11) குர்ஆன், சுன்னா வழியா? அல்லது முஃதஸிலாக்களின் வழியா?
11) குர்ஆன், சுன்னா வழியா? அல்லது முஃதஸிலாக்களின் வழியா?
ஒரு செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பினும் அது ஆதாரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத செய்தி என்ற எமது நிலை வழிகெட்ட பிரிவினர்களுள் ஒரு பிரிவான முஃதஸிலாக்கள் கடைப்பிடித்த வழிமுறை என்று நமக்கு மாற்றுக் கருத்திலிருப்பவர்கள் பிரச்சாரம் செய்வதை பார்த்து வருகிறோம். முஃதஸிலாக்கள் கடைப்பிடித்ததால் இதை நாம் கடைப்பிடிக்கவில்லை.
மாறாக, இந்த வழிமுறைக்கு குர்ஆனிலும் நபிமொழியிலும் தக்க ஆதாரம் இருப்பதால்தான் கடைப்பிடிக்கிறோம் என்பதை தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ இன்னுமொரு அமைப்பின் வழியில் செல்கிறது என்று விமர்சிப்பதாக இருந்தால் குறிப்பிட்ட அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
ஒருவர் தரீக்கா கொள்கையுடையவர் என்று விமர்சிப்பதாக இருந்தால் தரீக்காவாதிகளின் அடிப்படைக் கொள்கையை அவர் ஆதரிப்பவராக இருக்க வேண்டும். தர்கா வழிபாடு, தகடு, தட்டு, தாயத்து, தர்கா, கந்தூரி உள்ளிட்ட அனைத்து இணைவைப்பான காரியங்கள் அனைத்தையும் ஆதரிக்கக்கூடிய நபரை தரீக்காவாதி, வழிகெட்டவர் என்று சொல்லலாம்.
ஆனால் இதில் எதையும் ஆதரிக்காமல் அல்லாஹ் ஒருவன் என்று நம்புபவரை குறித்து அவர் தரீக்காவை சேர்ந்தவர் என்றால் அது தவறான போக்காகும். இன்று தவ்ஹீத் ஜமாஅத், முஃதஸிலாக்களின் வழியில் செல்வதாக விமர்சிப்பதாக இருந்தால் முஃதஸிலாக்களின் கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
எனவே முஃதஸிலாக்கள் என்பவர்களது கொள்கை என்ன என்பதையும் அந்த கொள்கைகளை நாம் பின்பற்றுகிறோமா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
முஃதஸிலாக்களின் கொள்கைகள்.
- அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்பதை தலைகீழாகப் புரிந்து கொண்டு அவனது உருவம் குறித்து வரும் வசனங்களுக்கு வியாக்கியானம் கொடுத்து அது குறித்த நபிமொழிகளை மறுத்து அவனது பண்புகளை மறுத்தல்.
- அல்லாஹ் அநீதி இழைக்கமாட்டான் என்று கூறி விதியை மறுத்தல்.
- பெரும் பாவம் செய்தவன் முஸ்லிமும் இல்லாமல், காபிரும் இல்லாமல் இரண்டுக்கு மத்தியில் ஒரு நிலையிலிருக்கிறான் என்று வாதிடல்.
- நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்ற பெயரில் அநியாய ஆட்சிக்காரனை எதிர்த்து புரட்சி செய்தல்.
- அல்லாஹ் வாக்குமீறமாட்டான் என்ற பெயரில் பெரும்பாவம் செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று கூறல்.
இவைதான் முஃதஸிலாக்களின் அடிப்படை என்று பல நூற்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் வழிகேடு என்றும் இதில் ஒன்று கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல என்றும் தெரிந்து கொண்டே, இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் நம்மையே முஃதஸிலாக்கள் வழியில் செல்கின்றனர் என்று விமர்சிப்பது விந்தையிலும் விந்தை.
