15) குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

15) குர்ஆனைக் கேட்டு இளகிய உள்ளம்

அரபு தேசத்திற்கே தலைமை தாங்கும் அளவிற்கு திறமையும், ஆற்றலும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த போதும் திருக்குர்ஆனிற்கு முன்னால் அவர்கள் நடுநடுங்கினார்கள். இவர்களின் அழுகை மக்கத்து காஃபிர்களின் குடும்பங்களை நிலைகுலையச் செய்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தோன்றிய போது தமது வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும், குழந்தைகளும் அவர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அபூபக்ர் மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும் போது அவரால் தமது கண்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

(புகாரி: 476)

நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களைத் தொழவைக்குமாறு கட்டளையிட்டார்கள். குர்ஆன் ஓதும் போது அபூபக்ர் கடுமையாக அழத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்கள் வேறு யாராவது ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அப்துல்லாஹ் (ரலி) கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் இளகிய உள்ளம் படைத்தவர். அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்துவிடும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் தமது பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அபூபக்ரை தொழவைக்கச் சொல்லுங்கள். நீங்கள் யூசுப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள் என்றார்கள்.

(புகாரி: 682)