16) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீரம்
16) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீரம்
பொதுவாக மெல்லிய உடலும் மென்மையான உள்ளமும் கொண்டவர்களிடத்தில் வீரத்தை பெருமளவு எதிர்பார்க்க இயலாது. முரட்டுத் தன்மை கொண்டவர்களிடத்தில் மாத்திரம் தான் இன்று வீரத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு மென்மையானவராகத் திகழ்ந்தார்களோ அந்த அளவுக்கு வீரமுள்ள ஆண்மகனாகவும் காட்சியளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் மக்கத்துக் காஃபிர்கள் சுற்றித் திரிந்து கொண்டும் பெருமானாரை தேடிக் கொண்டுமிருந்த நேரத்தில் எள் முனையளவு கூட அஞ்சாமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மதீனாவிற்குச் செல்வதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.
(மதீனாவிற்குப்) புறப்பட எனக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது உமக்குத் தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே (தாங்கள் புறப்படும் ஹிஜ்ரத்தின் போது) நானும் தங்களுடன் வர விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் பயணத்திற்காக தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
உஹுதுப் போரில் கலந்து கொண்டு எதிரிகளால் காயமுற்ற அபூபக்ர் (ரலி அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சாமல் மீண்டும் மறுநாள் எதிரிகளிடத்தில் போர் தொடுப்பதற்குத் தயாரானார்கள்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து தீமையிலிருந்து தம்மைக் காத்துக்கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு என்னும் (3 : 172) வது வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம் என் சகோதரி மகனே உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம்.
உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட போது இணை வைப்பவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள்.
(உஹுதில் கலந்து கொண்ட) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன் வந்தனர் என்று கூறினார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.
அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஒரு போருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மாவீரராகத் திகழ்ந்ததால் இப்பொறுப்பை ஏற்று அப்போரில் எதிரிகளைக் கண்டு ஓடாமல் அவர்களை வீழ்த்தினார்கள்.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பஸாரா குலத்தார் மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள். எங்களுக்கும் நீர்நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத் தொலைவு இருந்த போது இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள். வேறு சிலரைச் சிறைப்பிடித்தார்கள்.