ஒரு வாதத்துக்கு இது முஃதஸிலாக்கள் கடைப்பிடித்த வழிமுறை என்று வைத்துக் கொண்டாலும் அது ஏகத்துவவாதிக்கு எந்தத் தயக்கத்தையும் ஏற்படுத்தாது. அந்த வழிமுறை குர்ஆனிலும், நபி வழியிலும் காணப்பட்டால் அது சரியான வழிமுறைதான். முஃதஸிலாக்கள் கடைப்பிடித்தார்கள் என்பதற்காக அதை வழிகேடு என்று முடிவு செய்யலாமா?
அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஆ என்ற பெயர் தாங்கிய பிரிவினர் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டனர் என்பதற்காக அதை சரியான கருத்து என்று முடிவு செய்வதா? ஒன்றைச் சரி என்றும், ஒன்றை தவறு என்றும் பிரித்துப்பார்த்து அறிந்து கொள்வதற்கான அளவு கோல் என்ன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அந்தக் கருத்தை கவனித்து அந்தக் கருத்து குர்ஆனுக்கு உடன்பாடான கருத்தா? ஹதீஸூக்கு உடன்பாடான கருத்தா என்று கவனிப்பதா? அல்லது இந்தக் கருத்தைச் சொன்னவர் யார் என்று கவனித்து அந்த கருத்து சரி, அல்லது தவறு என்று முடிவு செய்வதா? எந்த வழிமுறை சரியான வழிமுறை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன் “உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். இறுதியில் அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள்.
(அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) “அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
இந்த ஹதீஸில் ஒரு மனிதன் கெட்டவனாக இருந்தாலும் அவன் சொன்னது உண்மை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் கெட்டவனாக, வழிகேடனாக இருந்தாலும் அவன் சொல்லும் செய்தி குர்ஆனில் இருந்தால் அல்லது நபி மொழிகளில் இருந்தால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு மனிதன் வழிகெட்டவனாக இருப்பதால் அவன் சொல்லும் எதையும் ஏற்கமாட்டேன் என்றும் ஒரு மனிதர் நேர்வழி பெற்றவர் என்று அடையாளம் காணப்பட்டால் அவர் சொல்வது அனைத்தும் சரி என்றும் நம்புவது வழிகேடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இமாம் புகாரி வழிகேடரா?
ஒருவர் வழிகேடராக இருப்பதால் அவர் நூறு வீதம் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்ற கருத்து தவறு என்ற சரியான நிலைப்பாட்டில் இமாம் புகாரி அவர்கள் இருந்ததால்தான் ஸஹீஹுல் புகாரி என்ற அவரது கிரந்தத்தில் ஷீயாக்கள், முர்ஜியாக்கள் போன்ற பல வழிகெட்டவர்களின் அறிவிப்பைக்கூட பதிவு செய்திருக்கிறார்கள். எனவே அத்தகைய நபிமொழிகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிக்க இந்த அதிமேதாவிகள் தயாரா?
இந்த உலகில் வாழ்ந்து மறைந்த எந்த அறிஞராக இருந்தாலும் அவரிடம் சில தவறுகள் இருக்கும். இதனால் அவர்கள் வழிகேடர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். நேர்வழியில் உள்ளவர்கள் என்று கருதப்படும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் என அழைக்கப்படும் எத்தனையோ இமாம்களிடம் பல தவறான கொள்கைகள் இருந்துள்ளன. இதனால் அவர்களை யாரும் வழிகேடர்கள் என்று முத்திரை குத்தவில்லை.
மத்ஹபைப் பின்பற்றுவது வழிகேடு! அதைப் பின்பற்றுபவர்கள் வழிகேடர்கள் என்று நாமும், நம்மை முஃதஸிலாக்கள் என்று விமர்சிக்கும் மற்ற அறிஞர்களும் கடுமையாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், நாம் அனைவரும் நல்ல அறிஞர்கள் என்று ஏற்றிருக்கும் பல முன்னைய அறிஞர்கள் மத்ஹப்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ, இமாம் நவவீ போன்றோர்கள் ஷாஃபீ மத்ஹபைப் பின்பற்றியோர் என்பது உலகறிந்த உண்மை!
