15) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-2

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-2

தரீக்காவைப் பின்பற்றுவது இணைவைப்பாகும்

தங்களுடைய சைகுமார்கள் மறைவான விசயங்களையெல்லாம் அறிவார்கள் என்று தரீக்காவைப் பின்பற்றக் கூடியவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டும் இருப்பதால் இவ்வாறு நினைப்பது இணைவைப்பாகும்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 6:50)

அந்த நேரம் எப்போது வரும்? என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்றுதான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(அல்குர்ஆன்: 7:187)

நபி (ஸல்) அவர்களுக்கே மறைவான ஞானம் இல்லை என்கிற போது வேறு யாருக்கும் மறைவான ஞானம் இருக்கவே முடியாது.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று ஒரு சிறுமி நபியவர்களைப் பார்த்து பாடிய போது அவ்வாறு பாடாதே. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானதை அறிய முடியாது என்று நபியவர்கள் கூறினார்கள்.

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸை கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் ரஹ்.. அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்க் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

(புகாரி: 4001)

நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என யார் உங்களிடம் அறிவிக்கிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார் (27:65) என்று கூறுகின்றான்.

அறிவிப்பவர் : மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்)

(புகாரி: 7380)

சோதிடம் குறி பார்த்தல் இணைவைப்பாகும்

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்று மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன. இதை விளங்காமல் வருங்காலத்தில் நடக்கவிருப்பதை சோதிடக்காரனும் குறி சொல்பவனும் அறிவான் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்களிடம் சென்று வருங்காலத்தை கணித்துச் சொல்லுமாறு கூறுகிறார்கள். இன்றைக்கு நவீனக் கருவிகள் மூலம் இந்த சோதிடம் பார்க்கப்படுகிறது. எடைபோடும் கருவிகள் நம் எடையைத் தெரிவிப்பதுடன் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் தெரிவிக்கிறது. இதை நம்புவதும் இணைவைப்பாகும்.

நான், அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாமை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே? என்றேன். அதற்கு அவர்கள் சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள் என்றார்கள். நான் எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே? என்றேன். அதற்கு நபியவர்கள் இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது அவர்களை அல்லது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி)

(முஸ்லிம்: 935)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் ; ஸஃபிய்யா (ரலி)

(முஸ்லிம்: 4488)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல என்று பதிலளித்தார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?) என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 6213)

சகுணம் பார்த்தல் இணைவைப்பாகும்

பூணை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும்; கை அரித்தால் செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். ஆந்தை கத்தினால் வீட்டிற்கு ஆகாது. பல்கத்தினால் அது நற்சகுணம். இப்படி பலவிதமான மூடநம்பிக்கைகளை மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நன்மை வந்தாலும் தீமை ஏற்பட்டாலும் அது அல்லாஹ்வின் நாட்டத்தால் வந்தது என்றுதான் நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:51)

குறிப்பிட்ட நட்சத்திரங்களால்தான் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை நபியவர்களின் காலத்தில் சில மக்களிடம் இருந்தது. அல்லாஹ்வால் நடந்தது என்று கூறுவதற்குப் பதிலாக நட்சத்திரத்தால்தான் மழை வந்தது என்று நம்புவதை இறை மறுப்பு என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே நாமும் இதனால்தான் நடந்தது. இதனால்தான் நடக்கவில்லை என்று அல்லாஹ்வை மறந்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள்.

தற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர். அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும், அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சைத் பின் காலித் (ரலி)

(புகாரி: 846)

சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும். சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(அபூதாவூத்: 3411)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும் என்று சொன்னார்கள். மக்கள், நற்குறி என்பதென்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5754)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 6472)

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் இணைவைப்பாகும்

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து காரியங்களைத் துவங்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. குறிப்பிட்ட நேரம் தீங்கிழைக்கும் என்றும் குறிப்பிட்ட நேரம் நன்மை பயக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். நன்மை தீமை யாவும் அல்லாஹ் விதித்த விதியின் படியே நடக்கிறது என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக குறிப்பிட்ட காலத்தினால்தான் நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று நம்புவது இணைவைப்பாகும்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட காலத்தை கெட்ட காலம் என்று கூறுவது இறைவனை ஏசுவதற்கு நிகரானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 7491)

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத்தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல. எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை. உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை.

அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில்தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தல் உயர்ந்த ஒருவரின் பெயரைக் கூறி சத்தியம் செய்யும் வழக்கம் மக்களிடம் உள்ளது. அல்லாஹ்வை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். மற்றவர்கள் மீது சத்தியம் செய்வது இணைவைப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(புகாரி: 2679)

எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3836)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸôவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூது விளையாடுவோம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 4860)

யூதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் இணைவைக்கிறீர்கள். (அல்லாஹ்விற்கு) நிகரை ஏற்படுத்துகிறீர்கள். நீ நாடியதும் அல்லாஹ் நாடியதும் (நடந்து விட்டது) என்று கூறுகிறீர்கள். கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுகிறீர்கள். (இது இணைவைப்புத் தானே) என்று கேட்டார். எனவே சத்தியம் செய்ய விரும்பினால் கஃபாவின் இறைவனின் மீது ஆணையாக என்று கூறுமாறும் அல்லாஹ் நாடியதும் பிறகு நீ நாடியதும் (நடந்துள்ளது) என்று கூறுமாறும் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : குதைலா (ரலி)

(நஸாயீ: 3713)

மற்றவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல் இணைவைப்பாகும் அல்லாஹ்விற்காக பிராணிகளை அறுத்துப் பலியிடுவது வணக்கமாகும். இந்த வணக்கத்தை கப்ரு வழிபாட்டுக்காரர்கள் இறந்தவர்களுக்கு செய்து வருகிறார்கள். தர்ஹாக்களுக்குச் சென்று இறந்தவருக்காக அறுத்துப் பலியிடுகிறார்கள். இது இணைவைப்பாகும்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.

