14) தவிர்க்க வேண்டியவை
14) தவிர்க்க வேண்டியவை
இறைவன் தடுத்ததை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்
பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட வகையில் பொருளீட்டுவதை ஹலால் என்றும், அனுமதிக்கப்படாத வகையில் பொருளீட்டுவதை ஹராம் என்றும் இஸ்லாம் வகைப்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தைத் திரட்டுவது தனி மனிதனின் உரிமை; அதில் மதங்கள் தலையிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையற்றது என்று முஸ்லிம்களில் சிலர் நினைக்கின்றனர். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதாரத்தைத் திரட்டும் பல வாய்ப்புகளை மனிதன் இழந்து விடுகிறான் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
பொருளீட்டுவதில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைக்கும் இத்தகைய முஸ்லிம்கள் அரசாங்கம் தலையிடுவதை ஏற்றுக் கொள்கின்றனர். அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுகின்றனர். அரசாங்கம் தடுத்தவைகளைத் தடுத்துக் கொள்கின்றனர். ஆனால் படைத்த இறைவனுக்கு இந்த அதிகாரம் இல்லை என்று நினைக்கின்றனர்.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை அனுமதிக்கப்பட்டவைகளை விட மிகமிகக் குறைவாக இருப்பதால் பொருளீட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடாது.
மேலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருளாதாரம் என்பது அர்த்தமில்லாத சடங்கு என்ற அடிப்படையில் அமையவில்லை. மாறாக மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்த பொருளாதாரமே தடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பேணி நடப்பதால் அது நமக்குத்தான் நன்மை என்று புரிந்து கொண்டால் இது போன்ற கட்டுப்பாடுகளை நாம் மனமாற ஏற்றுக் கொள்ள முடியும்.
இறைவனுக்காக வணக்க வழிபாடுகளை நாம் எவ்வாறு ஆர்வத்துடன் செய்கிறோமோ அது போல் பொருளீட்டுவதற்கு இறைவன் வகுத்த வரம்புகளையும் பேணுவது அவசியம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.
“நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.
“மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை 23:51) ஓதிக் காட்டினார்கள் :தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் நன்கு அறிபவன் ஆவேன்.
பின்னர் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார்.
ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் நம் வருவாய் தூய்மையான முறையில் இருக்க வேண்டும். அடுத்தது ஹராமான பொருளாதாரத்தில் இருந்து நாம் செய்யக் கூடிய தர்மங்களுக்கு நன்மை கிடைக்காது.
صحيح مسلم
(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்து விட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டு வந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
ஹராமை ஹலாலாக்க தந்திரம் செய்தல்
صحيح البخاري
ஹராமை ஹலாலாகச் சித்தரித்து தவறான முறையில் பொருளீட்டுவதை நம்மில் சிலர் நியாயப்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படித் தந்திரம் செய்து ஹராமை ஹலாலாக்குவது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
سنن أبي داود
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தில் சில மனிதர்கள் மதுவை அருந்துவார்கள். அவர்கள் அதற்கு வேறு பெயரைச் சூட்டிக் கொள்வார்கள்.
அல்லாஹ் ஹராமாக்கியதை யூதர்கள் தந்திரமாக ஹலாலாக்கிக் கொண்டதைச் சுட்டிக்காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
صحيح البخاري
மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர் என்று மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்கப்பட்டது.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.
சந்தேகமானதை விட்டுவிட வேண்டும்
சில வகைப் பொருளாதாரங்கள் அனுமதிக்கப்பட்டதா? தடை செய்யப்பட்டதா என்ற சந்தேகம் நமக்கு அவ்வப்போது ஏற்படும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சந்தேகமானதை விட்டும் நாம் விலகிக் கொள்ளும் வகையில் நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் ஹராமானதில் இருந்து விலகுவது நம்முடைய இயல்பாகவே மாறி விடும்.
நம்மிடம் ஒரு குவளை பால் தரப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் ஒருவர் அதில் விஷம் கலந்துள்ளது என்று கூறுகிறார். இன்னொருவர் அதில் தேன் கலந்துள்ளது என்கிறார். இப்போது நாம் என்ன செய்வோம்? தேன் கலந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது; விஷம் கலந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற போதும் நாம் அதை அருந்த மாட்டோம். ஹலாலா ஹராமா என்று சந்தேகம் ஏற்படும்போது இது போன்ற மனநிலையை நாம் அடைய வேண்டும்.
صحيح البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுதிக்கப்படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில்) தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிட நேரும்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது.
அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பட்டவையே. அறிந்து கொள்க : உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
சந்தேகமானதை விட்டு விடுவதில் நபிகள் நாயகம் (ஸல்) கடுமையான போக்கைக் கடைப்பிடித்துள்ளனர். தமது தோழர்களுக்கும் அவ்வாறே பயிற்சி அளித்துள்ளனர்.
