12) இணைவைப்பின் அபாயங்கள்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

இணைவைப்பின் அபாயங்கள்

பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவம்

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 4477)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5764)

நபியவர்கள் கற்றுக் கொடுத்த ஏகத்துவ வாக்கியத்தை மொழியும் போது அழிவுகளிலிருந்து முஸ்லிம் காக்கப்படுகிறான். ஆனால் இணைவைப்பு என்ற பாவத்தைச் செய்து விட்டால் இந்த பாதுகாப்பு அகன்று நாசமாகி விடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஃபஜர் தொழுகைக்குப் பிறகு இரு கால்களையும் மடக்கியவாறே (வேறு விசயங்களை) பேசுவதற்கு முன்னால் லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக்க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீ(த்)து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று பத்து முறை எவர் கூறுகிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. பத்து பாவங்கள் அவரை விட்டும் அழிக்கப்படுகின்றன. அவருக்காகப் பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன. அந்த நாள் முழுவதும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஷைத்தானிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். அந்நாளில் அல்லாஹ்விற்கு இணைகற்பிப்பதைத் தவிர வேறெந்த பாவத்தாலும் அவரை நாசமாக்க இயலாது.

பொருள் : அல்லாஹ் ஒருவனையன்றி வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை. அவனுக்கு எந்த நிகரும் இல்லை. அதிகாரமும், புகழும் அவனுக்கே உரியது. அவன் உயிர்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். எல்லாவற்றின் மீதும் அவன் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

(திர்மிதீ: 3396)

இணைவைத்தல் பெரும்பாவங்களில் முதன்மையானதாகும்

(ஒரு முறை) பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)

(புகாரி: 2654)

இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும் நம்முடைய தேவைகள் அனைத்தையும் அல்லாஹ் பூர்த்தி செய்யும் போது எதுவும் செய்ய முடியாத பலவீனமான மனிதர்களை அல்லாஹ்விற்கு இணையாகக் கருதுவது உண்மையில் மாபெரும் அநீதியாகும்.

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணைகற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 31:13)

எவர் இறை நம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறை நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ என்னும் (6:82) வசனம் அருளப்பட்ட போது அது முஸ்-ம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கின்றது. என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணைவைப்பு மாபெரும் அநீதியாகும் என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (அல்குர்ஆன்: 31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா? என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 3429)

இணைவைத்தல் சைத்தானின் செயலாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்கள் : அறிந்து கொள்ளுங்கள்: என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத்தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான்.

(இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன்.

(ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச் செய்து விட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கி விட்டான்; எனக்கு இணைகற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் நான் இறக்காத நிலையில் எனக்கு இணைகற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டான்.

அறிவிப்பவர் : இயாள் பின் ஹிமார் (ரலி)

(முஸ்லிம்: 5498)

இணைவைத்தல் நெருப்பில் விழுவதை விடக் கொடியது

நீ வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் அல்லாஹ்விற்கு இணையாக எதையும் ஆக்கிவிடாதே என்று எனது உற்றத்தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உபதேசித்தார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தாஃ (ரலி)

(இப்னு மாஜா: 4024)

இணைவைத்தவர்களுக்கு நிரந்தர நரகம் உண்டு அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் ஓரிறைக் கொள்கையைக் கடைபிடித்தவன் நிறைய பாவங்களைச் செய்திருந்தால் அல்லாஹ் நாடினால் அவனை மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

அல்லாஹ் நாடினால் அவனை நரகத்தில் சிறிது காலம் தண்டித்து விட்டு பிறகு சொர்க்கத்திற்கு அனுப்புவான். ஓரிறைக் கொள்கையை ஏற்ற காரணத்தினால் தண்டனை வழங்கப்பட்ட பிறகாவது கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் சொர்க்கத்திற்குச் சென்று விடுவான். ஆனால் இணைவைத்தவர்கள் என்றென்றும் நிரந்தரமாக நரகத்திலேயே கிடப்பார்கள். இவர்கள் என்றைக்கும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்: 5:72)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைகற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(அல்குர்ஆன்: 98:6)

