பத்ரு, உஹது படிப்பினை – 6
முன்னுரை
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளில் பல போர்களங்களை சந்தித்துள்ளார்கள். ஒவ்வொரு போர்களங்களிலும் அல்லாஹ் ஏதாவது ஒரு படிப்பினை வைத்திருப்பான். அந்த வகையில் உஹுத் போரில் நபிகளாரின் கட்டளையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற ஓர் உயர்ந்த அடிப்படையை இந்த போரில் அல்லாஹ் உணர்த்தியுள்ளான்.
உஹுத் போர்
காலம் : ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதத்தில் இந்த போர் நடந்துள்ளது. ஷவ்வால் மாதத்தில் எந்த நாளில் நடந்தது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. 7,8,11,15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(பத்ஹுல் பாரி, பாகம்:7, பக்கம் : 345)
நடந்த இடம் : மதீனாவிலிருந்து சுமார் 3 மைலுக்கு குறைவான தூரத்தில் உள்ள உஹுத் மலைப்பகுதியில் நடந்தது.
(பத்ஹுல் பாரி, பாகம்:7, பக்கம் : 346)
வீரர்களின் எண்ணிக்கை : இணைவைப்பர்களில் 3000 (மூவாயிரம்) நபர்கள், முஸ்லிம்கள் 700 நபர்கள்.
(பத்ஹுல் பாரி, பாகம்:7, பக்கம் : 346)
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடந்த பத்ர் போரில் இணைவைப்பவர்களில் முக்கியமான பல பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது இணைவைப்பவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் ஒரு வருடம் கழித்து ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு மதீனாவை நோக்கி படையெடுத்து. உஹுத் மலையில் வந்து தங்கினர்.
இணைவைப்பவர்கள் மதீனாவை நோக்கி படையெடுத்து வந்ததை அறிந்த நபிகளார் அவர்கள் தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தனர்.
பெரும்பான்மையினர், எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டும் என்றே கூறினர்.
(பத்ஹுல் பாரி, பாகம்:7, பக்கம் : 346)
300 நபர்களை திருப்பி அழைத்தச் சென்ற நயவஞ்சகன்
நபிகளாருடன் உஹுத் போருக்கு 1000 (ஆயிரம்) நபர்களுடன் சென்றார்கள்.
வழியில் நயவஞ்சனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவன் 300 நபர்களின் மனதை மாற்றி திரும்ப மதீனாவிற்கு
அழைத்து சென்றுவிட்டான்.
(பத்ஹுல் பாரி, பாகம்:7, பக்கம் : 346)
உஹுதுப் போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்ற போது, நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்கüல் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்து விட்டனர். (இவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கüன் தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து விட்டார்கள். ஒரு பிரிவினர், “(திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம்” என்று கூறினர். மற்றொரு
பிரிவினர், “அவர்களை நாம் கொலை செய்யக்கூடாது” என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் இறங்கியது:
فَمَا لَـكُمْ فِىْ الْمُنٰفِقِيْنَ فِئَـتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْاؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வகையான கருத்துக்கொண்ட) பிரிவினர்களாய் ஆகி விட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகüன் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான்.
(4:88)
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
தடுமாறிய இருபிரிவினர்
எதிரிகளின் எண்ணிக்கைப் பார்த்து நபிகளாருடன் வந்த பனூ சலமா, பனூ ஹாரிஸா கோத்திரத்தினர் தடுமாறினர். மதீனாவிற்கு போய்விடலாமா? போர்களத்தை சந்திக்கலாமா? என்ற எண்ணம் ஏற்பட்டபோது அல்லாஹ் அவர்களின் தடுமாற்றத்தை போக்கி உறுதியை வழங்கினான்.
“(உஹுதுப் போரில்) உங்கüல் இரு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த
நேரத்தையும்…” என்னும் இந்த (3: 122ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், “அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்” என்று (எங்களை மேன்மைப் படுத்திக்) கூறுகிறான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (4051)
முன் ஏற்பாடுகள்
போர்களத்தில் எதிரிகள் எந்த வழிகளில் எல்லாம் ஊடுருவி தாக்கக்கூடும் என்பதை நபிகளார் கணித்து மலையின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் தலைமையில் ஐம்பது அம்பெய்யும் வீரர்களை நிற்க வைத்தார்கள். அவர்களிடம், நாங்கள் வெற்றிபெற்றாலும் கீழே வரக்கூடாது. தோல்வியடையும் நிலை ஏற்பட்டாலும் எங்களுக்கு உதவலாம் என்றுகூட உங்கள் இடத்தை விட்டும் வரக்கூடாது என்று நபிகளார் கட்டளையிட்டார்கள்.
இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா (ரலி), நூல் :புகாரி (4043)
சிறுதூக்கம்
மன கவலையை அகற்றி புத்துணர்ச்சியுடன் போரை சந்திக்கும் வகையில் அல்லாஹ் முஸ்லிம் வீரர்களுக்கு சிறு தூக்கத்தை ஏற்படுத்தினான்.
உஹுதுப் போரின் போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்து விட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி),
நூல் : புகாரி (4068)
மது அருந்திய நிலையில் நபித்தோழர்கள்
ஹிஜ்ரி நான்காம் ஆண்டில்தான் முழு மதுவிலக்கு அமலுக்கு வந்தது. எனவே சில நபித்தோழர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நடந்த உஹுத் போர்களத்தில் மது அருந்திய நிலையில் போரில் கலந்து கொண்டு கொல்லப்பட்டார்கள்.
(மது விலக்கு அமலுக்கு வரும் முன் நடந்த) உஹுதுப் போர்
அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு (அந்தப் போரில்) உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (4044)
போர் துவக்கத்தை பற்றியும், முக்கியமான பல செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!