13) இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியங்கள்-1
இணைவைப்பவர்கள் இழக்கும் பாக்கியங்கள்
அல்லாஹ்வைக் காண்பது சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் இன்பங்களில் மிகப் பெரியதாகும். இந்த பாக்கியத்தை அல்லாஹ்விற்கு இணைவைத்தவர்கள் இழந்து விடுவார்கள்.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும், மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:
மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பாளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும், கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர்.
அவர்களிடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உûஸர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும், குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும்.
மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறித்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனரே! என்று கேட்கப்படும்.
அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
இணைவைத்தவர்களுக்கு சொர்க்கம் கிடைக்காது
அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.
எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், அவர் விபசாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் யார் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கட்டாயமாக்கக் கூடிய இரண்டு விசயங்களை எவை என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு எதனையும் இணையாகக் கருதாமல் மரணித்தவர் சொர்க்கம் புகுவார். அல்லாஹ்விற்கு இணைகற்பித்தவராக மரணிப்பவர் நரகம் புகுவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
இணைவைப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
இணைவைப்பைத் தவிர்த்து மற்ற எந்தப் பாவங்களை ஒருவன் செய்திருந்தாலும் மறுமையில் அல்லாஹ் நாடினால் அவனை மன்னிக்க வாய்ப்புண்டு. ஆனால் இணைவைத்து விட்டு திருந்தாமல் இணைவைத்தவனாகவே மரணித்தால் அந்தப் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அது அல்லாத (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் தொழுகையை நிலைநாட்டி சகாத்தையும் கொடுத்து அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் மரணிக்கிறாரோ அவரை மன்னிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. அவர் ஹிஜ்ரத் செய்திருந்தாலும் அல்லது பிறந்த ஊரிலே மரணித்திருந்தாலும் சரியே.
அறிவிப்பவர் : அபுத்தர்தாஃ (ரலி)
இணைவைப்பவர்களின் மற்ற பாவங்களும் மன்னிக்கப்படாது
பொய், அவதூறு கூறுதல், விபச்சாரம் புரிதல், திருடுதல், மது அருந்துதல் போன்ற பாவங்களை இறை நம்பிக்கையாளர்கள் செய்யும் போது அவற்றை அல்லாஹ் தம் கருணையால் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறான். ஆனால் இணைவைத்தவன் இது போன்ற பாவங்களைச் செய்தால் அவன் இணைவைத்தே ஒரே காரணத்திற்காக அல்லாஹ் அவனுடைய எந்தப் பாவத்தையும் மன்னிக்க மாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான் : ஒருவர் எதையும் எனக்கு இணைவைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர் கொள்கிறேன்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு எந்த ஒரு நபிக்கும் வழங்காத மூன்று விசயங்களை நபி (ஸல்) அவர்கள் சித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் இருந்த போது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அவர்களுக்கு ஐந்து நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டுள்ளது. அவர்களுடைய சமூகத்தாரில் அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் இருந்தவர்களுக்கு நரகத்தில் தள்ளும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (5013) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இணைவைத்தவனாக மரணித்தவன், ஒரு இறை நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்தவன் இவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அனைத்து பாவங்களையும் அல்லாஹ் (நினைத்தால்) மன்னித்து விடலாம்.
அறிவிப்பவர் : அபுத்தர்தாஃ (ரலி)
பாவங்களுக்கான பரிகாரம் கிடைக்காது
ஒரு இறை நம்பிக்கையாளன் செய்கின்ற நற்காரியங்களை அவன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான். ஆனால் இந்தப் பாக்கியம் இணைவைத்தவர்களுக்குக் கிடைக்காது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு (ரமளான்) மாதத்திலிருந்து மறு (ரமாளான்) மாதம் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். ஆனால் மூன்று (பாவங்களைத்) தவிர. அவை அல்லாஹ்விற்கு இணைகற்பிப்பதும், உடன்படிக்கையை முறிப்பதும், இஸ்லாமிய ஆட்சிக்கெதிராகக் கிளம்புவதுமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமாளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் ; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
மறுமையில் நபியவர்களின் பரிந்துரை கிடைக்காது
மறுமை நாளில் தன் சமூகத்தினர் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இதன் மூலம் நல்லவர்களும், பாவிகளும் நன்மையை அடைவார்கள். ஆனால் இணைவைத்தவர்களுக்கு நபியவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள். நபியவர்களின் பிரார்த்தனையின் பலனை இவர்களால் அடைய முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு நபிக்கும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனை உண்டு. எனது சமூகத்தாருக்கு (மறுமையில்) பரிந்துரை செய்வதற்காக எனது (விஷேஷ) பிரார்த்தனையை விட்டு வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமூகத்தாரில் அல்லாஹ்விற்கு எதனையும் இணையாக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்தார். எனது சமூகத்தாரில் பாதிப்பேரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லது பரிந்துரை செய்வது (இவற்றில் ஒன்றை) தேர்வு செய்வதற்கு எனக்கு வாய்ப்பளித்தார். நான் பரிந்துரை செய்வதையே தேர்வு செய்து கொண்டேன். அல்லாஹ்விற்கு நிகராக யாரையும் ஆக்காமல் மரணித்தவர்களுக்கு அது உண்டு.
அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
மறுமை நாளில் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்யும் பரிந்துரையைப் பற்றி மக்களில் நான் மிக அறிந்தவன் என்று அபூஹுரைரா கூறினார். மக்கள் அவரிடத்தில் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். (அதைப் பற்றி சொல்லுங்கள்) என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (மறுமை நாளில்) இறைவா! உனக்கு இணையாக யாரையும் ஆக்காமல் என்னை நம்பிக்கை கொண்டு உன்னைச் சந்திக்கின்ற முஸ்லிமான ஒவ்வொரு அடியானையும் நீ மன்னித்து விடு என்று கூறுவார்கள் என அபூஹுரைரா கூறினார்.
அறிவிப்பவர் : இப்னு தார்ரா (ரஹ்)
இணைவைப்பவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது
இணைவைப்பவர்களின் வேண்டுதல்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான். அவர்கள் செய்யும் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாமை ஏற்ற பிறகு அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அடியானின் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி)
இணைவைப்பதால் நற்காரியங்கள் அழிந்து விடுகிறது
இணைவைப்பவர்கள் எவ்வளவுதான் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் தான தர்மங்களைப் புரிந்தாலும் ஹஜ் என்ற வணக்கத்தை நிறைவேற்றினாலும் அல்லாஹ்விற்கு இணைவைத்த ஒரே காரணத்திற்காக இவையெல்லாம் அழிக்கப்பட்டு விடுகின்றது. இணைவைத்துக் கொண்டு எந்த நன்மையையும் சேமிக்க முடியாது. நன்மைகளைச் சேகரிக்க வேண்டும் என்றால் முதலில் இணைவைப்பதை விட்டு விட வேண்டும்.
நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
அவர்கள் இணைகற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
இணைகற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாமை ஏற்ற பிறகு இணைவைக்கும் இணைவைப்பாளனிடமிருந்து எந்த நற்காரியத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
மறுமையில் எப்பலனும் கிடைக்காது
இணைகற்பித்தவர்களின் வணக்கங்கள் அழிக்கப்பட்டு விடுவதால் மறுமையில் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும் போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நான், அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள் கூட இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! என்று கேட்டதேயில்லை என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
உறவினராக இருந்தாலும் பாவமன்னிப்புத் தேடக் கூடாது
இணைவைத்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள். அவர்களை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்பதால் இணைவைத்தவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.
இணைகற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்- விட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்தி- ருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று சொன்னார்கள்.
அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதா-பே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், (என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தில்தான் (நிகழும்) என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரை என்று சொன்னார்கள்.
அப்போதுதான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.
அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி)
இணைவைப்பவர்களுக்கு ஜனாஸா தொழக் கூடாது
இறந்து போனவர்கள் இணைவைத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஜனாஸா தொழுவது கூடாது. இறந்தவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காகத்தான் ஜனாஸô தொழுகை நடத்தப்படுகிறது. இணைவைப்பாளர்களுக்காக பிரார்த்தனை செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸôத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, (ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன் என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா? எனக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது எனக் கூறிவிட்டு, நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை என்ற (9:80ஆவது) இறை வசனத்தை ஓதிக் காட்டி விட்டு ஜனாஸôத் தொழுதார்கள். உடனே அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒரு போதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம் எனும் (9:84ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
இணைவைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது
இறை நம்பிக்கையாளர்களை மணமுடிப்பதற்கு இணைவைப்பாளர்கள் தகுதியற்றவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணைகற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணைகற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணைகற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணைகற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணைகற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.