இன்று நம்மை முஃதஸிலாக்கள் என்று விமர்சிக்கும் யாரும் அவர்களை வழிகேடர்கள் என்று புறக்கணிக்காமல் அவர்களது கூற்றை ஆதாரமாகக் காட்டுவதைப் பார்க்கிறோம். ஏன் இந்த இரட்டை நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்? அவர்களுக்கு ஒரு நீதி, நமக்கு ஒரு நீதி என்று ஏன் பாரபட்சம் காட்டுகிறார்கள்? குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை மறுக்க வேண்டும் என்பதை முஃதஸிலாக்கள் கடைப்பிடித்தார்கள்.
எனவே அதை நாமும் கடைப்பிடிப்பதால் நம்மையும் முஃதஸிலாக்கள் என்று கூறுபவர்கள், அந்த முஃதஸிலாக்களின் வழிகெட்ட அடிப்படை கொள்கைகளில் சிலவற்றை தங்கள் கொள்கையாக கொண்ட சுன்னத் வல் ஜமாஅத் என்று அறியப்பட்ட சில அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் முஃதஸிலாக்கள் என்று இவர்கள் விமர்சிப்பார்களா?
அல்லாஹ்வின் உருவம் குறித்து வரும் வசனங்களையும், நபிமொழிகளையும் இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமாக வராதவரை எந்தவித மாற்று விளக்கமும் கொடுக்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்பதுதான் சரியான நடைமுறை. அல்லாஹ்வின் உருவம் குறித்து வரும் அத்தனை செய்திகளுக்கும் வியாக்கியானம் கொடுப்பது முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கை! ஆனால் இந்த வழிமுறையை பல அறிஞர்கள் கையாண்டு இருக்கிறார்கள்.
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ
அல்லாஹ் இரவின் கடைசிப்பகுதியில் முதல் வானத்துக்கு இறங்கி வருகிறான் என்பதை மறுத்து அதை அப்படியே நம்பவது இணை கற்பிக்கும் செயல் என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார். இவரை முஃதஸிலாக்கள் வழியில் சென்றவர் என்றோ அல்லது முஃதஸிலாக்களின் சிந்தனையில் பாதிக்கப்பட்டவர் என்றோ இவர்கள் கூறுவார்களா?
அல்லாஹ்வின் கை என்பதை அப்படியே புரிந்து கொள்ளக்கூடாது என்ற கருத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார். இப்போது இவரையும் அந்த அஹ்லுஸ்ஸ_ன்னா அறிஞர்களையும் முஃதஸிலாக்கள் வழியில் சென்றவர் என்றோ அல்லது முஃதஸிலாக்களின் சிந்தனையில் பாதிக்கப்பட்டவர் என்றோ இவர்கள் கூறுவார்களா?
இவ்வாறு அல்லாஹ்வின் உருவம் குறித்து வரக்கூடிய இடங்களில் அதற்கு வியாக்கியானம் கொடுக்கும் முஃதஸிலாக்களின் கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். எனவே இவரையும் இனி முஃதஸிலா என்று பிரச்சாரம் செய்ய இவர்கள் தயாரா?
இமாம் இஸ்மாயீலீ
மறுமைநாளில் அல்லாஹ் தனது கெண்டைக்காலைத் திறப்பான் என்ற வசனத்துக்கு அப்துர் ரஸ்ஸாக், ஹாகிம், கத்தாபீ, இஸ்மாயீலீ உள்ளிட்டோர் அனைவரும் வெவ்வேறு வியாக்கியானம் கொடுத்து இருப்பதாக இப்னு ஹஜர் எடுத்துக்காட்டுகிறார். எனவே இவர்களையும் முஃதஸிலா பட்டியலில் சேர்ப்பார்களா இந்த நவீன வரலாற்று ஆய்வாளர்கள்?
இமாம் இப்னு குஸைமா
ஸஹீஹ் இப்னு குஸைமா என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்த இமாம் இப்னு குஸைமா அவர்கள் அல்லாஹ்வின் உருவம் குறித்து வரக்கூடிய நபிமொழிகளுக்கு வியாக்கியானம் கொடுத்தவர் என்று இமாம் தஹபீ கூறுகிறார். எனவே இவரையும் முஃதஸிலா என்று கூறி இவரது நபிமொழி தொகுப்பை நிராகரித்துவிடுவார்களா?
