரண்பட்டு அறிவிப்பு வருவதால் இந்த செய்தி குளறுபடியானதாகி விடுகிறது.

எனக்குப் பால்புகட்டுவதற்காக ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர்களின் சகோதரியும் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளுமான உம்மு குல்சூம் (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். இவர் என்னிடம் வந்து செல்வதற்காக 10 முறை இவருக்கு நீங்கள் பால் புகட்டுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் (உம்மு குல்சூமிடம்) கூறினார்கள். உம்மு குல்சூம் எனக்கு மூன்று தடவை பால் புகட்டினார்கள்.

பின்பு அவர்கள் நோயுற்றதால் எனக்கு மூன்று தடவை தவிர அவர்கள் பாலூட்டவில்லை. உம்மு குல்சும் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக 10 முறை பாலூட்டாததால் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து செல்லவில்லை.

அறிவிப்பவர் : சாலிம் பின் அப்தில்லாஹ்

நூல் : பைஹகீ பாகம் : 7 பக்கம் : 457

சஹ்லா (ரலி) அவர்களுடைய சம்வத்தில் சம்பந்தப்பட்ட சாலிம் வேறு. மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சாலிம் வேறு. சாலிம் பின் அப்தில்லாஹ் என்பவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் பிறக்கிறார். சாலிமிற்கு 10 முறை பால் புகட்டுமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 2869)

ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466

பல குழப்பங்கள் இந்தச் செய்தியில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் ஆதரிக்கும் அறிஞர்களில் பலர் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகளை எழுப்பி இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் மாலிக் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளவில்லை.

சர்ஹஸீ குர்துபீ இப்னு அப்தில் பர் அலாவுதீன் என்ற இப்னுத் தர்குமானீ அபூ ஜஃஃபர் தஹாவீ நிலாமுத்தீன் நய்சாபூரி மற்றும் ஸர்கானீ உட்பட பலர் இந்த ஹதீஸ் தரும் தவறான கருத்துக்களை நிராகரித்துள்ளார்கள். குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜரின் கூற்று :

فتح الباري – ابن حجر 

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم

இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

அவர்களது விளக்கம்

குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறும் வசனத்தில் திக்ர் என்ற வாசகம் வந்துள்ளது. திக்ர் என்பது குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும். ஹதீஸைப் பாதுகாப்பதாகவும் அல்லாஹ் கூறுவதால் ஐந்து தடவை பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படும் என்ற வசனம் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இதைச் சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

குர்ஆனில் இல்லாத ஒரு வசனம் இருந்ததாகக் கூறுவதோடு தங்களின் அலட்சியத்தால் காணாமல் போய்விட்டது என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்டு வந்த அந்த வசனம் இதன் பிறகு ஓதப்படவில்லை. இன்று வரை நாமும் அந்த வசனத்தை ஓதுவது கிடையாது.

குர்ஆனில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓதப்பட்டு வந்த ஒரு வசனம் தொலைக்கப்பட்டு ஓதப்படாமல் இருந்தால் அவ்வசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக குர்ஆனில் மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதப்படும். இந்தக் கருத்தை அந்தச் செய்தி தரும் போது ஹதீஸின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று முற்றிலும் முரணாக சொல்வது ஏற்புடையதல்ல.

அந்த இரண்டு வசனமும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அந்த இரண்டு வசனத்தையும் இன்று தொழுகையில் இவர்கள் ஓதுவார்களா? பருவ வயதை அடைந்தவர்களுக்கு பெண்கள் 5 தடவை பால் புகட்ட வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? இறைவனுடைய இந்தச் சட்டத்தை செயல் படுத்துவார்களா?

ஹதீஸையும் இறைவன் பாதுகாத்துள்ளான் என்பது சரியான கருத்து தான். இதை நாம் மறுக்கவே இல்லை. குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்ற விதி ஹதீஸைப் பாதுகாப்பதற்கான விதிகளில் ஒன்று.

மேலுள்ள செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறிய செய்திகளுக்குள் இச்செய்தி அடங்காது. ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்துள்ளது. ஒருவரிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்தால் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஹதீஸ் கலையின் விதியின் பிரகாரமும் இது பாதுகாக்கப்பட்ட செய்திகளுக்குள் அடங்காது.

