16) இறை நினைவு இல்லங்கள்
இறை நினைவு இல்லங்கள்
அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை, உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
விளக்கம்: மனிதனுக்கு அவசியமாகத் தேவைப்படும் உறைவிடங்கள் இறை நினைவு நிறைந்ததாக இருக்க வேண்டும். பாட்டுக் கச்சேரி சினிமா நாடகங்கள் என்று வீட்டில் ஷைத்தானின் ஆதிக்கத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரப்படும் இல்லமாக நமது இல்லத்தை மாற்ற வேண்டும்.
இஸ்லாத்தின் அடிப்படையாகத் திகழும் திருக்குர் ஆனை தினமும் வீட்டில் ஒதும் பழக்கத்தை நாமும் ஏற்படுத்திக் கொள்வதோடு, நம் பிள்ளைகளையும் ஓதுபவர்களாக மாற்ற வேண்டும்.
திருக்குர்ஆன் ஒதாத இல்லங்கள் மண்ணறைகளுக்குச் சமம் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். (முஸ்லிம்: 1430) மேலும் திருக்குர்ஆன் ஒதப்படும் இல்லங்களில் ஷைத்தானின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.