15) ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள்
ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள்
அனைவருக்கும் அழகிய முறையில் வாழ்த்து
(முகமன், ஸலாம்) கூறுதல்
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
எல்லா வீடுகளிலும் (முகமன், சலாம்) கூற வேண்டும்
வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இஸ்லாமிய பண்புகளில் சிறந்தது வாழ்த்து
(முகமன், ஸலாம்) கூறுதல்
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
முஸ்லிமின் கடமைகளில் ஒன்று முகமன் கூறுதல்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை
- ஸலாமுக்கு பதிலுரைப்பது,
- நோயாளியை விசாரிப்பது,
- ஜனாஸாவைப் பின்தொடர்வது,
- விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது
- தும்முபவருக்கு மறுமொழி கூறுவது
ஆகியவையாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
முதலில் ஸலாம் கூறுபவரே அல்லாஹ்விடத்தில் நெருக்கமிக்கவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
ஒருவரை சந்தித்து நலம் விசாரிப்பதும் நன்மைதான்
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முஸாஃபஹா செய்ய வேண்டும்
ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
ஒரு கையால் தான் முஸாஃபஹா செய்ய வேண்டும்
ஒரு உள்ளங்கையை மறு உள்ளங் கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும். இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும். இரு பக்கமும் உள்ளங்கைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதை தெளிவு தெளிபடுத்துகிறது.
நபி வாழும் காலத்தில் நபித்தோழர்களிடம் முஸாஃபஹா
செய்யும் பழக்கம் இருந்தது
நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து என்னிடம் முஸாஃபஹா கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)
ஆண்கள் அந்நியப் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய கூடாது
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), (புகாரி: 2865)
நபி (ஸல்) அவர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் செய்வதற்காக நான் பல பெண்களுடன் அவர்களிடத்தில் வந்தேன். அப்போது அவர்கள் உங்களுடைய சக்திக்கு உட்பட்டு உங்களால் முடிந்ததை (கடைப்பிடியுங்கள்). நான் பெண்களிடத்தில் கை கொடுத்து (பைஅத்) செய்ய மாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமைமா (ரலி)