16) ஸலாம் கூறுவதின் முறைகள்
ஸலாம் கூறுவதின் முறைகள்
சிறியவர் பெரியவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்
6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுமையான ஸலாமே நிறைவான நன்மையைத் தரும்
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
சிறியவர்களுக்கும் பெரியவர்கள் ஸலாம் சொல்லலாம்
(ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
பிறர் வீட்டில் மூன்று முறை ஸலாம் கூறி, அனுமதி பெற்றே
நுழைய வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
யூத கிறித்தவர்களைப் போன்று ஸலாம் கூடாது
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா-(நஸாயீ: 10100). பாகம் 6, பக்கம் 92
பெண்களுக்கு ஸலாம் கூறலாம்
பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
மீண்டும் ஸலாம் சொல்லுதல்
5200. உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ, அல்லது கல்லோ குறிக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தால் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து இருக்கக் கூடாது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
ஸலாம் சொல்வதின் மூலம் உறங்கியவர்களை
தொந்தரவு செய்யக் கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பாதவாறு விழித்திருப்பவருக்கு கேட்கக்கூடிய வகையில் சலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர் : மிக்தாத் பின் அஸ்வத் (ரலி)
நூல்கள் :(அஹ்மத்: 23822, 22692)
வஅலைக்கஸ் ஸலாம் என்றும் பதில் சொல்லலாம்
ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (பள்ளிக்குள் நுழைந்த அவர்) தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள்.
ஆகவே அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். இரண்டாம் தடைவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் (தொழுகை முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
மாற்று மதத்தை சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுவது தவறில்லை
இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிம் அல்லாத தன்னுடைய தந்தைக்கு ஸலாம் கூறியுள்ளார்கள்.
“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.
12. ‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
5663. உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதன் மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டு (நோய்வாய்ப்படடிருந்த) ஸஅத்பின் உபாதா(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது.
அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் இருந்தார் – அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் முன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கிகளாக இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள்.
(எங்கள்) வாகனப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, ‘எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்’ என்று கூறினார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தம் வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத்(ரலி)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுக்கும் யகூதிகளும் முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து ஸலாம் கூறியுள்ளார்கள். இதில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சலாத்தை எத்திவைத்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், ‘ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்’ என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக ‘வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும்.
மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்’ என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, ‘நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஒருவர் தனது ஸலாத்தை பிறரிடத்தில் எடுத்துச் சொல்லுதல்
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
3387. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்து வீட்டுக்குள் சென்றனர். எனது தயார் உம்மு சுலைம் இனிப்பான உணவைத் தயார் செய்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார் என்று தெரிவித்தேன்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)