12) கொடைவள்ளல்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

12) கொடைவள்ளல்

இறைவன் அளித்த செல்வத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களின் செல்வம் தான் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தில் சுட்டிக்காட்டி அபூபக்ர் (ரலி) அவர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அபூபக்ரின் செல்வம் எனக்கு பலனளித்ததைப் போல் வேறு எவருடைய செல்வமும் பலனளிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நானும் எனது செல்வமும் உங்களுக்குத் தான் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு மாஜா: 94, 91)

நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் திர்ஹம் முழுவதையும் எடுத்துச் சென்றார்கள். தமது குடும்பத்திற்காக அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் பயணம்) சென்ற போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த அனைத்துப் பொருளையும் எடுத்துக் கொண்டு நபியவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் 5 அல்லது 6 ஆயிரம் திர்ஹங்கள் இருந்தன. அப்போது எனது பாட்டனார் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா என்னிடத்தில் வந்தார். அவர் பார்க்கும் திறன் அற்றவராக இருந்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக தம் உயிராலும் செல்வத்தாலும் (தியாகம் செய்து) அபூபக்ர் உங்களை தவிக்க விட்டு விட்டார் என்று தான் நான் கருதுகிறேன் என்று அபூகுஹாஃபா கூறினார். நான் இல்லை பாட்டனாரே அவர் நமக்கு ஏராளமான நன்மைகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறிவிட்டு சில கற்களை எடுத்தேன். எனது தந்தை (அபூபக்ர்) எந்த பொந்தில் தம் செல்வத்தை வைப்பார்களோ அந்த இடத்தில் அக்கற்களை வைத்துவிட்டு அதன் மேல் ஒரு துணியை போட்டு (மறைத்து) விட்டேன்.

பின்பு அபூகுஹாஃபாவின் கையை பிடித்து பாட்டனாரே இந்தப் பொருளில் கை வைத்துப் பாருங்கள். (என் தந்தை பொருளை விட்டுச் சென்றுள்ளார்) என்று கூறினேன். அவர் கையை அதன் மேல் வைத்து விட்டு பராவாயில்லையே. உங்களுக்கு அவர் செல்வத்தை விட்டுச் சென்றிருந்தால் நல்ல விதமாக நடந்து கொண்டார்.

உங்கள் தேவைகளை இதன் மூலம் நீங்கள் அடைந்து கொள்ளலாம் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக இந்த வயதானவரை இவ்வாறு கூறி அமைதிப்படுத்த நான் நாடினேன்.

(அஹ்மத்: 26957, 25719)

ஏழைஎளியோர், திக்கற்றவர்கள், உறவினர்கள் ஆகியோருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி வந்தார்கள். அறியாமைக் காலத்திலேயே இத்தனை நற்காரியங்கள் செய்தார்கள் என்றால் எத்தகைய விசாலமான மனதை அவர்கள் பெற்றிருப்பார்கள். இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் கூட நற்பணிகளுக்கு எள்ளளவும் கொடுக்காத கஞ்சர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த பாடத்தைப் பெற வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

இப்னு தகினா அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர் என்று கூறினார்.

(புகாரி: 2297)