அவர்கள் விளக்கம்

பலருடைய அங்கீகாரம் இருந்தால் தான் குர்ஆன் என்று முடிவு செய்ய முடியும் என்று நாம் கூறினோம். ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் தான் தவ்பா என்ற அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இருந்ததாக ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தி புகாரியில் (4989) வது எண்ணில் இடம் பெற்றுள்ளது. பலரது கூற்று அவசியமென்றால் ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் இருந்த இந்த வசனங்களை குர்ஆன் என்று முடிவு செய்திருக்கக் கூடாது.

ஹுசைமா மட்டும் அறிவித்த அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கும் இந்த வசனத்தையும் குர்ஆனில் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் இருந்த இரண்டு வசனம் குர்ஆனில் சேர்க்கப்பட்ட போது எந்த நபித்தோழரும் அதை மறுக்கவில்லை. மாறாக எல்லோரும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று ஏற்றுக் கொண்டார்கள்.

குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தவர்கள் கூட இதை மறுக்கவில்லை. இந்த அடிப்படையில் பல நபித்தோழர்களின் அங்கீகாரம் அந்த இரண்டு வசனத்திற்கும் கிடைத்துள்ளது. இது போன்ற அங்கீகாரம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் செய்திக்குக் கிடைக்கவில்லை.

இது மட்டும் தான் குர்ஆன் என்று சிலர் முடிவு செய்திருக்கும் போது அவர்களுக்கு மாற்றமாக ஹுசைமா (ரலி) அவர்கள் இந்த வசனங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததை ஸைத் (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள். தங்களிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று அவர்கள் வாதிடவும் இல்லை.

ஆனால் இன்று நம்மிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று பல நபித்தோழர்கள் முடிவு செய்துவிட்ட போது இன்னும் இருக்கிறது என்று கூறுவது அந்த ஒட்டு மொத்த சமூகம் எடுத்த முடிவுக்கு எதிரானதாகும்.

ஹுசைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இரண்டு வசனங்களை நான் பெற்றுக் கொண்டேன் என்று ஸைத் (ரலி) அவர்கள் கூறுவதால் வேறு யாரும் இந்த வசனங்களைத் தெரிந்திருக்கவில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. எழுதி வைக்கப்பட்டதாக யாரிடத்திலும் இல்லை என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல நபித்தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார்கள்.

ஸைத் (ரலி) அவர்கள் குர்ஆனை நன்கு விளங்கியவராக இருந்தார்கள். அமானிதத்தைப் பேணக்கூடியவர். அறிவுள்ள இளைஞர். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை எழுதக் கூடியவர். இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைப் புகழ்ந்து சொல்கிறார்கள்.

(புகாரி: 4986)

வஹீயை எழுதி வந்த ஸைத் (ரலி) அவர்களுக்கு குர்ஆனைப் பற்றி நிறைய அறிவு இருந்தது. அதனால் தான் குர்ஆனைத் தொகுக்கும் பணிக்கு இவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் தேர்வு செய்தார்கள். குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் அதில் தவறு ஏதும் வந்து விடக் கூடாது என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் மற்ற மற்ற நபித் தோழர்களிடமிருந்த வசனங்களைத் திரட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்த போது அல்அஹ்ஸாப் எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன்.

குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இது தான்) இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்.

(அல்குர்ஆன்: 33:23)

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)

(புகாரி: 4784)

பல முறை அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத தான் கேட்டிருப்பதாக ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இருந்தது என்றும் கூறுகிறார்கள். தனக்கு நினைவில் இருக்கும் வசனத்தை ஏன் குஸைமாவிடம் சென்று கேட்கிறார்கள் என்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான்.

இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த குர்ஆன் வசனங்களை எழுத்தில் பாதுகாத்து வைத்திருக்கலாம். குர்ஆனுடைய பாதுகாப்பிற்கு இம்முறை ஏற்றது என்பதால் தனக்கு குர்ஆன் மனனமாக இருந்தாலும் எழுத்தை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று ஸைத் (ரலி) அவர்கள் கருதியுள்ளார்கள்.

இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் ஒரு நபருக்கு சமமானவர் அல்ல. நபி (ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியை இரண்டு நபருக்கு நிகரானதாக ஆக்கினார்கள். எனவே தவ்பாவின் கடைசியில் இடம்பெற்றுள்ள இரண்டு வசனம் குஸைமாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் தான் இந்த இரண்டு வசனமும் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.