15) அண்டை வீட்டாரிடம் தவறான உறவு

நூல்கள்: அண்டை வீட்டார் உரிமைகள்

15) அண்டை வீட்டாரிடம் தவறான உறவு

அண்டைவீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகளில் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக திகழ்வது அவசியமாகும் பக்கத்துவீட்டில் இருக்கிறார், அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்து கொள்ளவேண்டும்.

அண்டைவீட்டார் வெளியூர் சென்றுவிட்டார் எனவே நாம் அங்கு சென்று திருடலாம் விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.

عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»
நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது? ” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ” அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், ” நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு “பிறகு எது” என்று கேட்டேன்.  “ உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள் :(புகாரி: 4477),(முஸ்லிம்: 141)

பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம், அடுத்த நம்பியவர்களுக்கு துரோகம் செய்தல் இன்னொரு குற்றம், இந்த இரண்டும் சேர்ந்து பெரும்பாவமாக மாறிவிடுகிறது.

நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று தம் தோழர்களிடம் நபி அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்” ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்” என்று கூறினார்கள்.

திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது : அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள் எனவே அது ஹராமாகும்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி)

(அஹ்மத்: 22734)

ஒருவர் பக்கவீட்டு பெண்ணிடம் விபச்சாரம் செய்வது (மற்ற) பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையைவிட மிகக் கடுமையானதாகும் அதாவது ஒருவர் பக்கவீட்டில் திருடுவது (மற்ற) பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக்கடுமையானதாகும்.