11) ஜிஸ்யா வரி

நூல்கள்: குற்றச்சாட்டுகளும் பதில்களும்

பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும்.

”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம்.

இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும்.

ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார்.

”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்”

என்று குர்ஆன் கூறுகிறது.

எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.