13) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-13
13) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-13
நபிமொழி-61
தர்மம் செய்தல்
‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நபிமொழி-62
பட்டு அங்கி
நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு பட்டு அங்கியை அன்பளிப்பாக தந்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன் (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தை பார்த்தேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி என் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நபிமொழி-63
திவாலாகிப் போனவன் யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார்கள் மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ, பொருட்களோ இல்லையோ அவரே திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். “என் சமுதாயத்தில் ஒருவர், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை அபகரித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார்.
ஒருவரை அடித்திருப்பார். அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்: இன்னும் சில அடுத்தவருக்கு கொடுக்கப்படும் (அப்படி) எடுத்துக் கொடுக்கும் போது நன்மைகள் தீர்ந்துவிட்டால் (பாதிக்கப்பட்டவர்களின்) பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவார், இவரே திவாலானவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நபிமொழி-64
பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
- அல்லாஹ்வுக்கு இணை வைப்பது,
- சூனியம் செய்வது,
- உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்ததை கொல்வது,
- அநாதைகளின் பொருளை உண்பது
- வட்டியை உண்பது,
- போரின் போது புறமுதுகிட்டு ஒடுவது
இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள, அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது” என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 145),(புகாரி: 2767)
நபிமொழி-65
சமரசம் செய்து வைத்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம்கள் வாட்களால் சண்டையிட்டால் கொன்றவருக்கும் கொல்லப் பட்டவருக்கும் நரகம் தான்” என்று கூறக் கேட்டேன் அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; கொல்லப் பட்டவரின் நிலை என்ன? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகோதரனைக் கொல்ல துடித்துக் கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ பக்ரா (ரலி)