14) அன்பளிப்பாக கொடுப்பது வரதட்சணையாகுமா?

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

அன்பளிப்பாக கொடுப்பது வரதட்சணையாகுமா?

அன்பளிப்பு வாங்குவதையும் அன்பளிப்பு கொடுப்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால் இறைவன் தடைசெய்த காரியங்களை அன்பளிப்பு போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விசயத்தில் மிக எச்சரிக்கையாகவும் பேணுதலாகவும் இருக்க வேண்டும். அன்பளிப்பிற்கும் வரதட்சணைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

யூதர்கள் வட்டித் தொழில் செய்து வந்தனர். வியாபாரமும் வட்டியும் ஒன்றுதான் எனக் கூறி இந்த பாவத்தை அவர்கள் நியாயப்படுத்தினர். அல்லாஹ் இதனை வன்மையாகக் கண்டிக்கிறான்.

اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 2:275)

அன்பளிப்பு என்பது தானாக மனமுவந்து கொடுப்பதாகும். அன்பளிப்பை கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையில் இதில் எந்த ஒப்பந்தமும் இருக்காது. அன்பளிப்பை கொடுப்பவருக்கு இதில் சிறிதளவு கூட நெருக்கடியோ நிர்பந்தமோ இருப்பதில்லை.

தனக்கு பொருளை வழங்க வேண்டும் என வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நெருக்கடி தரப்பட்டால் அப்போது இதை அன்பளிப்பு எனக் கூற முடியாது. மாறாக இது தடைசெய்யப்பட்ட காரியமாக ஆகிவிடும்.

உதாரணமாக கரீம் என்பவர் ரஹீம் என்பவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயை கடனாகப் பெறுகிறார். மூன்று மாதத்தில் இதேத் தொகையை மட்டும் திருப்பிக்கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்கின்றனர். கரீம் ரஹீமிடம் பணத்தை ஒப்படைக்கும் போது 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து மொத்தம் 55 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். இவர் கொடுக்கும் கூடுதலான 5 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாகும். இது தவறல்ல. வரவேற்கத்தகுந்த காரியமாகும்.

ரஹீம் கடனை கொடுக்கும் போது திருப்பித்தரும் போது 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என கரீடம் கேட்டு அதனடிப்படையில் இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அல்லது கரீம் ரஹீமிடம் நான் திருப்பித் தரும் போது 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாகத் தருகிறேன். எனக்கு கடன் கொடுங்கள் எனக் கேட்டால் இது வட்டியாகிவிடும். இங்கே வட்டிக்கும் அன்பளிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிய வேண்டும்.

இதுபோன்றே வரதட்சணைக்கும் அன்பளிப்பிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. பெண் வீட்டார் எந்த நிர்பந்தமும் இல்லாமல் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு வழங்கினால் அது குற்றமல்ல. இந்த அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் தன் மறுமகன் அலீ (ரலீ) அவர்களுக்கு பாய் தலையணை போன்ற சிறு பொருட்களை அன்பளிப்புச் செய்தார்கள்.

ஆனால் திருமணம் ஒப்பந்தம் நடக்கும் போதே மாப்பிள்ளைக்கோ அல்லது மாப்பிள்ளை வீட்டார்களுக்கோ அல்லது மணப்பெண்ணுக்கு குறிப்பிட்டதை கொடுக்க வேண்டும் என பேச்சு நடந்தால் அப்போது இது அன்பளிப்பல்ல. மாறாக இது தெளிவான வரதட்சணை ஆகும்.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பொருளைக் கொடுக்காவிட்டால் நமது மகளை சந்தோஷமாக வைத்திருக்கமாட்டார்கள் என்ற அச்சத்தினால் இன்றைக்கு பலர் வரதட்சணை கொடுக்கின்றனர். அன்பளிப்பு என்பது ஒருவர் தனக்கு இயன்றதை வழங்குவதாகும். ஆனால் வரதட்சணையில் தனது சக்திக்கு மீறி சிரமப்பட்டு பெருந்தொகையை மாப்பிள்ளைக்கு கொடுக்கப்படுகின்றது.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு கொடுப்பது கட்டாயமான ஒன்றல்ல. பெண்வீட்டார் பெரும் அன்பளிப்புகளை எந்த நிர்பந்தமும் இல்லாமல் மாப்பிள்ளைக்கு கொடுத்தாலும் தற்போதுள்ள சமூகத்தில் அது வரட்சணையாகவே பார்க்கப்படும். மற்றவர்கள் நம்மை தவறாக நடக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கக்கூடாது.