15) சிந்தனைக்கு முக்கியத்துவமா?

நூல்கள்: வஹியில் முரண்பாடா?

15) சிந்தனைக்கு முக்கியத்துவமா?

அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவை நபியவர்கள் சொன்னவை கிடையாது என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்யும் போது, நமது பிரச்சாரத்தை ஆதாரத்தை முன்வைத்துப் பேச, எழுத திராணியற்றவர்கள் நம்மீது பொய்யான விமர்சனங்களை அள்ளி வீசுவதின் மூலம் இந்த சத்தியக் கொள்கைக்கு அசத்தியச் சாயம் பூசிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறும்போது நம்மை எதிர்க்கும் ஸலபி முத்திரையை ஒட்டிக் கொண்டவர்களும், மத்ஹபுவாதிகளும் “அறிவுக்குப் புலப்படவில்லை” என்று கூறி நாம் ஹதீஸ்களை மறுப்பதாக குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

அறிவுக்குக்குப் புலப்படாததை எல்லாம் மறுப்பவர்கள் என்ற ரீதியில் இவர்கள் நம்மை விமர்சிப்பதில் துளியும் உண்மை கிடையாது. நபிமொழியை விட நமது அறிவே மேலானது, அறிவுக்குப் பொருந்தவில்லை எனில் மறுத்துவிட வேண்டியது தான் என்பதை என்றைக்கும் நாம் பிரச்சாரம் செய்தது கிடையாது. மாறாக அறிவுக்குப் புலப்படாத எண்ணற்ற நபிமொழிகளை நாம் நம்பி நடைமுறைப்படுத்தவே செய்கிறோம்.

காற்றுப் பிரிதல் மூலம் உளூ முறிந்தால்

எந்த இடத்தை கழுவுவது?

காற்றுப் பிரிதல் நிகழ்ந்தால் உளூ முறிந்து விடும் என்பது நபிமொழி. ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) கூறினார்கள். அப்போது “ஹள்ரமவ்த்’ என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் “அபூஹூரைராவே! ஹதஸ் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹூரைரா (ரலி), “சப்தத்துடனோ அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்” என்று விளக்கமளித்தார்கள்.

(புகாரி: 135, 176, 106, 107)

காற்றுப் பிரிதல் நிகழ்வது ஒரு இடம், ஆனால் அதற்காக நாம் உளூ செய்யும் போது கழுவுவது இதர இடங்கள் ஆகும். காற்றுப் பிரிதல் ஏற்பட்ட பின்புறத்தைத் தவிர கை, கால், முகம் என கழுவி விட்டுச் செல்வது அறிவுக்கு புலப்படவில்லை தான். அறிவுக்குப் புலப்படாததை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸை மறுத்திருக்க வேண்டுமே!

காலுறை அணிந்தவர்கள் மஸ்ஹ் 

செய்ய வேண்டிய இடம் எது?

மேலும் காலுறை அணிந்தவர்கள் உளூ செய்யும் போது காலை கழுவுதற்குப் பதிலாக, காலுறையின் மேற்புறம் மஸஹ் செய்யலாம் என்ற சலுகையை நபிகளார் வழங்கியுள்ளார்கள். இதுவும் நபிமொழிதான்.

நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி)

நூல்கள் :(புகாரீ: 182),(முஸ்லிம்: 404)

நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல்கள் :(அபூதாவூத்: 140),(அஹ்மத்: 699)

காலுறையில் மஸஹ் செய்வதாக இருந்தால் அதற்கு தகுதியான இடம் அதன் கீழ்ப்புறம் தான். ஏனெனில் காலுறையின் கீழ்ப்புறம் தான் அசுத்தமடையும். அசுத்தமாகும் கீழ்ப்பகுதியின் மேல் மஸஹ் செய்வதை விட்டுவிட்டு மேல்புறம் மஸஹ் செய்வது அறிவுக்குப் புலப்படவில்லையே! அறிவுக்குப் புலப்படாததை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தால் இந்த ஹதீஸையும் மறுத்திருக்க வேண்டுமே!

மாதவிலக்கு ஏற்பட்ட பெண் ஏன்

தொழுகையைக் களா செய்யக் கூடாது?

பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்டால் தொழுவது, நோன்பு நோற்பது கூடாது. மாதவிலக்கு காலத்தில் விடுபட்ட கடமையான நோன்பை களாச் செய்ய வேண்டும், ஆனால் தொழுகையை களாச் செய்ய தேவையில்லை என்பது நபிமொழி.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 508)

தொழுகை, நோன்பு இரண்டும் வணக்க வழிபாடுகள் தான். நோன்பை களாச் செய்ய அனுமதித்து, தொழுகையைக் களாச் செய்ய கூடாது என்று சட்டம் சொல்வதும் அறிவுக்கு புலப்படவில்லைதான்.

ஒரு குவளை பாலில் 70 க்கும் மேற்பட்டோர் வயிறாற அருந்தியது, சிறிதளவு தண்ணீரில் அதிகமான நபர்கள் உளூ செய்தது போன்ற நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்வுகளும் அறிவுக்குப் புலப்படவில்லை தான். இப்படி சொர்க்கம், நரகம், மறுமை, மரணித்த பின் எழுப்பப்படுதல் போன்ற எத்தனையோ அறிவுக்குப் புலப்படாத விஷயங்களை நபிமொழி உறுதிப்படுத்திய பின் அவற்றை உறுதியாக நம்புவதோடு தர்க்கரீதியான வாதங்களோடு அதை மக்களிடையே பிரச்சாரமும் செய்து வருகிறது.

அறிவுக்குப் புலப்படாதவற்றை மறுப்பது இந்த ஜமாஅத்தின் கொள்கை எனில் இவைகளை மறுத்திருக்க வேண்டுமே. இதிலிருந்து இவர்களின் குற்றச்சாட்டு சத்தியத்தை நோக்கி வரும் மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்காக கூறும் அல்லது அவர்களது கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சொல்லப்படும் பொய்க்குற்றச்சாட்டே என்பதை அறியலாம். அறிவுக்குப் புலப்படாத நபிமொழிகளை மறுத்து விடுகிறது என்ற வாதம் எதிரிகளால் திரித்துக் கூறப்படும் பொய்யே என்பது தெளிவாக அம்பலமாகிறது.