இமாம் நஸாயீ
ஸிஹாஹுஸ் ஸித்தா என்று அழைக்கப்படும் பிரபல நபிமொழி தொகுப்புகளில் ஒன்றான சுனனுன் நஸாயீ என்ற நூலைத் தொகுத்த, ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் முதஷத்ததித் (கடும்போக்குடையவர்) என்று பெயர் பெற்ற இமாம் நஸாயீ அவர்கள் ஷீயாக் கொள்கையில் தாக்கமுற்றவர் என்று இமாம் தஹபீ எடுத்துக்காட்டுகிறார். எனவே இமாம் நஸாயீ ஷீயா என்று கூறி அவரது நபிமொழி தொகுப்பை எரித்துவிட இவர்கள் முன்வருவார்களா?
இமாம் இப்னு தைமிய்யா
(தகாயிகுத் தஃப்ஸீர் பாகம் : 2 பக்கம் : 137)
ஜின்கள் மனிதனுக்குக் கட்டுப்பட்டு அவன் கேட்பதையெல்லாம் செய்யும் என்றும், மனிதனுக்கும் ஜின்னுக்கும் இடையில் பாலியல் தொடர்பு கூட காணப்படும் என்றெல்லாம் இமாம் இப்னு தைமிய்யா எழுதி வைத்திருக்கிறாரே, இதற்கு குர்ஆனிலோ அல்லது நபிமொழிகளிலோ எந்த ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? சலபுகளின் வழி நேர்வழி, அவர்கள் சொல்வதுதான் சரியான வழி! என்று, குருட்டுத்தனமாக மக்களை வழிகெடுக்கும் சலபு அறிஞர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
இவையெல்லாம் சிறிய உதாரணங்கள் மட்டும்தான். இது போன்று அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஆ அறிஞர்கள் என்றும் சலபுகள் என்றும் கருதப்படும் பல அறிஞர்களிடம் பல வழிகேடான கருத்துகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் அங்கீகரித்து விடலாமா? எனவே, ஒரு கருத்து சத்தியம் என்றும் இன்னுமொரு கருத்து அசத்தியம் என்றும் அமைப்பின் பெயரையோ, அதைச் சொல்லும் நபரையோ கருத்திற்கொண்டு முடிவு செய்வது வழிகேடான அளவுகோலாகும்.
ஒரு கருத்து குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் உடன்பட்டு நிற்குமானால் அதை எவ்வளவு பெரிய வழிகேடன் சொன்னாலும், ஷைத்தான் சொன்னாலும் அதை ஏற்பதுதான் ஒரு முஃமின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை என்பதை முதலில் நன்கு ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று நம்மை முஃதஸிலா என்று விமர்சிப்பவர்கள், இது போன்று முன்னைய அறிஞர்களை மட்டும் விமர்சிக்காமல் அவர்களைப் பாராட்டுவது அவர்கள் கூற்றில் உண்மையாளர்கள் இல்லை என்பதையும் நம்மீது உள்ள அளவு கடந்த காழ்ப்புணர்வினால்தான் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள் என்பதையும் மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
தவ்ஹீதா? தக்லீதா?
இமாம்களைப் பின்பற்றுவது வழிகேடு என்று ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்தவர்கள் தற்போது இந்த கருத்தை எந்த இமாம் சொல்லியிருக்கிறார் என்று இமாம்களின் பட்டியலைக் கேட்டு நிற்பதைப் பார்க்கிறோம். எனவே, உண்மையில் இவர்கள்தான் தடம்புரண்டு வழிகேட்டின் அதள பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களே நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.
நாம் சொல்லும் இந்த விதியை எந்த இமாம் சொல்லாவிட்டாலும் நாம் சொல்வது குர்ஆன் ஹதீஸிலுள்ளது எனவே இந்த வழிமுறை சரியான வழிமுறைதான். இருப்பினும் குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்தச் செய்தி மறுக்கப்பட வேண்டியது என்ற நிலையை நமக்கு முன் வாழ்ந்த பல நல்ல அறிஞர்களும், நபித்தோழர்களும் நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள் என்பதை தகவலுக்காக எடுத்துக் காட்டுகிறோம்.