صحيح البخاري
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது :
நான் அபூ இஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து “உனக்கும் நீ மணந்துள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன்” (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார்.
“நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறிய மாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!” என்று நான் கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்த) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகச்) சொல்லப்பட்ட பிறகு (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்து விட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.
திருமணம் நடந்து முடிந்து விட்டாலும், அதன் பின்னர் பிரிவது பெண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றபோதும் சந்தேகத்துக்கு இடமானதைத் தொடர்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
صحيح البخاري
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?) எனக் கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உனது நாயை அனுப்பும்போதுதான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை என விடையளித்தார்கள்.
வேட்டைக்கு அனுப்பிய நாய் வேட்டைப் பிராணியைக் கொன்றிருக்க எவ்வாறு வாய்ப்பு உள்ளதோ அது போல் மற்றொரு நாய் அதைக் கொன்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்போது சந்தேகம் ஏற்பட்டு விட்டதால் அதைச் சாப்பிட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியிருப்பதில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடும் போக்கைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்பதை அறியலாம்.
صحيح البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார்.
அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.
ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக அனுப்பப்பட்ட அந்த மனிதர் எந்த மோசடியும் செய்யவில்லை. எதையும் ஒளிக்கவில்லை. வசூலிக்கச் சென்ற இடத்தில் அவருக்காகத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்டதைத்தான் வாங்கிக் கொண்டார். ஆனால் அவருக்காக அது கொடுக்கப்பட்டாலும் அவர் ஸகாத் வசூலிக்கச் சென்றபோது அது அவருக்குக் கொடுக்கப்பட்டதால் அதில் சந்தேகம் ஏற்படுகிறது.
அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது போல் அவர் ஸகாத் வசூலிக்கும்போது சலுகை அளிப்பார் என்று எதிர்பார்த்தும் அது கொடுக்கப்பட்டிருக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்கிறார்கள். இவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என்றால் இவர் தனது தந்தை வீட்டில் உட்கார்ந்து இருந்தால் இவருக்கு அந்த அன்பளிப்பைக் கொடுப்பார்களா? என்று அற்புதமான கேள்வியை எழுப்பி சந்தேகத்தின் சாயல் இருந்தால்கூட அதைத் தவிர்த்தாக வேண்டும் என்று நமக்கு வழி காட்டியுள்ளனர். நம்முடைய காலத்தில் முஸ்லிம்களிடம் காணப்படும் ஒரு வழக்கத்தை இந்த இடத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இஸ்லாத்தில் வரதட்சணை தடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இன்று கொள்கைவாதிகள் பலர் வரதட்சணை வாங்குவதைத் தவிர்த்து மஹர் கொடுத்து திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சில கொள்கைவாதிகள்(?) மறைமுகமாக வரதட்சணை வாங்குவதைப் பார்க்கிறோம். அதாவது நாங்கள் எதுவும் கேட்கவில்லை. பெண் வீட்டார்தான் மனவிருப்பத்துடன் அவர்களாக முன்வந்து தருகிறார்கள். எனவே இது வரதட்சணை ஆகாது என்பது அவர்களின் வாதம்.
ஆனால் இதில் உண்மையில்லை. அவர்களது பெண்ணைத் திருமணம் செய்கின்ற காரணத்தால்தான் இது தரப்படுகிறது. தமது மகளைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்ற பெற்றோரின் அச்சம் காரணமாகத்தான் இப்படி தரப்படுகிறது என்பது நம்முடைய மனசாட்சிக்குத் தெரிகிறது. ஆனாலும் இதை அன்பளிப்பு என்ற போர்வை போர்த்தி நியாயப்படுத்துகின்றனர். இவர்கள் மேற்கண்ட ஹதீஸைச் சிந்திக்க வேண்டும்.
நாம் அவருடைய பெண்ணைத் திருமணம் செய்யாமல் இருந்தால் இந்த அன்பளிப்பைத் தருவார்களா? அல்லது ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்றுவிட்டால் நாங்கள் தந்த அன்பளிப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா? கூற மாட்டார்கள். என் பெண்ணே உன்னுடன் வாழாதபோது உனக்கு எதற்கு இந்தப் பொருட்கள் என்று சொல்லி பிடுங்கிக் கொள்வார்கள்.
திருமணம் முடிந்து சில காலம் கடந்து விட்ட பின் நம்முடைய மருமகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது மாமனார் வீட்டினர் கொடுத்தால் அவர் குடும்பத்தில் ஒருவராகி விட்டபடியால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
سنن أبي داود
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள்.
அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “அப்படியானால் நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையிலான காரியங்களிலோ மனிதனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத்
இந்த மனிதர் அல்லாஹ்வுக்காகத்தான் நேர்ச்சை செய்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அதைச் செய்வதாக அவர் கூறியதால் அந்த இடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் காரணம் என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை நடத்துகிறார்கள். அந்த இடத்தில் பிறர் வழிபாடு செய்யும் சிலைகள் இருந்தால் அந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்திருந்தாலும் அந்த இடத்தில் அதை நிறைவேற்ற தடை செய்திருப்பார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நேர்ச்சை செய்த அந்த மனிதர் அல்லாஹ்வுக்குத்தான் நேர்ச்சை செய்தார் என்பதால் அவரைப் பொருத்தவரை அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சிலை வழிபாடு நடக்கும் இடத்தில் அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவது மற்றவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதுகூட ஏற்படக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
பனை மரத்தடியில் அமர்ந்து பாலைக் குடித்தாலும் கள் குடிப்பதாக மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்றால் அதையும்கூட முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் பாலைத்தானே குடிக்கிறோம். எவன் எப்படி நினைத்தால் நமக்கு என்ன என்று சமாளிக்க அனுமதி இல்லை. நாம் பாலைக் குடித்தாலும் கள் குடிப்பதாக மக்கள் கருதினால் கள் குடிப்பது தவறு இல்லை என்ற எண்ணம் படிப்படியாக மக்களிடம் உருவாக இது காரணமாக அமைந்து விடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய பேரன் ஹஸன் (ரலி) அவர்களுக்கு இதைத்தான் கட்டளையிட்டார்கள்.
سنن النسائي
நீ சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகம் இல்லாததின் பக்கம் திரும்பி விடு. நிச்சயமாக உண்மை என்பது நிம்மதியாகும். பொய் என்பது சந்தேகமானதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : நஸாயீ, திர்மிதி
சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் அதில் உறுதியாக இருந்தார்கள்.
صحيح البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது சதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.
தர்மப் பொருள்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஹராம். அதனால் கீழே கிடக்கின்ற பேரீச்சம்பழம் தர்மப் பொருளாக இருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததால் அதை விட்டு விலகி விட்டார்கள். ஹலால் ஹராமின் இலக்கணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கும்போதும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
صحيح مسلم
பாவத்தைப் பற்றியும் நன்மையைப் பற்றியும் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். நற்குணமே நன்மையாகும். எது உன் உள்ளத்தை உறுத்துகிறதோ மற்றவர்களுக்குத் தெரிவதை நீ வெறுக்கிறாயோ அதுதான் பாவம் என்று விளக்கமளித்தார்கள்.
சந்தேகமானதை எல்லாம் விட்டு விட்டால் நம்முடைய வருவாய் பாதிக்குமே என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படலாம். அல்லாஹ்வின் அருளில் சரியான முறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இப்படி தயக்கம் கொள்ளத் தேவை இல்லை. சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதால் வருவாய் குறையும் என்று நம்முடைய அறிவு கூறினாலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.
مسند أحمد بن حنبل
நீ அல்லாஹ்விற்குப் பயந்து ஏதேனும் விசயத்தை விட்டால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் உனக்குத் தருவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மது
அல்லாஹ்வுக்கு அஞ்சி சந்தேகமானதை விட்டு நாம் விலகிக் கொண்டால் நாம் நினைத்துப் பார்க்காத வேறு வழிகளை அல்லாஹ் நமக்குக் காட்டுவான். சந்தேகத்தின் காரணமாக நாம் எதைத் தவிர்த்துக் கொண்டோமோ அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.
சந்தேகமானதை விட்டு விடச் சொல்லும்போது அதை ஷைத்தான் பெரிய விஷயமாக நமக்குச் சித்தரித்துக் காட்டி அதில் நம்மைத் தள்ளப் பார்க்கிறான். ஆனால் மார்க்க விஷயத்தில்தான் இப்படியெல்லாம் மனிதன் விதண்டாவாதம் செய்கிறான். ஆனால் உலக வாழ்க்கையில் சந்தேகத்துக்கு இடமானவைகளைத் தவிர்த்துக் கொள்வதுதான் மனிதனின் இயல்பாக இருக்கிறது.
ஒரு தெருவில் நாம் போக முயலும்போது அங்கே கலவரம் நடப்பதாகத் தெரிகிறது என்று ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பினால் அந்தத் தெருவில் செல்வதை உடனே தவிர்த்துக் கொள்கிறோம். நம்முடைய உயிரைப் பாதுகாப்பதில் நமக்கு இருக்கும் அக்கறை மார்க்கத்தைக் காப்பதிலும் வந்து விட்டால் சந்தேகமானதை விட்டு விடுவது மிக எளிதாகி விடும்.