13) முடிவுரை
முடிவுரை :
திருக்குர்ஆனில் காணப்படும் அதிஅற்புதமான ஞானமாம் பேரண்டவியல், வானியல் மற்றும் வான் இயற்பியல் போன்ற வற்றிலிருந்து சில செய்திகளை மட்டுமே நாம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் ஆய்வுக்கண் கொண்டு இம் மாமறையை ஆராய்பவர்களுக்கு அறிவியலின் பிரதான துறைகளைச் சார்ந்த ஏராளமான அறிவியல் உண்மைகளை அதில் அவர்கள் காணமுடியும். அச்செய்திகள் யாவும் திருக் குர்ஆன் ஒருக்காலும் மனித சக்தியால் இயற்ற முடியாதததும் இறைவனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியாதாகும் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகும்.
அறிவியல் ஆதாரங்கள் மட்டுமன்றி வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற பல்துறை சான்றுகளையும் இம்மாமறை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் காரணமாகவே திருக் குர்ஆனில் அதன் தோற்றுவாயாம் அகிலங்களின் அதிபதி கீழ்க்கண்டவாறு அறைகூவல் விடுத்துள்ளான். அது வருமாறு:
“இந்தக் குர்ஆனைப் போன்று (ஒருநூலை) கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதைப் போன்றதைக் கொண்டுவர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே என்று (துதரே தாங்கள்) கூறுவீராக! (அல்குர்ஆன்: 17:88) ➚
இதைப் போன்ற அறைகூவல்கள் திருக்குர்ஆனில் அவ்வப்போது விடப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்: 2:23, 10:38, 28:49, 52:34, 11:13) ➚ இருப்பினும் இந்நாள் வரையிலும் திருக் குர்ஆனுடைய இந்த அறைகூவலை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
திருக்குர்ஆனைத் தவிர வேறுசில வேதநூல்களிலும் ஒருசில அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவே. இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவைகளையும் இறைவனின் தூய்மையான வேதங்களே என ஏன் கூறக் கூடாது? என சிலர் வினவக் கூடும். அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய அறிவியல் உண்மைகள் அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு நூற்றாண்டு களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாகக் கூறும் ஞானம் இறைவனைச் சார்ந்ததாகும் என்பதில் ஐயமில்லை.
ஆயினும் அதைக் கூறிய நூல்களில் மனிதக் கரங்கள் புகாமல் தூய்மைகாகப் பாதுகாக்கப் பட்டுள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிரான செய்தி ஒன்று கூட அந்நூலில் இல்லாமலிருப்பதாகும். இந்த நிபந்தனையை நிறை வேற்றும் வேதநூல்கள் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. மெய்யும் பொய்யும் இரண்டறக் கலந்த அறிவியல் அறிவிப்புகள் ஒரு போதும் பாதுகாக்கப்பட்ட நூலாக இருக்க இயலாது. அதே நேரத்தில் பொய்யும், மெய்யும் இரண்டறக் கலந்த வேத நூல்கள் இருப்பது மனிதக் கரங்களால் முன் வேதங்கள் தூய்மை இழந்து விட்டதாகக் கூறும் திருக்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பதற்கு ஆதாரமாகவே அமையும்.
ஏனைய வேதநூல்களில் நிலை இவ்வாறு இருக்கும் போது அந்த நூல்கள் எதிலும் கூறப்படாத ஏராளமான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளது. ஆயினும் அவைகளில் ஒன்று கூட இன்றைய தேதிவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளால் பொய்ப்பிக்கப் படவில்லை என்பதோடு அந்த அறிவியல் கண்டு பிடிப்புகள் திருக்குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை மெய்ப்பிக்கும் பணியையே செய்து வருகின்றன.
திருக்குர்ஆனில் நாம் கண்ட மற்றொரு அற்புதம் அறிவியல் உலகில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர் களுக்குக் கூட தவறுகள் நேரும் அளவிற்கு மிகமிக சிக்கலான அறிவியல் செய்திகளைக் கையாளும் போது கூட திருக் குர்ஆனுக்கு மட்டும் எவ்விதத் தங்கு தடைகளோ. தயக்கமோ, தவறுகளோ எள்ளளவும் நேர்ந்து விடவில்லை என்பதாகும். சான்றாக இப்பேரண்டம் தோற்றமோ, முடிவோ இல்லாதது; பேரண்டம் நிலையானது (Static); விண்ணகத்தின் ஓட்டைகள் உருவானது; பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்றுள்ளது மற்றும் ஐன்டீனையும் அடிசறுக்கச் செய்த அவருடைய `எதிர் ஈர்ப்பு (antigravity) என அறிவியலாளர்களைத் தவறான முடிவிற்கு இட்டுச் சென்ற பிரச்சனைகளில் கூட திருக்குர்ஆன் அடிசறுக்காமல் மிகச் சரியான அறிவியல் தகவல்களையே தந்தது என்பதும் முடிவில் அறிவியல் உலகம் தவறுகளைத் திருத்திக் கொண்டு திருக்குர்ஆனின் அறிவியலையே ஒப்புக் கொள்ள நேர்ந்தது என்பதாகும்.
ஒரு எளிய அறிவியல் வாசகனால் அறிவியலின் மிகச் சில துறைகளைத் தனது சக்திக்கேற்ப ஆய்வு செய்ததிலேயே திருக்குர்ஆன் இறைஞானத்தால் வெளிப்படுத்தப்பட்டு பரிசுத்தமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவ்வளவு வலுவான, ஆழமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதை வாசகர்கள் தேவையான கவனத்துடன் பரிசீலனை செய்யும்படி வேண்டுகிறேன். இந்நூலில் என்னிடமிருந்து தவறுகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுமாறு முதற்கண் இறைவனிடம் மன்றாடுகிறேன். மேலும் வாசகர்களின் கவனத்திற்கு ஏதேனும் தவறுகள் தென்படின் இவைகளைச் சுட்டிக் காட்டுமாறு சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நன்றி அறிதலோடு அவைகளை ஏற்றுக் கொள்வேன்.
அண்ட சராசரங்களையும் அதில் நம்மையும் படைத்த இறைவன் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வர்களாக நம்மை ஆக்குவானாக! அப்பணியில் இந்த எளியோனின் புத்தகத்தையும் பயன்படச் செய்வானாக!