(அல்குர்ஆன்: 2:173)

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன்: 108:2)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக் கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(முஸ்லிம்: 4001)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (இனி,) தலைக் குட்டி(யைப் ப-யிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை. (ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி ஃபரஉ ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் ப-யிடப்படும் பிராணி அத்தீராவாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5473)

மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்தல் இணைவைப்பாகும்

நான் நாடியது நடந்தால் ஏழைகளுக்கு உணவளிக்கிறேன். தர்மம் செய்கிறேன் என்று கூறுவது நேர்ச்சை செய்வதாகும். நேர்ச்சை என்பது வணக்கமாக இருப்பதால் அல்லாஹ்விடம் மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும். தர்ஹாக்களுக்குச் சென்று நான் நாடியது நடந்தால் அதை செய்வேன் இதை நிறைவேற்றுவேன் என்று ஒருவன் நேர்ச்சை செய்துவிட்டால் அவன் இணைவைத்தவனாக ஆகி விடுவான்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன்: 2:270)

இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக  அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன் என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 3:35)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 4624)

தர்ஹாக்களில் நேர்ச்சை செய்பவர்கள் நாங்கள் அல்லாஹ்விற்காகத்தான் நேர்ச்சை செய்கிறோம். இதன் நன்மை இறந்துவிட்ட இந்த நல்லடியாருக்குப் போக வேண்டும் என்பதற்காகச் செய்கிறோம் என்று பொய்யான வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். இவர்கள் கூறுவது பொய்யாகும். தர்ஹாக்களுக்குச் செல்லும் அதிகமானோர் இறந்து விட்டவர்களை வணங்கும் அடிப்படையிலேயே இதை செய்கிறார்கள்.

இவர்கள் கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நேர்ச்சையில் அல்லாஹ்விற்காக செய்வது எப்படி முக்கிய நிபந்தனையாக இருக்கிறதோ அது போன்று நேர்ச்சை நிறைவேற்றப்படும் இடம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் அரங்கேற்றப்படும் இடமாக இருக்கக் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனையாகும்.

மார்க்கத்திற்கு மாற்றமான பல அம்சங்கள் இணைவைப்பு உட்பட தர்ஹாக்களில் அரங்கேறுவதால் அங்கு சென்று அல்லாஹ்விற்காகவும் நேர்ச்சை செய்வது கூடாது. இதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தைக் குர்பானி செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆகவே அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்துள்ளேன். (அதை நிறைவேற்றலாமா…?) என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அறியாமை காலத்தவர்கள் வணங்கிய சிலைகளில் ஏதாவது ஒரு சிலை அங்கிருக்கிறதா..? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் இல்லை என்றார்கள்.

அவர்களின் விழாக்களில் எந்த விழாவாவது அங்கு கொண்டாடப்படுகிறதா? என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லையென்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய நேர்ச்சையை நீ நிறைவேற்றலாம் (என்று கூறி) அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களிலும், ஆதமுடைய சந்ததிக்கு சக்திக்கு மீறிய காரியங்களில் நேர்ச்சை நிறைவேற்றுதல் கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி)

(அபூதாவூத்: 2881)

தர்ஹாக்களில் நபியவர்கள் தடுத்த விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. சிலைகளுக்கு பதிலாக கப்ருகள் கட்டப்பட்டு வணங்கப்படுகிறது. எனவே அங்கு செல்வதே கூடாது.

பிறரது காலில் விழுவது இணைவைப்பாகும்

தரீக்காவாதிகள் தங்களது சைகுமார்களின் காலில் விழுகிறார்கள். காலை கழுவி அந்த நீரை குடிக்கிறார்கள். இவ்வாறு செய்வது இணைவைப்பாகும். ஏனென்றால் நமது தலை அல்லாஹ்விற்கு மட்டுமே சாய வேண்டும்.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

(அல்குர்ஆன்: 41:37)

உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 7:206)

அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். அல்குர்ஆன் (25 : 64) நபி (ஸல்) அவர்களுக்கு சிரம்பணிய நபித்தோழர்கள் அவர்களிடம் அனுமதி கேட்ட போது நபியவர்கள் அதை தடை செய்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கே சிரம் பணியக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கும் போது அவர்களின் கால்தூசிக்கும் ஈடாகாத போலி சைகுமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் கண்டவர்களுக்கும் எப்படி சிரம் பணியலாம்? 

நான் எமன் நாட்டிலிருந்து திரும்பி வந்த போது அல்லாஹ்வின் தூதரே யமன் நாட்டில் உள்ள மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிகிறார்கள். எனவே நாங்கள் உங்களுக்கு சிரம் பணியட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அ ல் ல ô ஹ் வி ன் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு சிரம் பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன். (அதையே நான் தடை செய்திருக்கும் போது எனக்கு சிரம் பணிவதை எப்படி அனுமதிப்பேன்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

(அஹ்மத்: 20983)