10) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-10
10) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-10
நபிமொழி-46
சகோதரத்துவம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம்தான் செய்திகளிலேயே மிகவும் பொய்யானது. துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள். தன் சகோதரன் மணந்து கொள்ளவோ விட்டு விடவோ செய்யும் வரை அவன் பேசும் பெண்ணை மற்றவர் பெண் பேசக் கூடாது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நபிமொழி-47
மரணத்திற்கு நிகரானவர்கள்
நபி (ஸல்) அவர்கள், “பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள் அப்போது அன்சாரிகளில் ஒருவர். “அல்லாஹ்வின் தூதரே கணவருடைய உறவினர்களைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நபிமொழி-47
இறை நம்பிக்கையாளர் அஞ்சுவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமை திட்டுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது இறைமறுப்பாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நபிமொழி-48
நளினமாக நடந்துகொள்ளுதல்
நிதானம் காட்டு! நளினமாக நடந்துகொள் கடுமையாக நடப்பதை விட்டும் அருவருப்பாகப் பேசுவதை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிமொழி-49
இரட்டை முகம் கொண்டவன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் மிகவும் கெட்டவன், இரண்டு முகம் கொண்டவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும், அவர்களிடம் செல்லும் போது வேறு முகத்துடனும் செல்கிறான்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5076),(புகாரி: 779)
நபிமொழி-50
அல்லாஹ்விடமிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது
உங்களது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் எனும் (26:214) வசனம் அருளப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குறைஷிக் கூட்டத்தாரே! உங்கள் உயிர்களை (முஸ்லிம்களாகி) அல்லாஹ்விடம் வாங்கிக் கொள்ளுங்கள். என்னால் அல்லாஹ்விடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது.
அப்துல் முத்தலிபின் மக்களே! என்னால் அல்லாஹ்விடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! என்னால் அல்லாஹ்விடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே என்னால் அல்லாஹ்விடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமாவே என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் என்னால் அல்லாஹ்விடமிருந்து உன்னை காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)