15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

15 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான முஸ்லிம்

2000ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்போது பீகார் மாநிலம், முஸாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் ‘அஹ்மதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஒரு குண்டு வெடிப்பு நடந்தவுடன் புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் போலிசாருக்குக் கிடையாது. மாறாக எப்படி குண்டு வெடிப்பு நடந்தாலும் அதில் முஸ்லிம்களை சிக்க வைக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி. இந்த விதியின்படி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் சிக்க வைக்கப் பட்டவர்தான் குலாம் அஹ்மது வானி.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் உ.பி.மாநிலம், லக்னோவில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டு இருந்தார். 2001ஆம் ஆண்டு இவரைக் கைது செய்த போலிசார், இவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்டதாகச் சொல்லி, வெடி பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவை அனைத்தும் ஜோடிக்கப் பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளாக லக்னோ சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை.

வெடிகுண்டு வழக்குகளில் அவ்வளவு எளிதில் நீதிமன்றம் ஜாமீன் தந்து விடாது. இதனால் சிறையிலேயே அடைபட்டுக் கிடந்தார் குலாம் அஹ்மது வானி. ஆனால் இவர் மீதான வழக்கு மட்டும் உ.பி.யின் பாரபங்கி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த பாரபங்கி நீதிமன்றம் குலாம் அஹ்மது வானி மற்றும் இவரோடு குற்றம் சாட்டப்பட்ட முபீன் ஆகிய இருவரும் நிரபராதிகள். இவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.

இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய குலாம் அஹ்மது வானியின் வழக்கறிஞர் எம்.எஸ்.கான் இருவருக்கும் எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் அரசு தரப்பு நிரூபிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது’ என்றார். குலாம் அஹ்மதுவானி அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்தவர். மகன் படிப்பை முடித்து, வேலைக்குச் சென்று, கை நிறைய சம்பாதித்து, குடும்பத்தைக் கவனிப்பான் என்றுதானே இவரது பெற்றோர்கள் கனவு கண்டிருப்பர்.

இவர்களின் கனவைக் கலைத்து, அப்பாவி மகனின் விடுதலைக்காக 15 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்துவதற்கு இவர்கள் எவ்வளவு செலவழித்திருப்பார்கள்? எவ்வளவு கண்ணீரை சிந்திருப்பார்கள்? வெளியில் இருக்கும் பெற்றோர் இவ்வளவு துன்பத்தில் உலழ, சிறைக்குள் குலாம் அஹ்மது வானி என்ன பாடுபட்டிருப்பார்? இதற்கெல்லாம் என்ன நிவாரணம்? ஒன்றுமே இல்லை. போலீசால் நினைத்தால் எந்த அப்பாவி முஸ்லிம் மீதும் வெடிகுண்டு வழக்கை பதிவு செய்து, அவரது வாழ்க்கையை சின்னாபின்னப் படுத்தலாம். இது குறித்து யாருமே கேள்வி கேட்க முடியாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

இந்தக் கொடுமையில் குலாம் அஹ்மது வானி மட்டும் சிக்க வைக்கப்பட வில்லை. இவரைப் போல் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சிக்க வைக்கப்பட்டு சின்னா பின்னப் படுத்தப் பட்டுள்ளனர். இந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க இந்திய ஜனநாயகத்தில் அற்புதமான ஆயுதம் இருக்கிறது. அதுதான் வாக்குச் சீட்டு. இந்த வாக்குரிமையை முஸ்லிம்கள் ஏனோ தானோ என்று பயன்படுத்தாமல் ஒழுங்கான முறையில் பயன்படுத்தினால், இது போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட முடியும்.

இந்தியாவில் 15கோடி முஸ்லிம் வாக்குகள் உள்ளன. மோடியின் பி.ஜே.பி. அரசு பெற்ற மொத்த வாக்குகள் 17 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 549 தான். அரசியல் விழிப்புணர் வோடு இந்த வாக்குகளை முஸ்லிம், சமுதாயம் பயன்படுத்த முன்வரும் போது, அவர்களை பிடித்தாட்டும் கொடுமைகள் அனைத்தும் தானாகவே விலகிச் செல்லும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

Source: unarvu ( 26/5/17 )