11) முடிவுரை
11) முடிவுரை
திருக்குர்ஆன் எவ்வாறு இறைவனின் மூலம் அருளப்பட்ட வழிகாட்டி நெறியாக அமைந்துள்ளதோ அது போல் ஹதீஸ்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களூக்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறிதான் என்பதை ஏராளமான சான்றுகளூடன் நாம் நிரூபித்துள்ளோம்.
குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்து குர்ஆன் சொல்லாததும் குர்ஆனுக்கு முரணான கருத்துமாகும் என்பதையும் நாம் இந்நூலில் நிலை நாட்டியுள்ளோம். குர்ஆனில் கூறப்படாமல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இட்ட பல கட்டளைகளை அல்லாஹ் தனது கட்டளை என்று அங்கீகரித்ததையும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம்.
குர்ஆனில் மூடலாகக் கூறப்பட்ட பல விஷ்யங்களுக்கான விளக்கம் குர்ஆனில் இல்லை. அவற்றைக் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டுமாறு நாம் அறை கூவல் விட்டுள்ளோம். இந்த அறை கூவல் பல்வேறு விவாதங்களிலும், பொது மேடைகளிலும் எடுத்து வைக்கப்பட்டன. ஆண்டுகள் பல ஒடிய பின்னரும் இன்று வரை இந்த அறை கூவலுக்கு இவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. இனியும் பதில் சொல்ல இயலாது. இது ஒன்றே இவர்களின் கொள்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதற்குப் போதுமான சான்றாகும்.
ஆதாரப்பூர்வமான சில ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண் எனக் கூறி இவர்கள் மறுக்கின்றனர். உண்மையாகவே குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது தான் நமது நிலையும். ஆனால் குர்ஆனுக்கு முரணில்லாத ஹதீஸ்கள் சிலவற்றை இவர்கள் முரண் என்ற முத்திரை குத்தி மறுப்பதால் அது போன்ற ஹதீஸ்கள் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்துள்ளோம்.
காய்தல் உவத்தல் இன்றி இந்நூலை வாசிக்கும் யாரும் ஹதீஸ்கள் இஸ்லாத்தின் இரண்டு மூல ஆதாரங்களில் ஒன்று என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.