15) சந்தேகமானதை விடுவோம்
சந்தேகமானதை விடுவோம்
மேலும் ஒரு பொருளில் சந்தேகத்தின் சாயல் தென்பட்டால் அதை விட்டுத் தவிர்ந்து கொள்ளவதே ஈமானுக்கு பாதுகாப்பு.
‘அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள்.
எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.
எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் சந்தேகமான எல்லா விஷயங்களையும் தடுப்பவர்களாக இருந்தார்கள்.
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “”நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்.
“நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)
இந்த சம்பவத்தில் அறுத்துப்பலியிடுபவர் அல்லாஹ்வுக்காக பலியிட்டாலும் பலியிடப்படும் இடத்தில் சிலைகள் இருக்கின்றதா? என நபி வினவுகிறார்கள். ஏனென்றால் சிலைகள் இருந்து அங்கே அல்லாஹ்வுக்காக பலியிட்டாலும் சிலைகளுக்கு பலியிட்டதைப் போன்ற தோற்றம் ஏற்படும். ஒரு தீய செயலுக்கு ஒப்ப நடப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் இதையும் தடைசெய்கிறார்கள்.
திருமணத்தில் அன்பளிப்பு என்று பெண் வீட்டார் சொல்வதும் இது போன்றதாகும். நடைமுறையில் இது தெளிவான வரதட்சணையாக தரப்படும் போது இதை அன்பளிப்பு என்ற பெயரில் வாங்குவது எந்த வகையில் நியாயம்? சந்தேகமானதை விடுவதில் நபி (ஸல்) அவர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “”இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.
தர்மப் பொருள்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஹராம். அதனால் கீழே கிடக்கின்ற பேரீச்சம் பழம் ஸதகவாக இருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததால் அதைவிட்டு விலகிவிட்டார்கள்.
திருமணத்தை ஒட்டி மாப்பிள்ளைக்கு பெண்வீட்டாரிடமிருந்து பொருள் தரப்பட்டால் அது உண்மையில் அன்பளிப்பாக இருப்பதைக் காட்டிலும் வரதட்சணையாக இருப்பதற்கே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த அன்பளிப்பு வரதட்சணையாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தாலே அதை வாங்கக்கூடாது.
அதே நேரத்தில் திருமணம் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கழித்து இதுபோன்ற அன்பளிப்புக்களைக் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அது அன்பளிப்பு தான். இது திருமணத்திற்காகக் கொடுக்கப்பட்டதில்லை. மாறாகக் குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் கொடுக்கப்பட்டதாகும்.
நமது உள்ளங்களை அல்லாஹ் நன்கறிந்தவன். ஒருவர் வரதட்சணையை அன்பளிப்பு எனக் கூறி நியாயப்படுத்தினால் உலக மக்களை அவர் ஏமாற்றிவிட்டதாக நினைத்தாலும் அல்லாஹ்விடம் அவர் பதிலளிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.