13) செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்
13) செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய் (என்றும் கூறுவீராக!)
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்?காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம். எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.
வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்குகின்றனர்.
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும்,பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
என் இறைவன், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!
எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான். அவன் வலிமையானவன்; மிகைத்தவன்.
அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்கினால் பூமியில் வரம்பு மீறுகின்றனர். எனினும் தான் நாடியதை அளவோடு அவன் இறக்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.
நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. அல்லாஹ்வே (நானே) செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.
அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.
அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கிச் சோதிக்கும் போது என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான் என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான் எனக் கூறுகிறான்.