இணைகற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 9:17)

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார் என்று கூறினார்கள். (அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணைகற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார் என்று நான் சொன்னேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 4497)

உறவினரானாலும் நரகவாசியே

நபிமார்களுக்கு நெருக்கமான உறவினர்களானாலும் இணைவைத்துவிட்டால் அவர்களும் வெற்றி பெற முடியாது. நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) ஆகிய இரு இறைத் தூதர்களின் மனைவிமார்கள் வழி கெட்டு விட்டார்கள்; நரகவாசிகள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (அல்லாஹ்வை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. நீங்கள் இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10)

நபி (ஸல்) அவர்களின் தந்தை இணைவைத்தவராக இறந்ததால் அவரும் நரகத்தில் இருப்பார் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாமிற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(முஸ்லிம்: 347)

நபி (ஸல்) அவர்களின் தாயார் இணைவைத்தவராக மரணித்ததால் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடக் கூடாது என்று இறைவன் நபியவர்களுக்குத் தடை பிறப்பித்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1776)

இணைவைத்தல் ஏன் பெருங்குற்றம்?

தனக்கு மட்டும் கொடுக்க வேண்டிய அந்தஸ்த்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதை மனிதர்களே ஒத்துக் கொள்ளவதில்லை. ஒரு மனைவி கணவன் சொல்கின்ற அனைத்து வேலைகளையும் அழகுறச் செய்கிறாள். சுவையான உணவைச் சமைத்துத் தருகிறாள். ஆனால் இவள் கணவனை மட்டும் வைக்க வேண்டிய இடத்தில் அந்நிய ஆணை வைத்து விட்டால் அவளுடைய கணவனுக்குக் கடுமையான கோபம் வருகிறது.

மனைவியின் பிறப்புக்கோ, வளர்ப்புக்கோ கணவன் எந்த வகையிலும் காரணமாக அமையவில்லை. திருமணம் என்ற ஒப்பந்தத்தால் மட்டுமே இருவரும் இணைகிறார்கள். விரும்பும் போது இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு மனைவிக்கு உரிமை உண்டு. இந்நிலையில் கணவனுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய படுக்கை சுகத்தை மற்றவனுக்குக் கொடுக்கும் போது கணவனுக்குக் கடும் கோபம் வருகிறது.

மனிதர்களைப் படைத்து உணவளிப்பது அல்லாஹ். எல்லா பாக்கியங்களையும் வழங்குவதும் அல்லாஹ். அல்லாஹ்வின் எல்லா பாக்கியங்களையும் அனுபவித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய தகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பது அல்லாஹ்விற்குக் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஸகரிய்யா (அலை) அவர்களின் மகனாகிய யஹ்யா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடத்தில் (பின்வருமாறு) கூறினார்கள். ஐந்து விசயங்களை நான் கடைப்பிடிக்குமாறு அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான். நீங்கள் அதன் படி நடப்பதற்கு நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன். அல்லாஹ்விற்கு இணையாக எதையும் கருதாமல் அவனை மட்டும் நீங்கள் வணங்கி வர வேண்டும் என்பது அவற்றில் முதன்மையானதாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய தூய செல்வத்திலிருந்து தங்கம் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஒரு அடிமையை விலைக்கு வாங்குகிறான். அந்த அடிமை வேலை செய்ய ஆரம்பிக்கிறான். தனது சம்பாத்தியத்தை எஜமான் அல்லாத மற்றவனிடத்தில் ஒப்படைக்கிறான். தனது அடிமை இவ்வாறு நடப்பதை உங்களில் எவராவது விரும்புவாரா? இதுவே இணைவைப்பவருக்குரிய உதாரணமாகும்.

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். உங்களுக்கு உணவளிக்கிறான். எனவே அவனுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டும் வணங்கி வாருங்கள்.

அறிவிப்பவர் : ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி)

(அஹ்மத்: 16542)