11) மதீனாவில் என்னை விட ஏழை இல்லை
11) மதீனாவில் என்னை விட ஏழை இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார்.
தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார்.
அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711)