11) நன்மையில் முந்திக்கொள்பவர்
11) நன்மையில் முந்திக்கொள்பவர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பியதினால் மார்க்க விஷயங்களில் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரையும் விட முன்னால் நின்றார்கள்.
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஜனாஸாவை (பிரேதத்தை) உங்களில் பின்தொடர்ந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்றைய தினம் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்? என்று அவர்கள் கேட்க அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள்.
இன்றைய தினம் ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் உங்களில் யார்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க அதற்கும் அபூபக்ர் (ரலி) நான் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்றார்கள்.
நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வதில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
பள்ளியில் ஒரு மனிதர் நின்று தொழுது கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரது ஓதுதலை நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரை (யார் என்று) நாங்கள் அறிந்து கொள்வதற்கு முற்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆன் இறக்கப்பட்டவாறு இனிமையாக ஓதுவது யாருக்கு விருப்பமானதாக இருக்கிறதோ அவர் இப்னு உம்மி அப்து (அதாவது இப்னு மஸ்ஊத்) அவர்கள் ஓதுவது போல் ஓதட்டும் என்று கூறினார்கள். பிறகு (தொழுது கொண்டிருந்த) அந்த மனிதர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.
நபி (ஸல்) அவர்கள் (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும். (அதிகமாகக்) கேள் உமக்கு வழங்கப்படும் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இப்னு மஸ்ஊதிடத்தில் காலையில் சென்று அவருக்கு நற்செய்தி கூறுவேன் என்று நான் கூறிக் கொண்டேன். அவருக்கு நற்செய்தி கூறுவதற்காக காலையில் அவரிடத்தில் சென்றேன்.
ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு முன்னால் அவரிடத்தில் சென்று நற்செய்தி கூறிவிட்டதைக் கண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் எந்த ஒரு நன்மையின் பால் முந்தினாலும் எனக்கு முன்னால் அபூபக்ர் அதன் பால் என்னை முந்தாமல் இருந்ததில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தால் அதை எளிதில் முறித்துவிட மாட்டார்கள். ஆனால் சத்தியம் செய்த விஷயத்தை விட வேறொரு நல்ல காரியத்தைக் கண்டால் தம் சத்தியத்தை முறித்துவிட்டு நல்லதின் பக்கமே விரையக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் ஒரு சத்தியத்தைச் செய்து (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று சொன்னார்கள்.